எளியமுறை குண்டலினி யோகம் - 2
உடற் கருவிகளின் சிறப்பாலும் அறிவின் சிறப்பாலும் இயற்கை வளங்களை வாழ்வின் வளங்களாக விருப்பம்போல மாற்றி அமைத்து துய்த்து மனிதன் வாழ்கிறான். தன் செயல் திறனிலும் புலன் கவர்ச்சியிலும் முழுவதும் ஈடுபட்டு, தன் உயிர் சிறப்பும் உயிரின் மூலச் சிறப்பும் மறந்து விடுகிறான். இதனால் அறிவு குறுகிய நோக்கில் செயல்படுகிறது பேராற்றல் பெற்ற இயற்கையே எல்லாமாகி தானுமாகி இன்ப துன்ப உணர்ச்சிகளால் எல்லைகட்டப் பெற்று இயங்கும் பேருண்மையை மறந்து தான் ஏதோ தனித்த பொருளாக இயங்குவதாகக் கருதி மயங்கி வாழ்கிறான்.
இத்தகைய புலன் மயக்க மறதியில் செயல் புரியும் ஆர்வமாக எழும் உயிர் விரைவு, பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் ஆறு மன உணர்ச்சி எண்ணங்களாக எழுகின்றன. பெரும்பாலும் மக்கள் இவ்வுணர்ச்சி மனோ நிலைகளில்தான் எண்ணம், சொல், செயல், இவற்றை ஆற்றுகின்றார்கள். இதன் விளைவாகத் தனக்கும் பிறர்க்கும் துன்பத்தைப் பெற்றும் அளித்தும் வாழ்கின்றனர்.
இயற்கை நியதியை உணர்ந்து பிறர் தேவைக்கும் விருப்பத்திற்கும் மதிப்பளித்து முறையோடும் அளவோடும் ஆற்றும் செயல்களே நற்கர்மங்கள். இவற்றால் எல்லோரும் இன்பம் காத்து வாழலாம். இயற்கை நியதியை மறந்தும் மதியாமலும், சமுதாய மக்கள் கருத்தையும் நலனையும் மறந்தும் மறதியாலும் ஆற்றும் செயல்கள் எல்லாம் தீய வினைகளாகும்.
ஒரு மனிதன் தன்னைப் பழக்கிக் கொள்ளும்வாறு தேவைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப நல்வினையோ தீவினையோ அவனிடம் தோன்றிக் கொண்டேயிருக்கும்.
எந்த செயலும் புலன்கள் உறுப்புகள் இவற்றில் இயக்கப் பதிவாக அமையும். எண்ணப் பதிவாக அமையும். வித்து அணுக்களில் பரம்பரைத் தரபதிவாக அமையும். இம்மூன்று பதிவுகளும் சேர்ந்து உயிரணுக்களில் பாரிணாமச் சிறப்பாற்றலாக அமையும். இவ்வாறு மனிதன் பெறும் பதிவுகளே வினைப்பதிவுகளாகும் (Impressions Of Deeds).
இன்று உலகெங்கும் மனிதகுல வாழ்வில் அமைதி குலைந்து காணப்படுகிறது. பிணக்கும், பகையும், போட்டியும், போரும் வாழ்வில் துன்பங்களை மலியச் செய்து வருகின்றன. இவற்றிற்குக் காரணம் மனிதனேயாகும். தீவினைப் பதிவுகளால் தரக்குறைவாகத் தன்னை மாற்றிக் கொண்டான். அறிவைப் புலன் கவர்ச்சியில் மயங்க வைத்துக் கொண்டு நினைவில் குறுகி நிற்கின்றான். தனக'கு மூலமான பேராதார நிலையை மறந்து விட்டான். இவையே துன்பங்கட்குக் காரணமாகும்.
உலகில் அமைதி நிலவவேண்டுமெனில், மனித குலம் இனிமை காத்து வாழ வேண்டுமெனில், தீய செயல் பதிவுகளை மாற்றி நற்செயல் பதிவுகளுக்குப் பழகிக் கொள்ளவேண்டும். தவறு புரிந்து ஏற்றுக் கொண்ட, உயிரணுக்களில் பதிவாகியிருக்கும், தீவினைப் பதிவுகளைப் (Impressions Of Sins) போக்கித் தூய்மைபெற வேண்டும். தனது உயிர் மூலம் அறிந்து அறிவில் தெளிவும் முழுமையும் பெற அறிவை ஒடுக்கி உள் நோக்கிப் பயில வேண்டும். இத்தகைய செயல்கள் மூலம் உயிருக்குக்காப்பு, தூய்மை, ஓய்வு என்ற மூன்றும் கிடைக்கும். இவற்றிற்கான பயிற்சி முறைதான் நோன்பு என்றும் தவம் என்றும் கூறப்படுகின்றது.
இத்தகைய நோன்பு முறையை நமது முன்னோர்கள் இருவகையாகப் பிரித்தார்கள். அவற்றில் ஒன்று பக்தி நெறி மற்றொன்று ஞானநெறி. குழந்தை வயதுடையவர்களும் அறிவின் நுண்மை இல்லாதவர்களும் தெய்வ நிலையைக் கூர்ந்துணர்ந்து அதில் நிலைத்துப் பயில முடியாது. ஆகவே அவர்களுக்கு தெய்வ நிலையின் பெருமைய விளக்கி அதன் இருப்பு நிலையல் நம்பிக்கை வைத்து வணங்கவும், சமுதாய நலன் கெடாத வகையில் தனது இனிமை காக்கும் செயல்களையே புரிந்து வாழும் எண்ணம், சொல், செயல், பயிற்சிகளையும் வகுத்தார்கள். இதுவே பக்தி நெறியாகும்.
தெய்வ நிலையினைக் கூர்ந்துணரும் அறிவுடையோர்கள் முதலில் தனது உயிர் நிலையை உணரவும், பின் உயிரியக்க விரைவைப் படிப்படியாகக் குறைத்து நிலைத்து நின்று பரமாகி நிற்கவும் ஏற்ற தவ முறையே வகுத்தார்கள். இதன் மூலம் ஒரு மனிதன் தனது அறிவைப் பற்றி, உயிர் மூலத்தைப் பற்றி தெளிவாக உணர்ந்துக் கொண்டு வாழ்வாங்கு தானும் வாழ்ந்து வாழத் தெரியாதவர்களுக்கும் வாழ வழிகாட்டி உதவும் நெறியை வகுத்தார்கள். இதுவே ஞான நெறியாகும்.