சக்தி உபாசனை முறைகள்!

சக்தி உபாசனை முறைகள்!

வேத சாஸ்திரங்களின் அடிப்படையில் அமைந்த சமயம் வைதீக சமயம் இதனை சனாதன தர்மம் என்பார்கள். எண்ணற்ற ஞானிகள் ரிஷிகள் முனிவர்கள் மகான்களின் சிந்தனைகளின் கூட்டு முயற்சியால் பல நூற்றாண்டுகாலமாக அது வளர்ச்சி அடைந்து மிக உன்னதமான நிலையில் இருக்கிறது. அது பலமுறை ஞானம் பொருந்திய முனிவர்களினாலும், ரிஷிகளினாலும் சீர்திருத்தம் அடைந்து புத்துணர்ச்சி ஊட்டப்பட்டு இன்றுள்ள நிலையை அடைந்திருக்கிறது.
 
ஆதிசங்கரரின் காலத்திற்குச் சற்று முன்பாக வைதீக சமயம் அழியும் நிலைக்கு வந்து விட்டது. அதைச் சீர்படுத்தவும். தேவையற்ற களைகளை எடுக்கவும், புத்துணர்ச்சி ஊட்டவும் விரும்பினார் ஆதிசங்கரர்.
 
ஏராளமான சமயங்களை அவர் தனது வாதத்திறமையால் வென்று, அவற்றை ஒன்றாகத் தொகுத்து ஆறு பெரும்பிரிவுகளாகச் செய்து அதற்கு ஷண்மதம் என்று பெயர் சூட்டினார்.
 
சைவம், வைஷ்ணவம், சாந்தம், கௌமாரம், சௌரம், காணாபத்யம் என்பவை அவை.
 
இதில் சாக்தம் என்பது அம்பிகையைத் தெய்வமாக கொண்டு வழிபாடு செய்யும் முறை.
 
உபநிடதம், வேதாந்தம் ஆகியவற்றுக்கும் பகவத்கீதைக்கும் விளக்கவுரைகள் எழுதிய சங்கரர், அத்வைத தத்துவத்தைத் தெளிவுபெறச் செய்தார். பல தெய்வங்களின் பெயரால் மிக அழகான உயரிய தத்துவங்களோடு கூடிய தோத்திரப்பாடல்களை இயற்றினார். அவற்றில் மிகச் சிறப்பாக சக்தியின் பெருமைகளைக் கூறும் விதமாக அமைந்தது சௌந்தர்ய லஹரி என்ற ஒப்புயர்வற்ற ஸ்தோத்திர நூல்.
 
சிறுமி, இளம்பெண், திருமணமான மங்கை, வயது முதிர்ந்த பெண் என்று பெண்மமையின் ஒவ்வொரு நிலையையும் வடிவங்களையம் பூசனை செய்கிறது சாக்தம், பாலா, கன்யாபூஜா, சுமங்கலி பூஜா. சுவாசினி பூஜா என்று பெண்ணின் அத்தனை பருவங்களும் சாக்தத்தில் முக்கிய இடம் பெற்று வழிபடப்படுகிறது. முக்கியமாக அம்பிகைக்கு உகந்த நவராத்திரி தினங்களில் இவ்வகை பூசைகள் தசெய்வது இகபர சுகங்களை அளிக்க வல்லது.
 
கல்விக்கு சரஸ்வதி, செல்வத்தின் தலைவி மகாலட்சுமி, வீரத்தின் தேவியாக பராசக்தி ஆகிய தேவிகளைப் போற்றும் விதமாக நவராத்திரி அமைந்துள்ளது.
 
சிவபெருமானின் வாசஸ்தலம் கையிலாயம், மகாவிஷ்ணுவின் இருப்பிடம் வைகுந்தம், அந்த வகையில் தேவியின் உறைவிடமாக ஸ்ரீ புரம் சொல்லப்படுகிறது.
 
அம்பிகையின் வழிபாட்டில் இருவகைகள் இருக்கின்றன. அவை வாமாசாரம் அல்லது சமயாசாரம் மற்றொன்ற தட்சிணாசாரம். இதில் வாமாசாரம் என்பது உள்முகமாக தேவியை உபாசனை செய்வது. குண்டலினி யோகம் மூலமாக தேவியை உபாசனை செய்து வழிபாடு செய்வது இந்த முறை. இதில் மந்திரசித்தி முதலாக சமாதி வரையில் 30 நிலைகள் இருப்பதாகத் தெரிகிறது. யோகசாதனை மார்க்கத்தில் ஸ்ரீ வித்யா மார்க்கமே சிறந்ததும் பாதுகாப்பானதும் ஆகும். சாக்தமும் உபாசனா முறைகளில் ஸ்ரீ வித்யா மார்க்கத்தையே தலைசிறந்ததாகப் போற்றுகிறது.
 
தட்சிணாசாரம் என்பது மூன்று வகைப்படும். அவை
 
மந்திரம், யந்திரம் மற்றும் தந்திரம் என்பன. மந்திரங்களை உச்சரித்து தேவியைப் பூஜித்தல், ஸ்ரீ சக்கரம், ஸ்ரீ மகாமேரு முதலிய யந்திரங்களைப் பூஜித்தல், தாந்திரிக முறைப்படி முத்திரைகளைப் பிரயோகித்து தேவியைப் பூஜித்தல் என்பவை.
 
தங்கம், வெள்ளி, தாமிரம் ஆகிய தகடுகளில் ஸ்ரீ சக்கரத்தை வரைந்து அதனுடன் தான்வேறு, மந்திரம் வேறு என்ற பேதம் இல்லாமல் மனமும், உடலும் ஒன்றிப் போய் அம்பாளை பூசை செய்வது மிச்ரம் எனப்படும். இது சமயாசாரம் எனப்படும்.
 
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் முதலான நூல்களில் கௌலமார்க்கம் சொல்லப்பட்டுள்ளது. இந்த கௌலமார்க்கம் என்பது குலம் என்ற வேர்ச்சொல்லின் அடிப்படையில் இருந்து தோன்றியதாகச் சிலர் கருதுகின்றனர். அவரவர் குலவழக்கப்படி அம்பிகையை வழிபாடு செய்வது இந்த முறை. புலனடக்கம், பற்றில்லாத நிலை ஆகியவை முக்கியமாக கௌலமார்க்கத்தில் அனுசரிக்கப்பட வேண்டும். சாதாரண மனிதர்களினால் இந்த முறையைப் பின்பற்ற முடியாது என்றும் எல்லோருக்கும் உகந்தது சமயமார்க்கமே என்பதும் சிலரது கருத்து.
 
சனகாதி முனிவர்களும், துர்வாச மகரிஷியும் சமய மார்க்கத்தையே அனுஷ்டித்தனர். ஆதிசங்கரர் இந்த மார்க்கத்தைப் பின்பற்றியே ஸ்ரீ சக்கரவழிபாட்டை பல இடங்களில் ஸ்தாபித்தார். இந்தப் பூஜை முறையை சௌந்தர்ய லஹரி, தேவி புஜங்கம், பவானி புஜங்கம் போன்ற நூல்கள் போற்றிக் கூறுகின்றன.
 
ஆதிபராசக்தியின் வடிவமான ஸ்ரீ லலிதாம்பிகை தேவர்களைத் தொல்லைப்படுத்தி வந்த பண்டாசுரனை வெல்ல சிதக்னி குண்டத்தில் தோன்றி அவனுடன் போரிட்டு வெற்றி பெறுகிறாள். தேவர்கள் தேவியின் அடிபணிந்து போற்றுகின்றனர். ஸ்ரீபுரத்தில் தேவி தன் கணவனான காமேஸ்வரனுடன் இணைந்து அமர்ந்திருக்கும் கோலத்தில் வசினி முதலான வாக்தேவதைகளினால் துதிக்கப்படுகிறாள். தேவதைகள் அம்பிகையைத் துதித்து சொன்ன தோத்திரங்களே லலிதா சஹஸ்ரநாமம். இது மிகச் சிறப்பு வாய்ந்தது. இது அம்பிகையின் சர்வ வியாகபகத்தன்மையைப் போற்றும் விதமாக அமைந்திருக்கிறது.
 
- வேணுசீனிவாசன்