பஞ்சலோகத்தின் மூலமாக கிரக சக்திகள்!

பஞ்சலோகத்தின் மூலமாக கிரக சக்திகள்!

பஞ்சலோகத்தின் மூலம் ஐந்து கிரகங்களின் சக்தி வெளிப்படுவதாக நமது முன்னோர்கள் கண்டுள்ளனர். அவர்களது கருத்தின்படி, பஞ்சலோகத்தில் உள்ள தங்கம் குருவின் சக்தியையும், வெள்ளி சுக்ரனின் சக்தியையும், செம்பு சூரியனின் சக்தியையும், இரும்பு சனியின் சக்தியையும், ஈயம் கேதுவின் சக்தியையும் வெளிப்படுத்துகிறது. 
 
வியாழன் எனப்படும் குரு கிரகத்தின் ஆற்றலை பெற தங்கத்தையும், சனி கிரகத்தின் ஆற்றலை பெற இரும்பையும், சுக்ரன் என்ற வெள்ளி கிரகத்தின் ஆற்றலை பெற வெள்ளியையும், சூரிய கிரகத்தின் ஆற்றலை பெற செம்பையும், கேது கிரகத்தின் ஆற்றலை பெற ஈயத்தையும் பயன்படுத்துவது நமது முன்னோர்களது அறிவியல் சார்ந்த பார்வையாக இருந்து வந்தது. நவக்கிரகங்களின் அலை இயக்கமானது மனிதர்களது சுபாவத்தையும், அவர்களது செயல்களையும் தீர்மானிக்கிறது என்பதை ஜோதிடம் என்ற விஞ்ஞானத்தின் வாயிலாக அறிகிறோம். பஞ்சலோகம் அல்லது அஷ்டலோகம் கொண்டு செய்யப்பட்ட மோதிரம் அல்லது காப்பு வடிவத்தில் அணிந்தால் சம்பந்தப்பட்ட கிரக ஆற்றலை அது ஈர்ப்பதாக அமைகிறது. 

ஈயம்:
 
மனித உடலுக்கு பாதிப்பை உண்டாக்கும் ஆபத்தான உலோகம் என்று எல்லோராலும் சொல்லப்படுகிறது ஈயம். ஆனால், இதிலுள்ள நன்மையானது, ஐம்பொன்னில் மற்ற உலோகத்தோடு கலந்து இருப்பதன் வாயிலாக வெளிப்படுகிறது. ஈயத்திலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சானது மனிதர்களது ஆன்மிக சிந்தனையை தூண்டும் விதமாகவும், மனித உயிர் சக்தியை பாதுகாக்கும் விதத்தில் செயல்படுவதாகவும் கருதப்படுகிறது. 

தங்கம்:
 
பொன் என்ற தங்கத்தை அணிபவர்கள், தங்களது எண்ண அலைகளை பிரபஞ்சத்தில் உள்ள குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்ப இயலும் என்று சொல்லப்படுகிறது. பழைய காலங்களில் மக்கள் தங்கம் அணிந்து கொண்டு கோவிலுக்கு சென்று தனது பிரார்த்தனைகளை கடவுளிடம் தெரிவிப்பதோடு, கடவுள் சிலைகளுக்கும் தங்க நகைகளை அணிவிப்பது வழக்கம். விஞ்ஞான முறையிலான தந்திர யோக தத்துவத்தில், கடவுள் சிலைகள் பிரபஞ்சத்தின் நுழைவு வாயிலாக கருதப்படுகிறது. நம்முடைய பிரார்த்தனைகள் அங்கு வைக்கப்படும்போது, அவை பிரபஞ்சத்தின் மூலசக்தியிடம் சேர்வதாக ஐதீகம். 
 
வெள்ளி:
 
ரஜதம் என்று சொல்லப்படும் வெள்ளியை பயன்படுத்தியும் எண்ண அலைகளை குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்ப இயலும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் நடைமுறையில் இந்த முறையானது அவ்வளவாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. காரணம், வெள்ளியின் அலைவீச்சு தங்கத்தை விட குறைந்த அளவில் இருக்கிறது. ஆனால், வெள்ளியானது சுக்ர சம்பந்தம் கொண்டதாக இருப்பதால் உள்ளத்தில் பெருகும் உணர்வு அலைகளை கட்டுப்படுத்துகிறது. 
 
செம்பு:
 
செம்பின் மிதமான உஷ்ணத்தன்மை, உயிருக்கும், உடலுக்கும் ஆற்றலை தரக் கூடியது. மனித உடலின் பிராண சக்தி மண்டலம் மற்றும் மூளையின் செயல்பாடு ஆகியவற்றை கச்சிதமாக இயக்கும் திறன் செம்புக்கு இருக்கிறது. செம்பு பாத்திரத்தில் ஊற்றி வைக்கப்பட்ட தண்ணீரை அருந்தினால் அல்லது சமையலுக்கு பயன்படுத்தினால் உடலுக்கு சக்தி கிடைக்கிறது. பழைய காலங்களில் செம்பு கெண்டியில் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுப்பது வழக்கம். அதனால் அவர்களது ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதாக கருதப்பட்டது. காலப்போக்கில் அப்பழக்கம் மறைந்துபோய்விட்டது. முதல் நாள் இரவு செம்பு பாத்திரத்தில் வைத்த நீரை மறுநாள் காலையில் பருகுவதால் புத்துணர்ச்சி கிடைப்பதாகவும் தகவல் உண்டு. 

இரும்பு:
 
எதிர்மறை சக்தி கொண்ட உலோகமாக இரும்பு இருக்கிறது. ஆனால், பல நல்ல காரியங்களுக்காக நமது முன்னோர்களால் இரும்பு பயன்படுத்தப்பட்டது. அதாவது, இரவு நேரங்களில் வெளியில் செல்ல நேரும்போது தீய சக்திகள் நெருங்காமல் இருக்க இரும்பு துண்டுகளை எடுத்து செல்வது வழக்கமாக இருந்தது. ‘இடி இடிக்கும்போது இரும்பை எடுத்து முற்றத்தில் வை..’ என்றொரு பழமொழி உண்டு. அதாவது, மின்னல் ஏற்படும்போது இரும்பை முற்றத்தில் வைத்தால் இரும்பின் ஈர்ப்பு சக்தியானது காற்றின் வாயிலாக வரும் மின்காந்த ஆற்றலை தன்பால் ஈர்த்து கொண்டு இடியை விலக்கிவிடும் என்பதாகும். மற்ற உலோகங்களோடு தக்க விதத்தில் இரும்பை கலந்து பயன்படுத்தினால் நன்மைகள் உண்டாகும்.