அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லை?
வாஸ்து சாஸ்திரம் மனிதனின் ஒரு பக்கத்தை ஆட்சி செய்கிறது. அதே நேரம் அவரது தசாபுக்தி அவரை மட்டுமின்றி அந்த வீட்டின் வாஸ்துவையும் ஆட்சி செய்கிறது. நல்ல தசாபுக்தி நடக்கும் போது மோசமான வாஸ்து உள்ள வீட்டில் குடியிருந்தாலும் அவருக்கு அதிகளவில் பாதிப்புகள் ஏற்படாது.
ஒரு சிலருக்கு பிறக்கும் போதே கட்டிடக்காரகன் சுக்கிரன், பூமிக்காரகன் செவ்வாய் மோசமான நிலையில் (ஜாதகத்தில்) இருந்தால், வாஸ்து இல்லாமல் கட்டப்பட்ட வீட்டில் குடியிருக்க நேரும். அவர்களுக்கு வாஸ்துவுடன் கூடிய வீடுகள் கிடைக்காது. எனினும், நல்ல தசாபுக்தி நடந்தால் அவர்களின் வளர்ச்சி பாதிக்கப்படாது.
ஒரே மாதிரியான வாஸ்து உள்ள வெவ்வேறு வீடுகளில், வெவ்வேறு நபர்கள், ராசிக்காரர்கள், தசாபுக்தி உடையவர்கள் குடிபுகுந்தாலும், தசாபுக்தியின் பலனை வைத்தே அவர்களுக்கு நல்ல, கெட்ட நிகழ்வுகள் ஏற்படும்.
உதாரணமாக 4 வீடுகள் ஒரே திசையைப் பார்த்தது போல், ஒரே அமைப்பில் அடிப்படை வாஸ்துவுடன் கட்டப்பட்டுள்ளது என்று வைத்துக் கொண்டாலும், அந்த வீட்டில் குடியிருப்பவர்களின் தசாபுக்தியை வைத்தே அவர்களின் முன்னேற்றம் இருக்கும். ஏனென்றால் வாஸ்து என்பது மனிதனின் வாழ்வில் ஒரு பகுதி. ஆனால் ஜோதிடமே ஒரு மனிதனை முழுமையாக வழிநடத்துகிறது.
நல்ல தசாபுக்தி நடக்கும் போது நல்ல வாஸ்து உள்ள வீடு கிடைக்கும். தசாபுக்தி சரியில்லாத போது வாஸ்து குறைபாடு உள்ள வீடுகளில் குடியேற நேரிடும். இல்லாவிட்டால் வாஸ்து நிறைவாக இருந்தாலும் தெய்வீகத்தன்மை இல்லாத இடங்களில் இருக்கும் வீட்டில் குடியேறுவார்.
எனக்கு தெரிந்த நண்பருடன், பெசன்ட் நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு வாஸ்து பார்க்கச் சென்றிருந்தோம். வீட்டின் வாஸ்து மிகச் சிறப்பாக இருந்தது. எந்த வாஸ்து நிபுணர் வந்தாலும் குறை சொல்ல முடியாது. அந்தளவுக்கு வாஸ்து சாஸ்திரப்படி வீட்டை அமைத்திருந்தனர். ஆனால் அந்த வீட்டில் குடியேறிய பின்னர் அந்த குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இறந்திருந்தனர்.
சம்பந்தப்பட்ட வீடு உள்ள நிலத்தின் தன்மையை ஆராய்ந்த போது அது அவ்வளவாக சரியில்லை என்று கூறினேன். வீட்டின் உரிமையாளர் தி.க. ஆதரவாளர் என்பதால் உடனடியாக தளம் அமைக்காத பகுதியை தோண்டச் சொல்லி ஆட்களை நியமித்தார். சுமார் 8 முதல் 10 அடி ஆழம் தோண்டிய போது அங்கே மனித எலும்புகள் கிடைத்தன. இதை வைத்து வீடு கட்டப்பட்ட இடம் முற்காலத்தில் சுடுகாடாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம்.
எனவே, வாஸ்துப்படி வீடு அமைத்தாலும், மனையின் தன்மையையும் கருத்தில் கொள்ள வேண்டும். கட்டிடம் கட்டுவதற்கு முன்பாக, பிரசன்னம் பார்த்து வீடு கட்டுவது பற்றி முடிவு செய்ய வேண்டும்.
ஒருவர் தசாபுக்தி சரியில்லாத நேரத்தில் நல்ல வாஸ்து உள்ள வீட்டில் குடியேறினால் அவரால் பலன் பெற முடியுமா என்றால், ஓரளவுக்கு மட்டுமே அந்த வாஸ்துவால் பலன் கிடைக்கும்.