வாஸ்து விதிவிலக்கிற்கு பரிகாரங்கள்!

வாஸ்து விதிவிலக்கிற்கு பரிகாரங்கள்!

வாஸ்து விதிகளின்படி கட்டப்பட்டுள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்குத் தான் சிறப்பான பலன்கள் உண்டாகுமென்பது நடைமுறை உண்மையாகும். அதே சமயம் வாஸ்து விதிவிலக்குகளையும் கட்டுமானப் பணிகளுக்காக நம் முன்னோர்கள் வகுத்துச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். சிலர் இடப்பற்றாக்குறை பொருளாதாரப் பற்றாக் குறை வசதிப் பற்றாக்குறை வாஸ்து பற்றிய அறியாமை போன்ற காரணங்களால் வாஸ்து விதிக்கு உட்படாத வகையில் கட்டடங்களை எழுப்பி விடுகின்றனர்.

அப்படி வாஸ்து விதிகளுக்கு மாறாக உருவாகும் வீடு. கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெறும் காலகட்டத்திலேயே புதுப்புதுப் பிரச்சினைகளைச் சந்தித்து கட்டுமானத் தொழிலாளர்கள் பிரச்சினை. கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம். இயற்கைச் சீற்றம் போன்றவை மூலமும்  பாதிக்கப்பட்டு, சுவர்கள் வளைந்து நெளிந்தும் அமையும் தளப் பகுதிகளும் வாஸ்து விதிப்ப்டி சரியாக அமையாமல் குண்டும் குழியுமாக அமைந்துவிடுவதும் உண்டு.
 
எத்தனையோ பிரச்சினைகளைத் தாண்டி கட்டுமானப் பணிகளை முடித்து வீட்டில் குடியேறினால் அங்கு வாழ்பவர்களுக்கு எதிர்பாராத பிரச்சினைகள் கஷ்டங்கள், இழப்புகள் ஏற்படும். அப்போது தான் அவர்கள் நினைத்துப் பார்ப்பார்கள்.  இதற்குமுன் இருந்த வீட்டில் வாழும் போது அவ்வளவு முன்னேற்றத்துடன் சந்தோஷமாக வாழ்ந்தோம். அதற்கடுத்து ஒரு வீட்டில் வாழும் போதும் எவ்வளவோ சந்தோஷத்துடன் இருந்தோம். இதோ இந்த வீட்டில் வாழும் போது ஏன்தான் இப்படி அடுக்கடுக்காகத் தொடர் பிரச்சினைகள் ஏற்படுகிறது என்று யோசித்து யோசித்து, என்ன காரணம், ஏது காரணம் என்று பார்க்கும் போது, ஆஹா! வாஸ்து பிரச்சனைதான் காரணமென்று முடிவுக்கு வருவார்கள்.
 
பொருளாதார வசதி படைத்தவர்கள் அப்படித் தாங்கள் கட்டிய வீட்டில் கட்டடங்களில் வாஸ்து குறையுள்ள அறைகளை சுவர்களை மாற்றியமைத்து வாஸ்து யோகம் உள்ள வீடாக மாற்றி அமைத்து அமோகமாக வாழ்வார்கள்.
 
ஆனால் ஏகப்பட்ட இன்னல்களுக்கிடையே சிரமப்பட்டு கட்டுமானப் பணிகளைப் முடித்து குடியேறியவர்கள் மீண்டும் பெரிய அளவில் பொருளாதார முதலீடு செய்து வீட்டை முற்றிலும் மாற்றி அமைப்பது என்பது முடியாத காரியமாகும்.
 
அப்படி பொருளாதாரம், இட வசதியின்மை போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் மாட்டிக் கொண்டவர்களுக்கு வாஸ்து சாஸ்திரத்தில் விதிவிலக்குகளின்படி வாஸ்து பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன. அதைப் பின்பற்றினால் வாஸ்து தோஷம் நீங்கி ஓரளவு வாஸ்து யோகம் ஏற்படும்.
 
இனி சில வீடு, கட்டட அமைப்புகளுக்கேற்ற வாஸ்து பரிகாரங்களைப் பார்ப்போம்.
 
கிழக்கு மத்தியப் பகுதியில் பிரதான நுழைவாயில் இருந்து அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமின்மை. திருப்தியில்லாமை, வளர்ச்சியின்மை, மன அமைதியின்மை போன்ற பல்வேறு பலவீனமான பலன்கள் இருந்தால், அவர்கள் தினசரி சூரிய பகவானை வணங்கிவர வேண்டும். சூரிய நமஸ்காரம் சூரியோதய வழிபாடு நவகிரகத்தில் உள்ள சூரியனை வழிபடுதல், தனிச் சந்நிதிகளில் உள்ள சூரியனை வழிபடுதல், ஓவியத்தில் புகைப்படத்திலுள்ள சூரியமூர்த்தியை வழிபடுதல், சூரிய காயத்ரியை ஓதுதல், சூரியாஷ்டகம் முதலான சூரியன் சம்பந்தப்பட்ட மந்திரங்களை பாடல்களைப் படித்தல் போன்றவற்றைச் செய்ய வேண்டும்.
 
ஒவ்வொரு நாளும் காலையில் சூரியோதய நேரத்தில் எழுந்தவுடன் உடல், மனம் சுத்தமான பின்பு, தண்ணீரில் குங்குமத்தையும் சர்க்கரையையும் கலந்து அர்க்யம் விட வேண்டும்.
 
அர்க்யம் என்றால் இரு உள்ளங்கைகளிலும் நீரை அள்ளி, அதை மெதுவாகக் கீழ்நோக்கி விடுவதாகும். அர்க்ய நீர் விடும் இடம் காலடி படாத இடமாக இருக்க வேண்டும்.
 
தென்கிழக்குத் திசையில் பிரதான நுழைவாயில் இருந்தால் நுழைவாயிலை ஒட்டிய வீட்டின் உட்பகுதியில் பூந்தொட்டிகள் வைக்க வேண்டும். வடகிழக்கு மூலையில் உள்ள வடக்குச் சுவரில் கண்ணாடி பதித்து மாட்ட வேண்டும். அது பிம்பத்தை வெளிப்படுத்தக்கூடிய கண்ணாடியாக இருக்க வேண்டும்.
 
தென்கிழக்கு மூலை நுழைவாயிலை ஒட்டிய வீட்டின் உள்பகுதியில் பூஜிக்கப்பட்ட சூரிய யந்திரம், வாஸ்து யந்திரங்களைப் பதிக்க வேண்டும். இவ்வீட்டில் வசிக்கும் ஆண்கள் செவ்வாய்க் கிழமை தோறும் முருகப் பெருமானை வணங்கி வர வேண்டும். வீட்டின் பூஜையறையில் உள்ள முருகன் படம் அல்லது முருகன் கோவில்களில் சிவப்பு நிறப் பூமாலை சாற்றியும் தீபமேற்றியும் வழிபட்டு வர வேண்டும்.
 
வடகிழக்கு மூலை சார்ந்த பகுதியில் பிரதான நுழைவாயில் இருந்தால் சூரிய வழிபாடு செய்ய வேண்டும் குலதெய்வ வழிபாடு செய்து வர வேண்டும். வீட்டின் உள்பகுதி இருள் சூழ்ந்த நிலையில் இல்லாமல் எப்போதும் வெளிச்சமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
 
வீட்டின் சுவர்களுக்கும் கருப்பு, கருப்பு சார்ந்த மற்றும் மங்கலான நிறங்கள் பூசுவதைத் தவிர்த்து, பளீரென்று ஒளிரக்கூடிய வண்ணங்களைத் தேர்ந்தெடுத்துப் பூச வேண்டும்.
 
கிழக்கு மத்தியப் பகுதியில் தண்ணீர்த் தொட்டி இருந்தால் சூரியன், துர்க்கையை வணங்க வேண்டும்.
 
கிழக்குப் பகுதியில் நுழைவாயில் இருந்து தென்மேற்கு மூலைப்பகுதியில் தண்ணீர்த் தொட்டி, கிணறு, பள்ளம் போன்றவை இருந்தால் அங்கு வசிப்பவர்களுக்கு நீரிழிவு வயிறு சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு மருத்துவச் செலவு உண்டாகும். இதைத் தவிர்ப்பதற்கு தண்ணீர்தொட்டி, கிணறு பள்ளத்தை மூடிவிட வேண்டும். மூட வேண்டும் என்றால் ஏதோ பலகையையோ கல்லையோ வைத்து மேலே மட்டும் மூடிவிட்டு உள்ளே வெற்றிடமாக விட்டு விடுவது அல்ல. உள்பகுதி வெற்றிடமாக இல்லாமல் முழுவதும் மணல் போட்டு நிரப்ப வேண்டும். இதுதான் இதற்குச் சிறந்த பரிகாரம். மற்றபடி இதற்கென்று வழிபாடுகள் செய்தால் நடைமுறையில் பயன்தருவதில்லை.
 
கிழக்குப் பகுதியில் நுழைவாயில் இருந்து, வாயிலை ஒட்டி அல்லது வாயிலின் அருகில் தெற்கு வடக்காகப் பெரிய நீச்சல்குளம் இருந்தால், தண்ணீர்க் குடங்கள் நிறைய இருந்தால் வீட்டின் பெண்மணிக்கு ஃபிட்ஸ், மண்டைக் காய்ச்சல் தலைசுற்றல், தலைப்பித்தம் போன்ற வியாதிகள் உண்டாகும். இத்தகைய பலவீனப் பலன்களைத் தவிர்க்க நீச்சல் குளத்தின் அளவைப் பாதியாகக் குறைத்து, வடகிழக்கு மூலையில் மட்டும் நீச்சல்குளம் அமையுமாறு வடிவமைக்க வேண்டும். தண்ணீர்க் குடங்களையும் வடகிழக்கு மூலையில் இருக்குமாறு வைக்க வேண்டும்.
 
கிழக்குப் பகுதியில் நுழைவாயில் இருந்து, வடகிழக்கு மூலைப் பகுதியில் சமையலறை இருந்தால் அந்த வீட்டின் ஆண்கள் அந்த வீட்டில் தங்க மாட்டார்கள். பல்வேறு காரண-காரியங்களால் பெரும்பாலும் வெளியே வசிக்க நேரிடும்.
 
வடகிழக்கு மூலை என்பது வாஸ்துவில் ஈசான்யம் எனப்படும் ஈசான்யம் சிவபெருமானின் ஆதிக்கத்துக்குட்பட்ட பகுதியாகும். இதனால் ஈசான்யத்தில் சமையலறை அமைக்கக்கூடாது. இந்த வாஸ்து விதியைக் கடைப்பிடிப்பவர்களுக்கு வாஸ்து யோகம் உண்டாகும். மாறாக இடம், வசதிப் பற்றாக்குறை காரணமாக ஈசான்யத்தில்தான் சமையலறை இருந்தாக வேண்டுமென்றால், சமையலறையில் மேற்குச் சுவரில் பெரிய கண்ணாடி பதிக்க வேண்டும். இந்த பரிகார முறை நாற்பது சதவிகித அளவுதான் நற்பலன் தரும், நூறு சதவிகிதம் நற்பலனைப் பெறுவதற்கு சமையலறையை மாற்றி அமைத்துக் கொள்வதே சிறப்பாகும்.
 
கிழக்குப் பகுதியில் நுழைவாயில் இருந்து, தென்மேற்கு மூலைப்பகுதியில் சலையலறை இருந்தால் சமையலறையை அவ்விடத்திலிருந்து கண்டிப்பாக மாற்ற வேண்டும் இதற்கென்று நடைமுறையில் பலன் தரும் பரிகாரம் எதவுமில்லை.
 
கிழக்குப் பார்த்த வாயில் உள்ள வீட்டிற்கு தெற்கு வடக்கு என இருபுறங்களிலும் மிகப் பெரிய உயரமான கட்டடங்கள், வீடுகள், இருந்தால் குள்ளமாக உள்ள வீட்டில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த நற்பலன்கள் நடைமுறைக்கு வருவதில்லை. அங்கு இருப்பவர்களுக்கு எதிர்பாராத சிக்கல்களும் முன்னேற்றம் தடைகளும் வந்து கொண்டேயிருக்கும். இது போன்ற அமைப்பில் உள்ள கட்டடங்களை உயரமாக மாற்றி அமைத்துக் கொள்வது சிறந்தது.
 
கிழக்குப் பார்த்த வாயிலில் உள்ள வீட்டின் வடகிழக்கு மூலை உள்பக்கமாக வளைந்திருந்தால் குறுகியிருந்தால் அவ்வீட்டில் புத்திர பாக்கியம் இருக்காது. குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டி வரும். நற்பலன்கள் நடப்பதற்காக வடகிழக்குச் சுவரின் உள்பக்கம் கண்ணாடி பதித்து மாட்ட வேண்டும். ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க வேண்டும். சிவபெருமானுக்கு சிவப்புப் பூ பச்சரிசியால் அபிசேகம் செய்ய வேண்டும். வடக்குச் சுவரில் வெண்ணெயைக் கையில் வைத்திருக்கும் பாலகிருஷ்ணர் படத்தையும் மாட்டி வழிபட வேண்டும்.
 
வாஸ்து விதிப்படிக் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கென்று எந்தவிதப் பரிகாரமும் தேவையில்லை. வாஸ்து விதிவிலக்குகளின் படி கட்டப்பட்டுள்ள வீடுகளுக்குத் தான் “வாஸ்து பரிகாரம்” செய்து கொள்ள முடியும். முற்றிலும் வாஸ்து விதிகளையும் வாஸ்து விதிவிலக்குகளையும் புறக்கணித்து மாறாகக் கட்டப்படும் வீடு, கட்டடங்களுக்கு என்று செய்யப்படும். பரிகாரங்களில் சில நடைமுறையில் பயன் தருவதில்லை என்பதையும் அறியவும்.
 
எனவே முற்றிலும் வாஸ்துவுக்கு மாறாகக் கட்டப்பட்டுள்ள வீடுகளை கட்டடங்களை வாஸ்து விதிக்குட்பட்டோ, வாஸ்து விதி விலக்குக்கு உட்பட்டோ மாற்றி அமைத்து, வாஸ்து பரிகாரம் செய்தால் முன்னேற்றப் பலன்களை அனுபவிக்கலாம்.
 
- மகேஷ் வர்மா