நாகமரமாய் வளர்ந்த முனிவர்!
முனிவர் ஒருவர் பலப்பல சிவாலயங்களையும் தரிசித்து வழிபட்டு திருவானைக்கா அடைந்தார். நாகமரத்தடியில் இருந்த செழுநீர்த்திரனைக் கண்டு தொழுது வணங்கினார். ஜம்புலிங்கத்தை வெள்ளை யானை நாள்தோறும் வழிபடுவதைக் கண்டு அங்கேயே தங்கினார். பரம்பொருளுக்கு நிழல் தரும் நாவல் மரத்தைக் கண்டு அது போன்று தானும் நாக மரமாகித் தொண்டு செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். நாவல் மரத்தடியில் அமர்ந்து சிவ நினைவில் முழுகி அன்ன ஆகாரம் இல்லாமல் பல நாட்கள் தவம் புரிந்தார்.
ஒரு நாள் நாவல் மரத்திலிருந்து ஒரு பழம் ஈசன் திருவருளால் அவர் கரத்தில் விழுந்தது. முனிவர் ஜம்புகேஸ்வரரின் திருநாமம் ஓதி அந்தப் பழத்தை உட்கொண்டார்.
முனிவரின் உடலில் நாக மரம் வளர லாயிற்று. நாக மரமாக வளர்ந்த முனிவர் விரும்பிய காலம் வரையிலும் தண்ணீர் பெருமானுக்கு நிழல் தந்து தொண்டு செய்த பின்னர் தீர்த்த நாயகனின் திருவருளால் முக்தி பெற்றுச் சிவலோகம் சேர்ந்தார். ஜம்பு மரமாக இருந்து பராபரனுக்குத் தொண்டு செய்ததால் அந்த முனிவர் ஜம்பு முனிவர் என்று புகழ் பெற்றார். ஜம்பு முனிவர் சிவ பூஜைக்காக உண்டாக்கிய நீர்நிலை ஜம்பு தீர்த்தம் என்ற பெயரில் உள்ளது.
திருவானைக்காவில் மூலவரான ஜம்புலிங்கப் பரம்பொருள் இன்றும் வெண்ணாவல் மரத்தடி யிலேயே இருப்பது இத்திருத்தலத்தின் தனிச்சிறப்பு லிங்க மெய்ப்பொருள் எழுந்தருளி யுள்ள கர்பக் கிருகத்தின் பின்புறம் திறந்த வெளியாக உள்ளது. இரும்புத் தண்டுகளின் வழியே மேலே பார்த்தால் புனித நாக மரத்தைக் காணலாம். யானை செல்ல முடியாதவாறு கோச்செங்கணான் கட்டிய பல்வேறு மாடக்கோயில்களில் உள்ளது போன்று திருவானைக்காவிலும் ஜலகண்டேஸ்வரரின் வாசம் நேராக இல்லாமல் பக்கத்தே உள்ளது. ஜம்புலிங்கம் உள்ள கருவறை மாடமாக உயரமாக இல்லாமல் மரத்தடியில் தரையில் உள்ளதால் யானை நுழைய முடியாதபடி வாசல் மிகவும் குள்ளமாகவும் குறுகலாகவும் உள்ளது. மனிதர்களே குனிந்து கொண்டு வணங்கிய வண்ணம்தான் செல்ல முடியும்.
செழுநீர்த் திரளாகிய ஜம்புலிங்கத்திற்கு எதிரேயுள்ள சுவற்றில் ஒன்பது துவாரங்கள் உள்ளன. இந்த துளைகளின் வழியாக தண்ணீர் பரம்பொருளை தரிசனம் செய்யலாம்.
சென்று ஆடும் தீர்த்தங்கள் ஆனார் தாமே (அப்பர்)
பிறவித்துயர் கெட நாம் ஆர்த்து ஆடும் தீர்த்தன் (திருவாசகம்)
என்று தீர்த்தமாக எழுந்தருளிய லிங்கப்பரம் பொருளிலிருந்து சதா சர்வ காலமும் நீர் ஊறிக் கொண்டிருப்பதால் ஓங்கார லிங்கப் பரம்பொருள் ஈரமாகவே உள்ளது. லிங்கத்தைச் சுற்றி எப்பொழுதும் நீர் இருப்பதாலேயே ஜலகண்டேஸ்வரர் என்று திருநாமம் உண்டாயிற்று.
தீர்த்த லிங்கத்தைச் சுற்றித் தேங்கும் நீர் வெளியேறும் வகையில் கோயில் அமைப்பு உள்ள தன்மை வியக்க வைக்கும் ஒன்று. வழக்கமாக உள்ள கொடிமரமே அல்லாமல் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் எட்டு திசைகளுக்குள் எட்டு திசைகளுக்கும் எட்டு துவஜஸ்தம்பங்கள் காணப்படுவது மற்ற ஆலயங்களில் இல்லாத தனிச் சிறப்பு. இந்த எட்டு கொடிக்கம்பங்களும் எட்டு திசைகளைத் தாங்கும் எட்டு யானைகளையும் எட்டு திக்பாலகர்களையும் காட்டுகின்றன. மற்ற ஈஸ்வர ஆலயங்களில் கர்பக்கிருகத்தின் பின்புறச் சுவற்றில் எழுந்தருளியிருக்கும் பெரிய பெருமானான லிங்கோற்பவர் இங்கு பிரகாரத்தில் உள்ளார்.
யானை பூஜை செய்து மீண்டும் வந்து பிறக்காமல் முக்தி பெற்றுச் சிவலோகம் சேர்ந்த திருவானைக்காவில் பராசக்தி நாள்தோறும் சிரத்தையுடன் சிவ நினைவில் முழுகி சிந்தனை வேறு எங்கும் சிதறாமல் பக்தியுடன் ஜம்புலிங்கத்தைப் பூஜை செய்து வாழ்கின்றான். மூல முழு முதற்பொருளின் அபிஷேகத்திற்காகப் பால், தயிர், வெண்ணெய், நெய், திருநீறு ஆகிய பஞ்ச கவ்வியம் எனப்படும் ஐந்து அபிசேகப் பொருட்களை அளிக்கும் புனிதப் பிறவியான கோமாதாவையும் அம்மன் பூஜித்து மகிழ்ந்தாள்.
காமாட்சியம்மனுக்கு ஏகாம்பரேஸ்வரர் அருளிச் செய்த வரத்திற்கு ஏற்ப திருவானைக்கா வில் பராசக்தி எந்தவிதமான தடையும் இல்லாமல் பூஜைக்குப் பாதிப்பு இல்லாமல் வேறு சிந்தனையில்லாமல் சிவ நினைவுடன் மந்திரங்களை ஓதி ஆத்ம திருப்தியுடன் நித்தமும் சிவபூஜை செய்கின்றாள். இதைக் காட்டும் வகையில் சிவாச்சாரியார் உச்சிக் காலப் பூஜையின் போது அம்மன் போன்று புடவை யணிந்து ஜம்புலிங்கப் பரம்பொருளையும் கோமாதாவையும் பூஜை செய்கின்றார்.
லிங்கப் பரம்பொருள் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் வலதுபக்கமாக ஜலகண்டேஸ்வரர் இருக்கும் திசையை நோக்கியவாறு அம்மன் சன்னதி அமைந்துள்ளது. அம்மன் கரத்தில் சிவபூஜைக்காக இரண்டு தாமரை மலர்களை ஏந்தியவண்ணம் உள்ளாள். சிவபூஜை செய்யும் அம்பிகைக்கு இன்மொழித் தேவி என்று திருநாமம்.
- டொக்டர் சிவப்பிரியா