திருச்செந்தூரில் இன்று தேரோட்டம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், வெள்ளிக்கிழமை (மார்ச் 10) நடைபெறுகிறது. இதையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
திருச்செந்தூர் கோயில் மாசித் திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏழாம் திருவிழாவை முன்னிட்டு, கடந்த செவ்வாய்க்கிழமை சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தியும், 8ஆம் திருவிழாவான புதன்கிழமை காலையில் வெள்ளை சாத்தியும், மாலையில் பச்சை சாத்தியும் சப்பரத்தில் எழுந்தருளினார்.
ஒன்பதாம் திருநாளான வியாழக்கிழமை காலையில் சுவாமி குமரவிடங்கப்பெருமான், சுவாமி அலைவாயுகந்த பெருமான் தனித் தனி வெள்ளிக் குதிரையில் எழுந்தருளி வீதி உலா வந்து, திருநெல்வேலி சாலையில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்திய பின், மேலக்கோயில் சேர்ந்தனர். பகலில் பல்லக்கிலும், இரவு சுவாமி தங்கக் கைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.
தேரோட்டம்:
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. காலை 6.30 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்குகிறது. முதலில் பிள்ளையார் ரதம், தொடர்ந்து சுவாமி தேர், அம்மன் தேர் திருவீதி வலம் வந்து நிலையை அடையும். தேரோட்டத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வியாழக்கிழமை மாலையிலே திருச்செந்தூரில் குவியத் தொடங்கினர்.
பக்தர்கள் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருச்செந்தூரில் காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.