காவல் தெய்வமாய் கொல்லங்கோடு பத்ரகாளி!

காவல் தெய்வமாய் கொல்லங்கோடு பத்ரகாளி!

அமைவிடம் - கன்யாகுமரி - கேரள எல்லையான கனியக்கா விளையிலிருந்து பதிமூன்று கி.மீட்டர் தெற்கே அரபிக் கடலையொட்டி இந்த கிராமம் இருக்கிறது. வட்ட வளையில் ஊரைவிட்டு சற்று ஒதுங்கி தென்னந் தோப்பின் மத்தியில் அமைந்த ஆலயம் இது.
 
எண்ணூறு ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். கொல்லங்கோடு பகுதியில் பரம்பரை பெருமையுடைய பதினோரு நாயர் குடும்பத்தினருக்கு சொந்தமானது இந்தக் கோவில்.
 
கொல்லங்கோடு பத்ரகாளிக்கு செலுத்தப்படும் நேர்த்திக் கடன்களையும் அவளின் சிறப்பையும் பின்வரும் உரையாடல்களின் மூலம் உணரலாம்.
 
“கொல்லங்கோட்டு அம்மே! குழந்தை உசிர் பிழைக்கட்டும். தூக்க் நேர்ச்சை எடுக்கறேன்” என்று மனமுருகி வேண்டிக் கொண்டாள் பகவதி.
 
வலிப்பு வந்து இழுத்துக் கொண்டிருந்த குழந்தை அடுத்த வேளை மருந்து சாப்பிட்டதுமே குணமாகியது. அதன் பிறகு காய்ச்சலும் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கியது.
 
“நீ இந்த வருசம்  திருவிழாவுக்குப் போயிட்டுவா. இப்பவே உன் பையனுக்கு ஒரு வயசாகப் போகுது. நான் அடுத்த வருசம் தான் நேர்த்திக்கடனை செலுத்த முடியும்” என்று தமக்கை பகவதியை வழியனுப்பி வைத்தாள் தங்கை பேச்சியம்மா.
 
ஏனெனில் அவள் இப்போது எட்டு மாத கர்ப்பிணி குழந்தை பிறந்து பிறந்து இறந்ததால் அவளும் கொல்லங்கோடு பத்ரகாளிக்கு நேர்ந்து கொண்டிருந்தாள். அதுமட்டுமல்ல! ஆறு வருஷமாகக் குழந்தையில்லாமலிருந்து அம்மன் அருளால் மகப்பேறடைந்த பாவாயியும் தன் பிள்ளையுடன் பகவதியோடு புறப்பட்டாள்.
 
“ஆடி ஆத்தி! என்னா கூட்டம்! போன தடவையெ ஆயிரம் குழந்தைக்கு மேலே வந்ததுன்னாங்களே! இந்த தடவை அதைவிட அதிகமாயிருக்கும் போலே!” என்று வியந்தாள் பாவாயி.
 
“எங்க வீட்டுகாரங்கள் கூட நேர்ச்சை விரதம் இருந்து புள்ளை தூக்கறாங்க. ஆனால் சொந்தக்காரங்க தூக்க முடியாதே! நாம வேற ஆளைத்தான் பதிவு செய்யோனும்” என்றாள் பகவதி.
 
“அத்தாச்சி! காக்கி கலர் டிரௌசர் போட்டு, சிவப்பா தலைப்பா கட்டி அதிலே மரிக்கொழுந்து சொருகி கையிலே குச்சியோட வரிசையா நிக்கறாங்களே, அவங்கல்லாம் யாரு?” என்று ஆர்வமாக வினவினாள் திருவிழாப் பார்க்க ஊரிலிருந்து வந்திருந்த செல்லாயி.
 
“அவுகதான் தூக்கக் காரவுக. பத்து நாள் திருவிழாவிலே நாலாம் நாளிலிருந்து தூக்கக்காரர்கள் விரதம் இருக்கோணும். கோவில் வளாகத்திலே தான் இருக்கணும். ஏழு நாளும் கோயில் பிரசாதம் அளவா கொடுப்பாங்க. மரிக்கொளுந்து வாசம் ஆத்தாளுக்குப் புடிக்கும் என்பதாலேயே தலையில சொருகியிருக்காங்க. காக்கி டிரவுசரும் தலைப்பாவும் அடையாளம் தெரிய, அவுகளா தூக்கறாங்க! அவுகளுக்குள்ளேயிருந்து ஆத்தாவுல்லே தூக்கி ஆசீர்வாதம் பண்றா! ஒருத்தர் ஒரு குழந்தை தான் தூக்கலாம்! கோயில்லே போயி குழந்தை பெயரையும் நேர்ச்சைக்குப் பதிவு பண்ணினா தூக்கப் போற ஆள் பெயரை அதோட அவுக பதிவு பண்ணி ஆளை அடையாளம் காட்டுவாங்க. வா போகலாம். காலையிலே ஆறு மணிக்கே ஆரம்பிச்சுட்டாங்க கும்பலைப் பார்த்தா விளக்கு பொருத்திடும் போலருக்கே” என்றபடி நடந்தாள் பகவதி.
 
கட்டணத்தைக் கட்டிப் பதிவு செய்து கொண்டு தூக்கக்காரரோடு அவர்கள் காத்திருந்தனர்.
 
நான்கு மரச்சக்கரங்களுடன் கூடிய ரதம் போன்ற ஒரு அமைப்பே தூக்க வண்டியாகும். அதன் உச்சியில் நீளமான இரண்டு வில்கள் (கம்பு) பொருத்தப்பட்டுள்ளன. வில்களின் நுனியில் குறுக்கு வாட்டில் தலா இரண்டு மார்ச் சட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 
நான்கு தூக்கக்காரர்களை மார்பிலும் இடுப்பிலும் வஸ்திரத்தால் பிணைத்து அந்த மரச்சட்டங்களில் தொங்க விடுகிறார்கள். அவர்களின் கழுத்தில் மாலை, புஜத்தில் பூ சுற்றப்பட்டுள்ளது. வில்லில் பூட்டும் முன்பு அவர்களின் விலாப்புறத்தில் வெள்ளி ஊசியால் குத்தி துளி உதிரம் எடுத்து, அதை ஊசியுடன் ஒரு தண்ணீருள்ள பாத்திரத்தில் போடுகிறார்கள். இப்படி ஆயிரக்கணக்கான தூக்கக்காரர்களின் இரத்தத்தை விழா முடிந்ததும் தூக்கும் வண்டியின் அருகில் கொட்டுகிறார்கள். இது “குருதி தர்ப்பணம்” எனப்படுகிறது. “அம்மனோடு தூக்கக்காரர்கள் இணைவதன் அடையாளம் இது” என்கினறனர்.
 
மரச்சட்டங்களில் அவர்கள் கட்டப்பட்டதும் அவர்கள் கைகளில் குழந்தை கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு வில்களில் பின் பகுதியை கயிற்றால் பிணைந்து சிலர் கீழே இழுக்கிறார்கள். இதனால் முன்பகுதி சரேலென மேலே போகிறது. இப்போது நான்கு தூக்கக்காரர்கள் குழந்தைகளோடு நாற்பதடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்! சுற்றி நிற்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், குலவையிடுகின்றவர்களும், “ஆத்தா! காளியம்மா” என்று கோஷம் போடுகிறவர்களுமாக ஒரே ஆரவாரமாயிருக்கும்.
 
செண்டை மேளம் சப்தத்தில் நூற்றுக்கணக்கான வாலிபர்கள் வடம் பிடித்து இழுக்க தூக்கத் தேர் கோவிலை வலம் வருகிறது.
 
ஒரு சுற்று முடிந்ததும் தூக்கக் காரர்களிடமிருந்து குழந்தையை உரியவர் பெற்றுக் கொள்ள, அடுத்த நான்கு நபர்கள் தூக்கவண்டியில் பிணைக்கப்படுகின்றனர்.
 
அந்தரத்தில் குழந்தைகளைத் தூக்கிச் சென்றபடி வழிபடுவதால் இதற்குத் தூக்கத் திருவிழா என்று பெயர். சந்தான பாக்கியம் வேண்டி ஏராளமானோர் தூக்க நேர்ச்சைக்கு நேர்ந்து கொள்கிறார்கள்.
 
தூக்க நேர்ச்சியின் ஐதீகம் எஎன்னவென்றால் தாரியாசுரனை சம்ஹாரம் செய்த பிறகும் பத்ரகாளியின் சினம் அடங்கவில்லையாம். அம்மனை சாந்தி பெறச் செய்ய ரத்தக் குறி காண்பித்து கருடனைப் போல் சக்தியைச் சுற்றிப் பறந்து சென்று ஆராதிப்பதாக ஐதீகம் என்று சொல்லப்படுகிறது.
 
அம்மன் சநா்தமாகவம், ஆக்ரோஷமாகவம் இரு வேறு வடிவங்களில் அருகருகே அமர்ந்து அருள் புரிகிறார். தினமும் காலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்பட்டு 11.30 வரை தரிசனம், அர்ச்சனை, அபிஷேகம் நடக்கும்.
 
மாலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை பூஜை தூக்கத் திருவிழா “வெங்கஞ்சி” என்ற இடத்திலுள்ள கிளைக் கோவிலில் நடைபெறுகிறது. ஆறு மாதம் முதல் ஒரு வயது வரையிலான குழந்தைகளே தூக்க நேர்ச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றன.
 
“நாகப்பட்டினத்திலே நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலிலே இதே மாதிரி பார்த்திருக்கேன். அங்கே அந்தத் திருவிழாவை “செடில்” என்கிறாங்க” என்றபடி வழி நடந்தாள் செல்லாயி.
 
- ஆர். பொன்னம்மாள்