நாராயணா எனும் நலம் தரும் நாமம்!

நாராயணா எனும் நலம் தரும் நாமம்!

எல்லோருக்கும் நலத்தைக் கொடுக்கும்படியான சொல் நாராயணா என்னும் நாமம்.

 
அவன் நாமத்தைச் சொல்வதால் - அறிந்தும் அறியாமலும் சொல்வதால் ஏற்படும் பலன்களை நமது புராணங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
 
அஜாமினன் என்பவன் கெட்ட ஸ்த்ரீயின் சேர்ககையை உடையவனாக இருந்து அவளிடம் பத்து பிள்ளைகளைப் பெற்றான். அவனுக்கு அந்திமக்காலம் நெருக்கிற்று. யமகிங்கரர்கள் அவனை அழைத்துச் செல்ல வந்த போது நடுநடுங்கினான்.
 
தூரத்தில் இருந்த தன்னுடைய கடைசிப் பிள்ளையை - அவனது பெயரான “நாராயணா” என்னும் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டான். அடுத்த கணமே விஷ்ணு தூதர்கள் நால்வர் அங்கு தோன்றி யமகிங்கரர்களுடன் வாதாடி அவனைக் காப்பாற்றி விட்டனர். பிறகு அஜாமிளனிடம் அவர்கள் “வேடிக்கையாகவோ கேலிப்பேச்சாகவோ, கோபமாகவோ, ஸந்தோஷமாகவோ, தெரிந்தோ தெரியாமலோ, பகவானுடைய திருநாமத்தைச் சொல்லக் கூடியவர்களுக்குக் கட்டாயம் நற்பலன் உண்டு” என்றார்கள்.
 
அஜாமிளன் மனந்திருந்தினான். அவனுக்கு வைகுண்டப் பதவி கிடைத்தது.
 
என்னே, அந்த நாராயண நாமத்தின் மகிமை!
 
இந்த இடத்தில் ஒரு கேள்வி!
 
அப்படியென்றால் என்ன - பாவம் வேண்டுமானாலும் செய்யலாம். இறக்கும் தறுவாயில் இறைவன் நாமத்தை உச்சரித்தால் அந்த பாவங்கள் அனைத்தும் தொலைந்து விடுமா? என்று கேட்கலாம்.
 
உயிர் பிரியும் நேரத்தில் நல்ல நினைவோடு நாக்குழறாமல் “நாராயணா” என்று உச்சரிக்க முடியுமானால் நிச்சயம் பாபங்கள் எல்லாம் தொலையும்.
 
அதாவது உயிர் பிரியும் நிலையிலும் இறைவன் நாமத்தை ஒருவனால் தெளிவாக உச்சரிக்க முடியுமானால் அவன் பாபங்களைச் செய்திருக்க முடியாது.
 
அஜாமின சரித்திரம் கேட்ட ஒருவன் - தானும் வாழ்நாள் முழுவதும் மனம் போல வாழ்ந்துவிட்டு இறக்கும் தறுவாயில் “நாராயணா” என்று சொல்லிவிட்டு வைகுண்டம் போய்விடலாம் என்று எண்ணி பாப கர்மாக்களைச் செய்யத் தொடங்கினான்.
 
இறக்கும்போது மறக்காமல் “நாராயணா” என்று சொல்வதற்காக - தன் மனைவி, பிள்ளைகளை அழைத்து “என் அந்திமக் காலத்தில் நான் நாராயணா என்று சொல்ல மறந்துவிட்டால் நீங்கள் தான் எனக்கு அப்பெயரைச் சொல்லச் சொல்லி நினைவூட்ட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான்.
 
அவனுடைய அந்திமநேரம் அருகில் வந்தது.  நாராயணா என்று சொல்ல வேண்டும் என்ற நினைவும் வந்தது. ஆனால் நாக்குப் புரளவில்லை. மரத்துவிட்டது. உச்சரிக்க முடியவில்லை மலங்க மலங்க விழித்தான் மனைவி, மக்களை சைகையால் அருகே அழைத்தான். அவர்களும் அவன் காதருகே போய், “அந்த வார்ததையைச் சொல்லித் தொலை” என்றனர்.
 
தன் காதுபடவாவது அவர்கள், “நாராயணா” என்று சொல்லமாட்டார்களா என்று ஏங்கினான்.
 
அவர்கள், “அந்த வார்த்தை” என்று மட்டும்தான் சொன்னார்களே தவிர “நாராயணா” என்று சொல்லவேயில்லை.
 
அப்போதைக்கு இப்போதே
 
ஏனெனில் உயிர்பிரியும் தருணத்தில் சொல்ல வேண்டிய வார்த்தை அது என்று அவர்கள் தவறாக நினைத்ததால் எங்கே நாராயணா என்று சொன்னால் தங்கள் ப்ராணன் போய்விடுமோ என்று பயந்து விட்டார்கள் அவர்கள்.
 
ஆகவே “நாராயணா” நாமத்தை உயிர் இருக்கும் போதே உடல் இயக்கம் இருக்கும் போதே சொல்லிச் சொல்லிப் பழக வேண்டும். இதைத்தான் பெரியாழ்வார்,
 
எய்ப்பென்னை வந்து நலியும் போது,
அங்கேதும் உன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்,
அரங்கத்தரவணைப் பள்ளியானே!
 
என்றார்.
 
தெரியாமலே அவன் நாமத்தை உச்சரித்தவனுக்கே நற்கதி என்றால், உள்ளன்புடன் உள்ளம் உருகி பக்தியுடன் சொல்லக்கூடியவர்களுக்கு ஏற்படும் பெரும்பலன்களை வார்தைகளால் வர்ணிக்க இயலுமா?
 
வர்ணிக்க இயலாத இந்த நாராயண நாமத்தின் மஹிமையை தமது திருவார்த்தைகளாலே சொல்ல முயன்றார் திருமங்கையாழ்வார்.
 
குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார்படுதுயர் ஆயினவெல்லாம்
நிலம்தரம் செய்யும் நீள்விசும்பருளும்
அருளோடு பெருநிலமளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும்
பெற்றதாயினும் ஆயின செய்யும்
நலம்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்
 
வாழ்வைப் பாழாக்கி பல்விழந்து சொல்லிழந்து முதுமையால் நாடி நரம்புகள் தளர்ந்து நிற்கும் - வயோதிகப் பருவத்தில் அவனது இந்த நாமத்தைச் சொல்ல இயலாமல் போகலாம்.
 
எனவே பகவான் பெயரைக் காலத்தே சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னோமானால் அது நம்மை அடியார்கள் திருக்கூட்டத்தில் - திருக்குலத்தில் சேர்க்கும்.
 
செல்வத்தை - அழியாத செல்வத்தையும் கொடுக்கும் “நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்” என்றாள் கோதை. இம்மையில் பொருட்செல்வத்தையும் மறுமையில் அருட்செல்வத்தையும் தரும்.
 
அடியார்கள் படும் துயர்களைக் களையும் இந்த நாமம். துன்பங்களிலேயே மோசமான துன்பம் - பிறவிப் பெருங்கடலில் தத்தளிப்பதுதான். பிறவித் துயர் நீக்கும் அருமருந்து இந்த நாமம்.
 
ஈன்ற தாயன்பைக் காட்டிலும் நம்மிடம் அன்புடைய சொல் இது.
 
- ஆர்.பி.வி.எஸ்.மணியன்