மலப்பிணி உயிர்ப்பிணி உடற்பிணி போக்கும் ஆலயம்!

மலப்பிணி உயிர்ப்பிணி உடற்பிணி போக்கும் ஆலயம்!

“ஒன்றவன் தானே இரண்டவன்; இன்னருள் நின்றனன் மூன்றினுள்...” என்பார் திருமூலர். அதாவது ஒரே கடவுள் உயிர்கட்கு உதவும் பொருட்டு, குரு, லிங்க, சங்கம உருவில் வந்து அருள்புரிகிறார் என்பது வழக்கு. இம்முச்சிறப்பும் வாய்ந்த சிவத்தலம் சீர்காழி. இத்தலத்தில் மலை மீது பெரிய நாயகி சமேத பெரிய நாயகராகத் தோணியில் எழுந்தருளியிருக்கும் உமாமகேஸ்வரனே குரு மூர்த்தம்.
 
பிரம்மதீர்த்தக் கரையில் திருஞான சம்பந்தருக்கு ஞானோபதேசம் செய்து, “தோடுடைய செவியன்” என்று பாடப்பட்ட குரு இவரேயாவர். இத்தலத்தில் மூலவராக விளங்கும் பிரம்மபுரீச்வரலிங்கம், பிரம்மனால் ஸ்தாபிக்கப்பட்ட லிங்கம். கோயிலின் மலைஉச்சியில் சட்டைநாதர் என்ற திருநாமத்தோடு அருள்பாலிக்கும் பைரவ மூர்த்தியே ச்ங்கம் மூர்த்தம் இப்பகுதிவாழ் மக்கள் பலருக்குக் குலதெய்வமாக விளங்குவதோடு இந்த தேவஸ்தானமே “ஸ்ரீ சட்டைநாத சுவாமி தேவஸ்தானம்” என்று அழைக்கப்படும் பெருமை பெற்றவர்.
 
அறுபத்துநான்கு கலைகளையே ஆடையாக அணிந்து வந்ததால் இப்போதும் இந்த ஐதீகத்தில் இறைவனுக்கு அறுபத்துநான்கு பரிவட்டங்கள் சேர்த்து இதற்கென நெய்த ஒரு பரிவட்டமே சாத்தப்பட்டு வருகிறது. உலக சிருஷ்டியை இறைவன் இட்ட கட்டளைப்படிச் செய்து முடிக்க பிரம்மன் வழிபட்ட தலமாதலால் பிரம்மபுரம் என்றும் பெயர் பெற்றது.
 
ஊரின் மத்தியில் நாற்றிசைகளிலும் நான்கு கோபுரங்களோட விளங்குகிறது திருக்கோயில் பிரம்மதீர்த்தம், காளி தீர்த்தம், கழுமல தீர்த்தம் முக்கியமான தீர்த்தங்களாகும். மொத்தம் 22 தீர்த்தங்கள் உள்ளன என்கிறது தல புராணம். கோயிலுக்குள் அம்பாள் சந்நிதியில் பிரம்ம தீர்த்தம் உள்ளது. சுவாமி, அம்பாள் கோயில்களுக்கு இடையே திருஞான சம்பந்தர் கோயில் உள்ளது. சுவாமி கோயிலில் திருத்தோணிமலை இருக்கிறது.
 
மலையில் உமாமகேஸ்வரி (பெரிய நாயகியுடன்) திருத்தோணியப்பர் உருவத் திருமேனியோடு விளங்குகிறார். சுதை உருவங்களான தோணியப்பரும், உமா தேவியும் அலங்கார அணிகலன்களுடன் தோணியில் அமர்ந்து மிக அழகாகக் காட்சி தருகிறார்கள். மலையின் உச்சியில் இத்தலத்திற்கு மிக்க சிறப்பைத் தரும் மூர்த்தியாகிய ஸ்ரீ சட்டைநாதர் எழுந்தருளியிருக்கிறார்.
 
இத்தலத்தின் விருட்சம் பாரிஜாதம். இது கொன்றையைப் போல் பூத்து, மாதுளையைப் போல் காய்த்து, மாபோல பழுத்து முறையே மந்திரம், மணி, மரத்தின் தன்மைகளைப் பெற்றுள்ளது. அதனாலேயே இத்தலம் தன்னை அடைந்தோர்க்கு மலப்பிணி, உயிர்ப்பிணி, உடற்பிணிகளைப் போக்கவல்லதாகப் புகழ்ந்து பேசப்படுகிறது.
 
புராண வரலாறு
 
திருமால், மாவலிபால் குறள் உருவராகச் சென்று மூன்றடி மண் கேட்டு விண், மண் ஆகியவற்றை ஈரடியில் அளந்து மூன்றாம் அடியை சிவ பக்தனான மாவலியின்  தலை மீது வைத்து அவனை அழித்தார். அந்த வேகத்தில் அகங்காரத்தோடு திரிய, உலகம் நடுங்கிற்று. வடுகநாதர் திருமாலைத் தாக்கி வீழ்த்தினார். இலக்குமி தேவி இறைவனிடம வேண்ட, இறைவன் அருளால் திருமால் எழுந்து நின்றார். திருமாலின் வேண்டுகோள்படி அவர்தம் தோலைச் சட்டையாகவும் ஏற்றுப் பெருமான் தண்டபாணி, சட்டை நாதர், வடுகநாதர், ஆபத்துதாரணர் எனப் பல திருப்பெயர்களோடு அருள்பாலிக்கிறார்.
 
கால வித்து என்னும் வேந்தன் புத்திரப்பேறு வேண்டி உரோமச முனிவரிடம் யோசனை கேட்க, அவர் கயிலையின் சிகரத்தைத் தரிசித்தால் புத்திரப் பேறு உண்டாகும் என்கிறார். கயிலைக்கு எவ்வாறு செல்வது என்று வேந்தன் கலங்கியபோது முனிவர், இறைவனிடம் தென்னாட்டு மக்களின் வசதிக்காகக் கயிலையின் சிகரம் ஒன்றைத் தென்திசையில் தோற்றுவித்து அதில் அன்னை உமாதேவியோடு காட்சி தரவேண்டும் என்று வேண்டுகிறார்.
 
இறைவனின் திருஉளப்படி வாயுதேவனின் பெருமுயற்சியால் கயிலையின் சிகரம் பெயர்ந்து பதினோரு கிளைகளாக விழுகிறது.  இருபது பறவைகள் ஒரு சிகரத்தைத் தூக்கி வந்து இத்தலத்தில் வைத்துவிடுகின்றன. காலவித்து அரசன் சிகரத்தைத் தரிசித்ததும் சிகரம் மறைந்து விடுகிறது.
 
அதன் நினைவாக மலை வந்த இடத்தில் கதையால் இருபது பறவைகள் தாங்கியது போலவே கட்டு மலை ஒன்றை மன்னன் கட்டுவித்தான்.
 
ஆகம விதிப்படி இக்கோயிலில் ஆறு கால பூஜைகள் நிகழ்கின்றன. சித்திரைத் திங்களில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் இரண்டாம் திருவிழா திருமுலைப்பால் உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. ஸ்ரீ திருநிலை நாயகிக்கு ஆடிப்பூர உற்சவமும் நவராத்திரி உற்சவமும் சிறப்பாக நடத்தப்படுகின்றன. ஸ்ரீ சட்டநாதருக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் புணுகுச் சட்டம் சாத்தி மகா நைவேத்தியம் இல்லாமல் வடை, பாயசம் நிவேதனம் செய்யப்படுகிறது.
 
அன்று அங்கு தரிசனத்திற்குப் போகிறவர்களும் ஸ்நானம் செய்து ஆசாரமாகத்தான் போகிறார்கள். திருஞானசம்பந்தருக்கு நித்திய பூஜையோடு தை அமாவாசை, வைகாசி மூலம், ஆனி ரோகிணி, ஐப்பசி சதயம் போன்றி விசேஷ நாட்களிலும் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
 
இத்தலத்தில் திருஞான சம்பந்தர் அவதாரம் செய்த வீடு - நினைவாலயமாகப் போற்றப்படுகிறது. 
 
- K. குருமூர்த்தி