அருளை அள்ளித்தரும் சபரியின் சாஸ்தா!

அருளை அள்ளித்தரும்  சபரியின் சாஸ்தா!

விரதம் இருந்து, தீயவை யாவையும் தள்ளி வைத்து செய்யப்படுகிற சுவாமி ஐயப்பன் வழிபாடு மக்களிடையே நிலவும் வேற்றுமையை நீக்கி, ஒற்றுமைப்படுத்துகின்ற அற்புத சக்தியாகத் திகழ்கிறது. கார்த்திகை மாதம் பிறந்ததும் அனைவரின் காதுகளுக்குள் பாயும் “சுவாமியே சரணம் ஐயப்பா” என்று கோஷங்கள் செவிக்குள் ஊடுருவிச் சென்று மனதை சாந்தப்படுத்தும் சக்தி படைத்தவை. உலகின் அனைத்துத் திசைகளிலிருந்தும் சாதி, இன, மத மொழி பேதங்களின்றி இம்மாதத்தின் முதல் திகதியன்று மாலையணிந்து ஒரு மண்டலம் (41, 45, 48 நாட்கள்) விரதமிருந்து இருமுடி சுமந்தது, சரண கோஷங்களுடன் இந்தியாவிலுள்ள கேரள மாநிலத்தின் புகழ் பெற்ற திவ்ய ஷேத்திரமான சபரி மலைக்கு யாத்திரையாகச் சென்று இந்த கலியுகத்தின் பிரத்யக்ஷ தெய்வமான ஐயப்பனை தரிசிப்பார்கள். 

சபரிமலையில் ஆண்டு தோறும் நடைபெறுகின்ற மண்டல பூஜை மகர ஜோதி பூஜைகள் விசேடமானவை. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்குபெறுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் தேதி சபரி மலையில் எழுந்தருளியுள்ள சுவாமி ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜையும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை மகர ஜோதி தரிசனமும் மிக மிக பிரசித்திப் பெற்றதாகும்!
 
திருஆபரண தரிசனம்
 
சுவாமி ஐயப்பனுக்கு நடைபெறும் மகர விளக்குப் பூஜையை முன்னிட்டு அவர் வளர்ந்த பந்தளம் நகரில் உள்ள பந்தளராஜா அரண்மனையில் இருந்து திருஆபரணம் கொண்டு செல்லப்படும். பந்தளத்தில் அச்சன் கோயில் ஆற்றை ஒட்டியுள்ள ஐயப்பனின் “வலிய கோயிக்கால்” என்றழைக்கப்படும் கோயிலிற்கு அருகில் உள்ள பந்தளராஜாவின் அரண்மனையில் இருந்து திரு ஆபரணம் கால்நடையாகவே சபரி மலைக்கு கொண்டு செல்லப்படும். மகர விளக்குப் பூஜையை முன்னிட்டு சபரி மலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் ஐயப்பன் வளர்ந்த இடமான பந்தளத்திற்கு வந்து அங்குள்ள கோயிலில் பிரார்த்தனை செய்து பின்னர் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள திருஆபரணத்தை பக்தியுடன் தரிசித்துவிட்டுச் செல்வார்கள்.
 
இரண்டு மாத காலத்திற்கு இவ்வாறு பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும் திரு ஆபரணம் மகர விளக்குப் பூஜைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் வலிய கோயிக்கால் சாஸ்தா கோயிலில் இருந்து மதியம் 1.30 மணிக்கு சபரி மலையை நோக்கி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும்.
 
ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திரு ஆபரணத்தை பந்தளராஜாவின் வம்சத்தைச் சேர்ந்த மூத்த குடும்ப உறுப்பினர் தலைமையில் கொண்டு செல்லப்படும் திருவாதிரநாள் ராகவ வர்ம ராஜா அரசரின் தூதராக இருந்து திருஆபரண ஊர்வலத்தை தலைமையேற்றுச் செல்கிறார்.
 
பந்தளம் கோயிலில் இருந்து திருஆபரணம் ஊர்வலம் புறப்படும்போது வானத்தில் அன்று மட்டும் ஒரு கழுகு தோன்றும். திருஆபரணம் கொண்டு செல்லப்படும் ஊர்வலப்பாதையில் வானில் அக்கழுகு தொடர்ந்து பறந்து வருவது இன்று வரை நடந்துவரும் ஓர் அதிசயமாகும்.
 
ஐயப்ப பக்தர்களின் விரதமுறை
 
ஒரு மண்டலம் விரதமிருக்க வேண்டும், பெற்றோர் அனுமதியுடன் குல தெய்வத்தை வணங்கி குரு ஸ்வாமியின் கரங்களால் மாலையை அணிய வேண்டும். அதன் போது துணை மாலைகளையும் அணிய வேண்டும். மாலைகள் செம்பு, வெள்ளி, தங்கத்தில் சேர்க்கப்பட்ட துளசி ருத்ராட்சம் ஸ்படிக மாலைகளாக இருக்க வேண்டும். கறுப்பு மற்றும் நீல நிற வஸ்திரம் அணிவதுதான் சிறப்பு. ஆகார நியமங்களில் கட்டுப்பாடு வேண்டும். விரத காலங்களில் பிரம்மச்சர்யம் இருப்பது அவசியம். உரையாடும் போது “சுவாமி சரணம்” என்று சொல்வதும், முடிப்பதும் பல நன்மைகளைத் தரும். பிறரைத் துன்புறத்துவதையோ தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வதையோ ஐயப்பன் விரும்பியதில்லை. ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஒன்றே என்று எண்ண வேண்டும்.
 
மாலையணிந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும், பூஜைக்குப் பின்னர், அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல பாவங்களையும் நீக்கி, இரட்சிக்க வேண்டும். சத்தியமான பொன்னு பதினெட்டாம் படி மேல் வாழும் ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன், வில்லாதிவீரன், வீரமணிகண்டன், என் ஐயன், ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா என்று மனமுருக வேண்டினால் அவனை தரிசிப்பதற்காக மேற்கொள்ளும் புனித யாத்திரை வெற்றிகரமாக இருக்கும் அத்துடன் தன்னை உள்ளன்போடு நாடி வரும் பக்தர்களின் கோரிக்கைகளை மனமுவந்து நிறைவேற்றி வைப்பார் தர்மசாஸ்தா ஐயப்பன்.
 
ஆண்டு தோறும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து விரதமிருந்து பக்திப் பெருக்கோடு பயணம் மேற்கொள்கின்றனர். பக்தியில் நினைக்கவும், நன்னெறிகளை பேணிப் பாதுகாக்கவும் பக்தர்களால் கடைப்பிடிக்கப்படும் அருமையானதொரு விரதமாகும் இது. ஐயப்பன் மீது உண்மையான பக்தியோடும், விரத அனுஷ்டானங்களோடும் சபரிமலை செல்வோருக்கு சகல சம்பத்துக்களையும் அளித்திட அருட்கடலான சாஸ்தா ஒரு போதும் தவறுவதில்லை! எனவே சுவாமி ஐயப்பனுக்கான விரதத்தை தூய்மையுடனும் நிறைந்த பக்தியுடனும் அனுசரித்து நற்பேறு பெறுவோமாக!
 
- ஜெயா நாகேந்திரன்