பன்னிரு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றான கேதர்நாத்!

பன்னிரு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றான கேதர்நாத்!

உத்தராஞ்சல் உத்தர்கண்ட் மாநிலத்தில் கேதர்நாத் உள்ளது. இது இந்துக்களின் மிகவும் முக்கிய புண்ணியதலமாகும். இது ருத்ரப்பிரயாகை மாவட்டத்திலுள்ள ஒரு நகரப்பஞ்சாயத்து ஆகும். கடல் மட்டத்திலிருந்து 3,584 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மந்தாகினி ஆற்றில் உற்பத்தித்தலம் இங்கு உள்ளது.

 
கௌரிகுண்ட் என்ற இடத்திலிருந்து 13 கி.மீ. மலையேற்றப் பாதையில் சென்றபிறகே கேதர்நாத்தை அடைய முடியும். பழக்கமில்லாதவர்கள் இதைக் கடக்க ஒரு நாளுக்கு மேலும் ஆகலாம். போகும் வழயிில் ஜங்க்லே சட்டி ரம்பாரா, கரூர்சட்டி ஆகிய இடங்களில் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டும் இரவை அங்கேயே கழித்து விட்டும் செல்லலாம். ரம்பாராவுக்கு 1 கி.மீட்டருக்கு முன்னால் மிக அழகான பெரிய அருவி பாய்ந்து வருகிறது.
 
கார்வால் மற்றும் குமவோன் பிரதேசங்களிலுள்ள மலைவாசஸ்தலங்கள் மற்றும் ஹரித்துவார், ரிஷிகேசம், டேராடூனிலிருந்து கௌரிகுண்ட்டை அடைய சாலைவசதி உண்டு.
 
சமோலி மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட சிவன் கோயில்கள் உள்ளன. அவற்றுள் மிகவும் முக்கியமானது கேதர்நாத்.
 
கேதர் என்பது சிவபெருமானுடைய இன்னொரு பெயர். தவிர கங்கையில் பல ஆண்டுகளாக உருண்டுவந்து அங்கு லிங்கமாக வழிபடப்படும் ஒரு உருண்டையான கல்லுக்கும் அந்தப் பெயர் உண்டு. சிவபெருமானின் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களுள் கேதர்நாத்தும் ஒன்று. 
 
கரூர் சட்டியிலிருந்து இந்த இடத்தை அடைவதற்கு 1/2 கி.மீ முன்பே மகோன்னதமான கேதர்நாத் கோயில் கண்களுக்குப் பலப்படுகிறது. பனியால் மூடப்பட்டிருக்கும் வெண்மையான உயர்ந்த கோபுரம் மிகவும் வசீகரமானது. அமைதியும் தூய்மையும் அங்கு கோலோச்சுகிறது. தெய்வநம்பிக்கை இல்லாதவர்கள் இங்கு வந்தால் பக்தர்களாக மாறுகின்றனர். தெய்வ பக்தியுடையவர்கள் மேலும் பக்திமான்களாகின்றனர். அத்தகைய அமைதியையம் தூய்மையையும் மாசுபடுத்தாமல் இருப்பது மக்கள் கைகளில் உள்ளது.
 
இக்கொயிலின் கட்டிட அமைப்பும் கட்டப்பட்ட பாணியும் மிகவும் சிறப்பானது. பனி உறைந்திருக்கும் இந்த இடத்தில் நேர்செங்கோணத்தில் நீட்டிக்கொண்டிருக்கும் மலையின் ஒரு முகட்டில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. முன்னாளில் பாண்டவர்களால் கட்டப்பட்ட பழைய கோவிலுக்கு அருகாமையில் தற்போதுள்ள கோயில் (அநேகமாக 8-ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கராச்சாரியாரால்) கட்டப்பட்டிருக்கிறது. எந்த குறிப்பிட்ட குடும்பத்து பூசாரிகளும் இங்கு சடங்குகளை மேற்பார்வை பார்ப்பதில்லை. கோயிலின் உள் கர்ப்பகிரகத்தில் அமைந்துள்ள கல்லால் ஆன லிங்கத்திற்கு பக்தியுடன் வழிபாடுகள் நடத்தப்படுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கோயிலின் உள்ளே கூம்புவடிவில் உள்ள ஒரு பாறை சிவபிரானின் சதாசிவவடிவமாக வணங்கப்படுகிறது.
 
கோயில் கதவுக்கு வெளியே மிகப்பெரிய நந்தியின் சிற்பம் உள்ளது. அது கோயிலைப் பாதுகாக்கிறது. மிகப் பெரிய கற்களாலான அந்தச் சிற்பத்தை எவ்வாறு அந்தப் பழங்காலத்தில் செய்திருக்க முடியும் என்பது வியப்பைத் தருவதாகும். கர்ப்ப கிரகத்தை தவிர பக்தர்களும் பயணிகளும் கூடுவதற்கு ஒரு ம ண்டபமு் அங்குள்ளது. அருகில் ஆதி சங்கராச்சாரியரின் சமாதி என்று ஓர் இடம் காட்டப்படுகிறது.
 
மகாபாரதக் கதையின் முடிவில் பாண்டவர்கள் இமயலைப்பயணத்தை மேற்கொள்கின்றனர். சிவபெருமானைத் தரிசிக்க விரும்புகின்றனர். அவர்கள் தம் சகோதரர்களைக் கொன்று (கோத்ர ஹத்யா) பாவத்தை அடைந்திருப்பதால் சிவபெருமான் அவர்களைச் சந்திக்க விரும்பவில்லை. அவர்களைக் கண்டதும் சிவபெருமான் ஓர் எருதாக மாறி மாட்டுமந்தையில் ஒளிந்துகொள்கிறார். பீமன் அவரை அடையாளம் கண்டு கொண்டு அதைப்பிடிக்க முயலும் போது தலையைப் பூமியில் குத்தியவாறு தன்னை மறைத்துக் கொள்கிறார். பலசாலியான பீமன் அவர் பூமியினுள் சென்று மறையாமல் இருக்க பின்னாலிருந்து அவரை இழுக்க சிவபெருமானின் உடலின் பல பாகங்களும் அந்த இடத்தின் பல இடங்களிலும் விழுகின்றன. காட்மண்டுவில் பசுபதிநநாத்தில் நெற்றி, கேதர்நாத்தில் திமில், உடலின் நடுப்பாகம் மத்மகேஸ்வர், கைகள் துங்கநாத்திலும் முகம் ருத்ரதாத்திலும் அவருடைய சடை முடி கல்பேஸ்வரிலும் இருக்கிறது. இவை பஞ்சகேதாரம் ன்று சொல்லப்படுகின்றன. கேதர் பள்ளத்தாக்கில் இவை உள்ளன.
 
- லக்ஷ்மி விஸ்வநாதன்