மதுரையில் ஒரு பழனி!

மதுரையில் ஒரு பழனி!

பழநியில் ஆண்டி கோலத்தில் இருக்கும் முருகப்பெருமான் மதுரை நேதாஜிரோட்டில் தண்டாயுதபாணி சுவாமியாக கோயில் கொண்டிருக்கிறார்.

தல வரலாறு:

சிவபெருமானின் தோழராக இருந்து, நாயன்மார் வரிசையில் இடம்பிடித்தவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இவர் ஏழாம் நூற்றாண்டில் மதுரைக்கு யாத்திரை வந்த போது, இந்த முருகன் கோயிலில் தங்கினார். சுந்தரர் தங்கிய காரணத்தால் 'சுந்தரர் மடம்' என்று இந்தக் கோயில் அழைக்கப்பட்டது. இங்கிருந்தே சுந்தரர் திருப்பரங்குன்றம் முருகன்கோயிலுக்கு கிளம்பிச் சென்றார். இந்தக் கோயில் ஏழாம் நூற்றாண்டில் இருந்தே இங்கு உள்ளது. இங்குள்ள உற்சவ முருகன் சிலையை, ஆண்டுதோறும் தைப்பூச நாளில் சில பக்தர்கள் தலைச்சுமையாக பழநிமலைக்கு எடுத்துச்செல்வார்கள். அங்கு சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மீண்டும் மதுரை கொண்டு வரப்படும்.

பிற்காலத்தில் இந்த வழக்கம் நின்றுபோனது. பழநிமலைக்கு யாத்திரை சென்று வந்த முருகன் என்பதால், இவருக்கு 'தண்டாயுதபாணி' என்ற பெயர் ஏற்பட்டது. 'மதுரை பழநியாண்டவர்' என்ற பெயரும் உண்டு.

கந்தசஷ்டி சிறப்பு: இங்கு கந்தசஷ்டி விழா ஐப்பசியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோயிலில் தங்கும் வசதி இல்லாததால், பக்தர்கள் கோயிலுக்கு வந்து காப்பு கட்டிக் கொண்டு, வீட்டிலேயே விரதத்தை மேற்கொள்கின்றனர். குழந்தையில்லாதவர்கள் இம்முருகனை எண்ணி சஷ்டிவிரதம் இருந்தால் மழலைச் செல்வம் உண்டாகும் என்பது நம்பிக்கை. விரதமிருக்கும் தம்பதிகள் சஷ்டியின் ஆறுநாட்களும் வந்து பாலபிஷேகம் செய்கின்றனர்.

 
சிறப்பம்சம்: முன்மண்டபத்தில் முருகனின் ஆறுபடைவீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. கருவறையில் முருகப் பெருமான் கோவணத்துடன் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். வலதுகையில் தண்டம் ஏந்தியுள்ள இவர், இடதுகையை இடுப்பில் வைத்துள்ளார். பெரும்பாலும் மூலவர் முருகன் ராஜாங்கக் கோலத்திலேயே காட்சி தருவார்.
 
வழிபாடு: மகாமண்டபத்தில் மகாகணபதி, துர்க்கை, நாகராஜர், யோக ஆஞ்சநேயர், பரமேஸ்வரர், யோகதட்சிணாமூர்த்தி, காலபைரவர் சன்னதிகள் அமைந்துள்ளன. அர்த்த மண்டபத்தில் கன்னிமூலவிநாயகர், வீரபத்திரர், பேச்சியம்மன், அங்காளஈஸ்வரி சன்னதிகள் உள்ளன. காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி மற்றும் ஞாயிறு ராகுகாலத்தில் அபிஷேகம் செய்கின்றனர். இவரை வழிபட்டால் எந்தத் தடையையும் தாண்டி நமது திட்டங்களில்வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
 
திருவிழா: பங்குனியில் பிரம்மோற்ஸவம், கார்த்திகை நட்சத்திரத்தில் முருகன் வீதியுலா, வைகாசிவிசாகம், தைப்பூசம், விநாயகர்சதுர்த்தி, நவராத்திரி.
 
இருப்பிடம்: மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து நடக்கும் தூரத்தில் நேதாஜி ரோட்டில் அமைந்துள்ளது.
 
திறக்கும் நேரம்: காலை6-12 மணி, மாலை4 - 10 மணி.போன்: 0452-234 2782