மனிதனை உய்விக்கும் திருவாதிரை விரதம்!

மனிதனை உய்விக்கும் திருவாதிரை விரதம்!

மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் கோயில் கொண்டருளும் நடராஜப் பெருமானை தரிசிக்க தேவர்கள் யாவரும் ஒன்று கூடுவதாக ஐதீகம். தேவர்களுக்கு மார்கழி மாதம் அதிகாலைப் பொழுதென்று புராணங்கள் கூறுகின்றன. ஆகவேதான் வைகறைப் பொழுதில் சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகிறது. வைகரையைக் குறிக்கின்ற இக்காலத்தை பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கின்றார்கள். சைவத்தைத் தழுவி உள்ளோர்க்கு மார்கழி மாதம் திருவாதிரை, திருவெம்பாவை விரதங்களாலும் விநாயகர் சஷ்டி விரத்தாலும்பெரும் பெருகின்றது.

 
சைவர்களுக்கு மட்டுமன்றி வைஷ்ணவர்களுக்கும் மார்கழி சிறப்புக்குரியதுதான். ஏனெனில் சுவர்க்க வாயில் ஏகாதசி விரதமும் இம்மாதத்திலேதான் அனுஷ்டிக்கப்படுகின்றது.
 
மாதங்களில் சிறந்த மார்கழி மாதத்தில் வருகின்ற திருவாதிரை நட்சத்திரத்தில் சில பெருமாளை நினைந்து கடைப்பிடிக்கப்படும் புனிதமான விரதம் திருவாதிரை விரதம். 
 
இத்துணை சிறப்புக்களைப் பெற்றிருக்கும் மார்கழி மமாதத்து ஆதிரை நாள் என்று அழைக்கப்படும் திருவாதிரை தினத்தில் தில்லையம்பலத்து நடராஜப்பெருமாள் ஆரோகணித்து தேரில் வீதி வலம் வரும் காட்சி காணக் கண்கொள்ளாதது இந்த அருமை மிகு தெய்வீகத் திருக்காட்சியை தரிசிக்க இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலிருந்தும் அடியார்கள் கூட்டம் தொன்று தொட்டு தமிழகம் செல்வது வழக்கம். சிதம்பரம், பஞ்சபூதத் தலங்களில் ஆகாயம் என்றும் திருவாதிரைத் திருநாளில் நடராஜப் பெருமாளை இங்கு சென்று தரிசித்தால் முக்தி கி்டைப்பது உறுதி என்றும் சொல்லப்படுகிறது.
 
சேந்தனார் ஒரு சிறந்த சிவபக்தர். இவர் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரில் விறகு வெட்டி பிழைப்பு நடத்தி வந்தார். அனுதினமும் யாரேனும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பின்பே தான் உணவு அருந்துவார். ஒரு நாள் அதிகாலை பலத்த மழை காரணமாக விறகுகள் நனைந்து விட்டபடியால் சேந்தனாரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் சாப்பாட்டிற்கு அரிசி வாங்கவும் முடியவில்லை. ஆகவே வேறுவழியின்றி அன்று கேழ்வரகில் களி செய்து சிவனடியாருக்காகக் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் யாரும் கண்ணில் தென்படவில்லை. சேந்தனார் மிகவும் மனம் வருந்தினார். 
 
இவருடைய உண்மையான சிவபக்தியை உலகுக்கு உணர்த்தத் திருவுளம் கொண்ட நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார். வேடத்தில் சேந்தனார் இல்லம் சென்றடைந்தார். இமது கண்ட சேந்தனார் பெரிதும் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்கு உள்ளன்போடு படைத்தார். சிவனடியார் களியை மிகவும் விரும்பி உண்டதோடல்லாமல் எஞ்சியிருந்த களியையும்ி தமது அடுத்த வேளை உணவுக்குத் தருமாறு வாங்கிச் சென்றார். மறுநாள் அதிகாலையில் வழக்கம் போல தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோயில் கருவறையைத் திறந்தனர். அவர்களுக்கு அங்கே ஒரு அதிசயம் காத்திருந்தது. நடராஜப் பெருமானைச் சுற்றிலும் எங்கும் கேழ்வரகுக் களி சிதறிக் கிடந்தது.
 
இதைக் கண்ட அந்தணர்கள் இவ்விடயத்தை உடனே அரசருக்கு அறிவித்தார்கள். அரசர் அன்று இரவில் தான் கண்ட கனவினை எண்ணிப் பார்த்தார். அரசரின் கனவில் நடராஜப் பெருமான் தான் சேந்தனார் வீட்டில் களியுண்ணச் செல்வதைத் தெரிவித்து இருந்தார். அதன்படி சேந்தனாரை உடனே கண்டுபிடிக்குமப்டி அமைச்சருக்கு ஆணையிட்டார் அரசர். ஆனால் சேந்தனாரோ அன்று நடைபெறும் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழாவிற்கு சென்றிருந்தார்.
 
எம்பெருமானைத் தேரில் அமர்த்தியபின் அரசர் உட்பட எல்லோரும் தேரை பக்திப் பெருக்கோடு வடம்பிடித்து இழுத்தனர். மழை காரணமாக சேற்றில் அழுந்திச் சிக்கிய தேர் சிறிதும் அசையாது நின்று கொண்டிருந்தது. இதன் பொருட்டு அரசர் மிகவும்ி மனம் வருந்தினார்.
 
அந்நேரத்தில் ஒரு அசரீரி! சேந்தா! நீ பல்லாண்டு பாடு” என ஒலித்தது. சேந்தனாரோ “ஏதுமறியாத விறகுவெட்டி நான். இறைவனை எங்ஙனம் பாடுவேன்” என மனம் பேதலித்து இறைவனைத் துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிந்து செந்தனாரைப் பாட வைத்தார். “மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல” எனத் தொடங்கி “பல்லாண்டு கூறுதுமே” என முடித்து பதின்மூன்று பாடல்களை இறைவனை வாழ்த்திப் பாடினார். அசைவற்று இருந்த தேர் இப்போது நகர்ந்தது. அரசரும் அடியார்களும் சேந்தனாரின் காலில் விழுந்து வணங்கினார்கள்.
 
அரசர், தாம் இறைவனைக் கனவில் கண்டதைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார். தம் வீட்டிற்கு நடராஜப் பெருமானே சிவனடியார் வேடத்தில் களியுண்ண வந்ததை எண்ணி சேந்தனார் மனம் நெகிழ்ந்தார். இந்த அதிசயம் நிகழ்ந்த தினமே திருவாதிரை நாளாகக் கொண்டாடப்படுகிறது. சேந்தனாரின் சிவபக்தியை நினைவுகூரும் வகையில் இன்றும் சிவபெருமானுக்கு கேழ்வரகுக் களி படைத்து வணங்கப்படுகிறது.
 
திருவாதிரை விரதம் கடைப்பிடிப்போர் திருவாதிரை தினத்தில் உபவாசம் இருந்து மறுநாள் பாரணம் செய்வார்கள். நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் அதிலும் சிதம்பரத்தில் நடைபெறும் ஆராதனைகள் மிகவும் சிறப்புடையன. சிவபக்தர்கள் யாவரும் திருவாதிரைக்கு சிதம்பரத்திற்கும் திருஉத்திரகோச மங்கைக்கும் சென்று தரிசனம் செய்வார்கள். இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையன் என்றும் அழைக்கின்றார்கள்.
 
திருவாதிரை விரதத்தை விரதங்களை இந்துக்கள் அனைவரும் சிரத்தையாக ஊன்றிக் கடைப்பிடித்தல் மிக அவசியம். இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் அன்புணர்ச்சி ஒழுக்கம், உயர்நிலை, சமரச வாழ்வு, ஆத்ம ஞானம் முதலியவை கிடைக்கப் பெற்று மனிதர்கள் புனிதர்களாக்கப்படுகிறார்கள் என்பது கண்கூடு.
 
- S. ஆகாஷ்