அருள்மிகு காளத்தி நாதர் ஆலயம்!

அருள்மிகு காளத்தி நாதர் ஆலயம்!

“திருமணம் ஆகாமல் தடைபடும் ஆண், பெண் இருபாலரும் இங்கு வந்து பரிகாரம் செய்து நான்முகனை வழிபட, திருமணம் கைகூடுகிறது என்பது நம்பிக்கை.

 
“பிரம்மஹத்தி தோஷம் களத்திர தோஷம், புத்திர தோஷம் போன்றவை இத்தலத்து இறைவனை வழிபட நீங்கும்” என்று கோயிலிலுள்ள அறிவிப்பு தெரிவிக்கிறது.
 
வில்வ மரத்தில் காட்சி தந்த காளத்தி நாதர்!
 
சிவபெருமானின் திருத்தலங்களைப் பாடல்பெற்ற தலங்கள், ஜோதிர்லிங்கத் தலங்கள், சப்த ஸ்தானத்தலங்கள், சப்த விடங்கத் தலங்கள், பஞ்சாரண்யத் தலங்கள் என்று பல வகையில் சொல்வார்கள், அவற்றில் அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றாகவும், சப்த ஸ்தாத்தலங்களில் ஒன்றாகவும், பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும் புகழ்பெற்றது திருக்கண்டியூர்.
 
தமிழ்நாட்டில் தஞ்சாவூரிலிருந்து திருவையாற்றுக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் பதினோரு கிலோ மீட்டர் தூரத்தில் (திருவையாற்றிலிருந்து இரண்டு கிலோ மீட்டர்) உள்ளது கண்டியூர். பிரமதேவனது ஒரு தலையைச் சிவபெருமான் தமதுசூலாயுதத்தால் கொய்த காரணத்தால் இத்தலத்திற்குக் கண்டனபுரம் என்றும், சதாதப முனிவர் இத்தலத்தில் உள்ள வில்வமரத்தில் காளத்திநாதரைக் கண்டு வழிபட்டதால் ஆதிவில்வாராண்யம் என்றும், ஆணவம் அகன்ற பிரம்மன் இத்தலத்து இறைவனை வழிபட்டு அருள்பெற்றதால் பிரம்மபுரி என்றும், இத்தலத்தில் சிவன். விஷ்ணு, பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளும் கோயில் கொண்டுள்ளதால் மும்மூர்த்தி தலம் என்றும் இத்தலத்திற்குப் பெயர் உண்டு.
 
சிவபெருமானுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோ ஜாதம் எனப் போற்றப்படும் ஐந்து திருமுங்கள் உண்டு. சிருஷ்டிகர்த்தாவான பிரம்மனுக்கும் ஐந்து முகங்கள் இருந்தன. பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் முழுமுதற் பொருள் யார் என்று ஒரு விவாதம் ஏற்பட்டது. இவர்களுடைய ஐயத்தைப் போக்க இறைவன் அடிமுடி காண இயலாத ஒளிப் பிழம்பாய்க் காட்சி கொடுத்தார். அத்தோற்றத்தைக் கண்டு தி்ருமால் உண்மை நிலையறிந்து வணங்க பிரம்மனோ அகந்தையால் சிவபெருமானை இகழ்ந்து பேச, சீற்றம் கொண்ட சிவபெருமான், அகங்காரத்தால் தம்மை இகழ்ந்த பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்து விடுகிறார். பிரம்மனின் அகந்தை அழிகிறது. கலைவாணியுடன் இத்தலத்து இறைவனை வழிபட்டு படைப்புத் தொழிலை மீண்டும் பெறுகிறார் பிரம்மன்.
 
இத்தலத்து இறைவன் பெயர் அருள்மிகு பிரம்ம சிரக் கண்டீஸ்வரர். இறைவன் சந்நிதிக்கு அருகிலேயே வடக்குப் பிராகாரத்தில் கிழக்குத் திசை நோக்கி நான்முகனின் பெரிய திருஉருவமும் அவரது வலப்பக்கத்தில் சரஸ்வதி தேவியின் திருஉருவமும் உள்ளன. நான்முகனின் நாற்கரங்களில் ஒன்றில் தாமரை மலரும், மற்றொன்றில் உருத்திராட்ச மாலையும் உள்ளன.
 
இக்கோயிலின் தலவிருட்சம் வில்வ மரம். இது கயிலையில் இருந்து வந்ததாக ஒரு வரலாறு. சதாதவ மகரிஷி சிறந்த சிவபக்தர். தனது தவ பலத்தால் தினமும் காலையில் தனுஷ்கோடியிலும் உச்சிப் பொழுதில் கங்கையிலும் நீராடி மாலையில் காளத்திநாதரை வழிபடுவது அவர் வழக்கம். இம்மூன்றில் ஒன்று தவறினாலும் நான் தீக்கிரையாவேன் என்று சூளுரைத்தவர். இறைவனது திருவிளையாடலால் ஒரு நாள் அவர் காளத்திநாதரை தரிசிக்கச் செல்வது தடைப்படுகிறது. தாம் சூளுரைத்தபடி தமது உயிரை மாய்த்துக் கொள்ள இத்தலத்தில் அக்னி குண்டத்தை உருவாக்குகிறார். இறைவன் அவரது தீவிரமான பக்தியை வியந்து, அக்னி குண்டத்திற்கு அருகில் வில்வமரத்தைத் தோற்றுவித்து அதில் காளத்திநாதராக மஹரிஷிக்குக் காட்சி கொடுக்கிறார்.
 
மேற்கு நோக்கியிருக்கும் இராஜகோபுரத்தினுள் நுழைந்தால் கொடி மரம் தாண்டி வலப்புறமாக தலவிருட்சம் வில்வ மரம் அதற்கு எதிரில் அம்பாளின் சந்நிதி இருக்கிறது. நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில், அருள்பாலிக்கிறார் மங்களநாயகி சாந்தம் தவழும் அம்பிகையின் எழில் உருவம் பிரமிப்பை உண்டாக்குகிறது.
 
அர்த்த மண்டபத்தின் நுழைவாயிலில் இருபுறமும் துவார பாலகர்களுக்கு பதிலாக அக்கமாலை ஏந்திய ஞானஸ்கந்தரும், தாமரை மொட்டு ஏந்திய வீரஸ்கந்தரும் இருப்பது விஷேமானது. சப்தஸ்தான ஸ்தலங்களில் ஒன்றானதால் அர்த்த மண்டப வாயிலுக்கு வடக்கே ஏழு லிங்கங்கள் உள்ளன. இங்கு சதாதவ மஹரிஷியின் உருவமும், அவர் வழிபட்ட லிங்கமும் உள்ளன.
 
இக்கோயிலில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் அற்புதமான கலையம்சம் கொண்டது. இதர கோயில்களில் உள்ளது போல் நின்ற கோலத்தில் இல்ல7ாமல் ரிஷபத்தின் மேல் ஒரு கையை ஊன்றி அமர்ந்த கோலத்தில் காட்சியளிப்பது தனி விசேஷமாகும். ஆண் பாதியில் காலைத் தொங்க விட்டுக் கொண்டு ஒரு கரத்தில் மழு ஏந்தியிருக்க, பெண் பாதியில் புடவையணிந்த காலைக் குத்திட்டு உட்கார்ந்து அதன் மீது மலர் ஏந்தும் கரத்தை ஊன்றி தலையைச் சற்றே சாய்த்து காட்சி கொடுக்கும் அற்புதம் நம்மைப் பரவசமடைய வைக்கிறது.
 
சூரியன் பூஜித்த தலமாதலால் இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் 13, 14 மற்றும் 16 தேதிகளில் மாலையில் சுமார் 5.45 லிருந்து 6.15 வரை சூரியனின் பொன் திறக்கதிர்கள் கருவறையில் உள்ள சிவலிங்கத் திருமேனி மீது தவழ்ந்து படர்வது கண்கொள்ளாக் காட்சியாகும். தஞ்சாவூர் அல்லது திருவையாறு செல்லும் அன்பர்கள் திருக்கண்டியூர் வீரட்டானேஸ்வரரை அவசியம் தரிசித்து வர வேண்டும்.
 
- K. குருமூர்த்தி