பெண் வித்யா மாயையின் சொரூபம்!

பெண் வித்யா மாயையின் சொரூபம்!

உலக வழக்கத்தில்தான் சிலர் ஆண் - பெண் என்ற உயர்வு தாழ்வு பேசுகிறார்கள். இறைவன் முன்னிலையில் பக்தி செய்பவர்களுக்கிடையில் அந்த ஏற்றத் தாழ்வு அறவே இல்லை.
 
பெண்களும் உத்தமமான பதவியை பராம்கதியை அடைவார்கள். இதை, “தே அபியாந்தி பராம்கதிம்” என்று கீதை (9-32) கூறுகிறது. இதற்கு உதாரணமாக ஆண்டாள், மீராபாய், அவ்வையார், காரைக்கால் அம்மையார், ஸ்ரீசாரதாதேவியார் போன்று எத்தனையோ பேரைச் சொல்லலாம்.
 
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரைப் போன்றவர்கள் பெண்களைச் சாட்சாத் அம்பிகையின் சொரூபமாகவே கண்டார்கள்.
 
இறைவனிடம் அழைத்துச் செல்லும் வகையில், மனிதனின் ஆன்மிக முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும் பெண் வித்யா மாயையின் சொருபமாவாள்.
 
இறைவனிடமிருந்து விலகச் செய்து மனிதனை உலகயில் பந்தங்களுக்கு உட்படுத்தும் பெண் அவித்யா மாயையின் சொரூபமாவாள்.
 
பெண்களில் வித்யா மாயைச் சேர்ந்த பெண்கள், அவித்யா மாயையைச் சேர்ந்த பெண்கள் என்று இரண்டு பிரிவினர் இருப்பது போலவே ஆண்களிலும் வித்யா மாயையைச் சேர்நத ஆண்கள், அவித்யா மாயையைச் சேர்ந்த ஆண்கள் என்று இரண்டு பிரிவினர் இருக்கவே செய்கிறார்கள்.
 
உறுதிப்பாடு, விடாமுயற்சி, உழைப்பு, அறிவாற்றல், துணிவு, நிர்வாகத்திறமை, வீரம், ஆளுமைப்பண்புகள் போன்ற ஆன்மிக வாழ்க்கைக்கு இன்றியமையாத தன்மைகள் நிறைந்த பெண் ஆன்மிகப் பார்வையில் ஆண் என்று கருதுவதற்கு உரியவள். இதற்கு நம் நாட்டில் மைத்திரேயி, கார்கி போன்ற பெண்கள் பிரம்ம ஞானிகளாகக் கருதப்படுவதே பிரமாணமாகும்.
 
- சுவாமி கமலாத்மானந்தர்