உறக்கம் - கனவுகளும் பலன்களும்

 உறக்கம் - கனவுகளும் பலன்களும்

நீங்களே உறங்கி எழுந்தது போல் கனவு கண்டால் உங்களுக்கும் இன்னொருவருக்கும் நெடுங்காலமாக இருந்து வந்த ஒரு தகராறு, சுமுகமாக தீரப்பொகிறது. அதன்விளைவாக, உங்களை வருத்திக் கொண்டிருந்த பல்வேறு தொல்லைகளிலிருந்து நீங்கள் விடுபடப்போகிறீர்கள். ஆகையால், இனிமேல் நீங்கள் நிம்மதியாக உங்கள் காரியங்களைக் கவனிக்கலாம். 

 
பிறர் தூங்கிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால் உங்களுடைய தொழில் துறையில் அல்லது உத்தியோகத்துறையில் உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு வரப்போகிறது. அந்த வாய்ப்பை நீங்கள் நடுவவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நழுவ விட்டால் பின்னால் அந்த மாதிரி ஒரு வாய்ப்புக் கிடைப்பதே அரிதாகிவிடும். 
 
நீங்கள் வேறு ஒருவருக்கு உரிய படுக்கையில் படுத்திருப்பது போல் கனவு கண்டால் ஓர் அந்நியருடைய தொடர்பு உங்களுக்கு ஏற்படப் போகிறது. அவரும் நீங்களும் நெருக்கமாக பழக்கப் போகிறீர்கள். அப்போது, அவர் உங்களை மோசம் செய்யப் பார்க்கிறார் என்று தவறாக எண்ணிக் கொண்டு அதற்காகத் தற்காப்பாக நீங்களே அவரை மோசம் செய்ய முயலுவீர்கள். அப்படி செய்யாதீர்கள். அவர் மிகவும் நல்லவர். 
 
நீங்கள் தூங்கும் போது உங்கள் தலையணையை எவரோ திருடிக் கொண்டு போய்விட்டது போல் கனவு கண்டால் உங்கள் அறிவை மயக்கி, உங்களுடைய பொருள்களை கவர்ந்து செல்வதற்கு ஒருவர் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். அதற்காக உங்களுடைய பலவீனங்களை எல்லாம் அவர் பயன்படுத்திக் கொள்ள முயலுவார். ஆகையால், இன்னும் சிறிது காலத்துக்கு நீங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக முன்பின் பழக்கம் இல்லாத அழகிய இளம் பெண்களிடம் சற்று விழிப்பாக நடந்து கொள்ள வேண்டும். 
 
நீங்கள் படுத்திருக்கும் அறைக்குள் ஓர் அந்நியர் நுழைவது போல் கனவு கண்டால் நீங்கள் ஒரு தர்மசங்கடமான நிலையில் சிக்கிக் கொள்ளப் போகிறீர்கள். நீங்கள் பாதுகாத்து வருகிற அந்தரங்கமான இரகசியம் ஒன்று வெளியாகிவிடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் அந்த இரகசியத்தை மிகவும் கவனமாகப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அது முடியாமல் போகுமானால் நீங்களே முந்திக் கொண்டு, அந்த இரகசியத்தை அதற்கு உரியவரிடம் பக்குவமான முறையில் வெளியிட்டு விடுங்கள். இல்லாவிட்டால், வீணாக நீங்கள் கெட்ட பேருக்கு ஆளாக நேரலாம். 
 
பிறர் படுத்து உறங்கும் அறைக்குள் நீங்கள் நுழைவது போல் கனவு கண்டால் உங்களுக்குத் தேவையில்லாத பிறர் காரியங்களில் எல்லாம் நீங்கள் அடிக்கடி தலையிடுகிறீர்கள். இதனால் பல பேர் உங்களை உள்ளூர வெறுக்கிறார்கள். சிலர் உங்களோடு வெளிப்படையாக சண்டை போடத் தயாராகி விட்டார்கள். ஆகையால் பிறருடைய இரகசியங்களையெல்லாம் துப்பறிந்து காண்பதில் உங்களுக்கு உள்ள ஆர்வத்தை நீங்கள் அறவே ஒழிக்க வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் பல தொல்லைகளுக்கு உள்ளாவீர்கள். 
 
நீங்கள் உறக்கத்தில் பிதற்றிய ஓர் இரகசியத்தைப் பிறர் ஒற்றுக் கேட்டு விட்டது போல கனவு கண்டால் நீங்கள் ஒரு தவறும் செய்யாமலே தவறு செய்துவிட்டதாக எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். அந்தப் பயத்தின் காரணமாக, நீங்கள் போய்ப் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான நபரை பார்க்காமலே இருக்கிறீர்கள். நீங்கள் அவரை உடனே போய் பாருங்கள். ஏனென்றால் உங்கள் செயலை அவர் சிறிதும் தவறாக எடுத்துக் கொள்ள வில்லை.
பிறர் உறக்கத்தில் பிதற்றிய ஓர் இரகசியத்தை நீங்கள் ஒற்று கேட்டு விட்டது போல் கனவு கண்டால் உங்களுக்கு உள்ளே புதையுண்டு உறங்கிக் கிடக்கும் சில திறமைகள் இனிமேல் தான் சிறிது சிறிதாக வெளிப்படப் போகின்றன. அவை வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் இனிமேல் ஏற்படப் போகின்றன.
 
தமிழ்வாணன்