முருகனுக்குரிய தைப்பூசத் திருநாள்!

முருகனுக்குரிய தைப்பூசத் திருநாள்!

அருள் பொதியும் தமிழ்க் கடவுள் விசாக வேந்தனாம் முருகப் பெருமான் திருவிழாக்களில் முதன்மையாகத் திகழ்வது தைப்பூசத்திருநாளாகும்.

 
பூசநட்சத்திரம் நட்சத்திர மண்டலத்தில் எட்டாவதாக இருக்கின்றது. தமிழ் மாதங்களில் பத்தாவதாய் வருகின்ற தை மாதத்தில் வருகின்ற பூச நட்சத்திர புண்ணிய நாளே தைப்பூச விழாவாக இநதுக்களால் கொண்டாடப்படுகின்றது. முருகப் பெருமானுடைய விஷேட தினமாக தைப்பூச நன்னாள் கொள்ளப்படுகின்றது. பெரும்பாலான தைப் பூச தினங்கள் பௌர்ணமி நாளாகவே அமைந்திருக்கும்.
 
இந்த நல்ல நாளில் கல்வி தொடங்குதல், குழந்தைகளுக்கு காது குத்துதல் முதலியவற்றை முருக பக்தர்கள் செய்து மகிழ்வார்கள். மேலும் முருக பக்தர்கள் முருகனுக்கு வேண்டிக் கொண்டு காவடி எடுத்தல், பால் குடம் எடுத்தல், கற்பூர சட்டி ஏந்தி வருதல் போன்ற நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றுவார்கள். தைப்பூசத் தினத்தன்று அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் ஆலயங்களில், சிவன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகளும் ஆராதனையும் நடைபெறும். 
 
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில், தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. ஆகவே, பலவிதமான இன்னல்களைத் தொடர்ந்து அளித்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி கருணைக் கடவுளான சிவபெருமானிடம் தேவர்கள் யாவரும் முறையிட்டனர்.
 
தேவர்களின் முறையீட்டை ஏற்றுக் கொண்டு, தேவர்களுக்குத் தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்த சக்திமிக்க ஒரு தலைவனை உருவாக்கத் திருவளம் கொண்டார் எம்பெருமான். இங்ஙனமாய் தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்த பெருமான்.
 
சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து வந்து ஆறு தீப்பொறிகள் ஆறு அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால் அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு, பார்வதி தேவியால் ஆறுமுகம் கொண்ட ஒருவராய் ஆறுமுகன் தோன்றினான்.
 
பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு அன்னை பார்வதி ஞானவேல் வழங்கி ஆசீர்வதித்தது தைப்பூச நன்னாளில் தான். இதனாலேயே பழனி மலையில் தைப்பூசத் திருவிழா மற்ற முருகன் ஆலயங்களைக் காட்டிலும் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. 
 
இந்த வேலை ஆயுதமாகக் கொண்டே திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் அசுரர்களை வதம் செய்து தேவர்களை நிம்மதி அடையச் செய்தார் முருகன். முருகனின் வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மை அண்டாது.
 
தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்குகின்றனர். கந்தசஷ்டி கவசம், சண்முக கவசம் திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்வார்கள். தைப்பூசத்தன்று முருகன் ஆலயம் சென்று சிறப்பு வழிபாடுகள் செய்து விரதத்தை முடிப்பார்கள்.
 
பழனியின் மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி சிலையை பதினெண் சித்தர்களில் ஒருவரான போகர் நவபாஷாணத்தால் செய்து பிரதிஷ்டை செய்துள்ளார். இக்கோயிலில் தைப்பூசம் பத்து நாட்கள் நடைபெறுகின்ற ஒரு முக்கிய விழா. ஏழாம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறுகின்றது. முருகன் தன் இரு சக்தியரான வள்ளி, தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் ரத வீதிகளில் தேரில் பவனி வருவார். விழாவின் நிறைவாக, பத்தாம் நாள் தெப்போற்சவம் நடைபெறுகின்றது.
 
தைப்பூசத்தன்று பாலதண்டாயுதபாணியைக் கண்டு வழிபட பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பாதாயாத்திரையாக பழனிக்கு வருகிறார்கள். பல வேண்டுதல்களை முன் வைத்து முருகனுக்கு நேர்ந்து கொண்டவர்கள், சர்க்கரை காவடி, தீர்த்தக்காவடி, பறவைக்காவடி, பால் காவடி, மச்சக்காவடி, மயில் காவடி முதலானவற்றை எடுத்து தமது நேர்த்திக் கடன்களை பழனி முருகனுக்கு பூர்த்தி செய்கின்றார்கள்.
 
வடலூர் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளியன்று புனர்பூச நட்சத்திரத்தன்று தான் ஜோதியானார். இதனைக் குறிக்கும் வகையில் அவர் ஜோதியான வடலூருக்கு அருகிலுள்ள மேட்டுக்குப்பத்தில், தைப்பூசத்தன்று இலட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகின்றார்கள்.
 
மருவூரில் தைப்பூச விழா!
 
இந்திய தேசத்தில் இருந்து வரும் முக்கியமான புகழ்பெற்ற வழிபாட்டு தலங்களில் பல்வகையிலும் சிறப்புற்று விளங்குவது வடதமிழ்நாட்டில் அமைந்திருக்கும் மேல்மருவத்தூர் சித்தர் பீடமாகும்.  இத்தலத்திற்கு அன்னையின் மகிமையை கொண்டாடும் விதத்தில், வருடம் முழுவதும் இலட்ச கணக்கான செவ்வாடை பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கின்றார்கள். ஆன்மீகச் செம்மல் தவத்திரு பங்காரு அடிகளாரின் சீரிய தலைமையில் அவரது வழிகாட்டுதலின் பேரிலும், எண்ணற்ற கல்வி பணிகள், சமுதாய பணிகள், மருத்துவ பணிகள் முதலானவை ஆண்டு முழுவதும் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் மிகச் சிறப்பாக நடந்து வருகின்றன. இந்த ஆண்டுக்கான தைப்பூச ஜோதி தரிசனத்தை தை மாதம்  பிப்ரவர் 3-ம் திகதி கண் குளிர கண்டு, வாழ்வில் எல்லா வளமும் பெற்றிட அன்னையின் அருள் பெறுங்கள்.
 
- அபிதா மணாளன்