ரிக்வேத பாசுரங்களின் தந்தையாய் போற்றப்படும் கன்வ மகரிஷி

ரிக்வேத பாசுரங்களின் தந்தையாய் போற்றப்படும் கன்வ மகரிஷி

புராணங்களிலும், இதிகாசங்களிலும் ரிஷி புங்கவர்களும் மகரிஷிகளும் இந்த உலகுக்கு ஆற்றிய அரிய சேவைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன. மன்னர் காலங்களிலும் அதற்கு முந்திய காலங்களிலும், தவ யோகிகளின் முக்காலமும் உணர்ந்த பக்குவமான போதனைகளும், அறிவுரைகளும், நல்வழிபடுத்தலும் எல்லா மக்களுக்கும் உதவுவதாக இருந்தன. மனித வாழ்வை ஆன்மீக உணர்வுகளுடனும், தர்ம சிந்தனைகளுடனும் வழி நடத்துவதில் இவர்களின் பங்கு அளப்பரியதாக இருந்தது.

சில ரிஷிகள் தம்முடைய தவ வலிமையால் நீரில் நடப்பதும், பரகாய பிரவேசம் செய்வதும், ஒரே நேரத்தில் இரு வேறு இடங்களில் காட்சி தருவதும், மூன்று காலங்களுக்குமான தெளிவினை பெற்றிருப்பதும், நினைத்த நேரத்தில் ஆகாய வெளி பயணம் மேற்கொள்வதும் ஆகிய அரிய பல செயல்களை பிறரின் நலனுக்காக செய்தார்கள். முனிவர்கள் மற்றும் ரிஷிகளில் பலர் வருங்கால சந்ததியரின் நன்மையை கருத்தில் கொண்டு அரிய பல ஆன்மீக, வான சாஸ்திர, சோதிட, மருத்துவ நூல்களை எழுதி வைத்துள்ளார்கள், அவை இன்றளவும் நமக்கு குறைவின்றி பயன்பட்டு வருகின்றன.

 
புகழ் பெற்ற தவ வலிமை மிக்க ரிஷிகளில் ஒருவராக இருந்தவர் கன்வ மகரிஷி ஆவார். மனித குலத்திற்கு தேவையான பல அரிய பாசுரங்களை ரிக் வேதத்திலிருந்து எடுத்து உலகுக்கு கொடுத்திருக்கின்றார் இவர். கன்வ மகரிஷி. ஆங்கீரசர்களில் ஒருவரான கோராவின் புதல்வராவார். மகாபாரதத்தின் அயோத்யா காண்டத்தில், பசுமை மிக்க செடிகளும், கொடிகளும் நிறைந்த அழகிய சூழ்நிலையில் அமையப்பெற்றுள்ள கன்வ மகரிஷியின் ஆசிரமத்திற்கு செல்ல இருப்பதாக ராமர் சொல்வதை போன்று ஒரு செய்தி சொல்லப்பட்டுள்ளது. கன்வர்கள் கன்வ இனத்தின் வழி தோன்றல்களாக கருதப்படுகின்றார்கள். விஸ்வாமித்திர முனிவரின் மகளான சகுந்தலையையும், மேனகையையும் தன் ஆசிரமத்திலேயே வைத்து ஆதரவு அளித்து வந்தார் கன்வ மகரிஷி. கன்வரால் வளர்க்கப்பட்ட சகுந்தலையை துஷ்யந்த மகராஜன் திருமணம் செய்து கொண்டான். இவர்களுக்கு பிறந்த குழந்தை தான் பரதன். பரதனின் பெயரிலேயே இந்திய தேசம் பாரதமாக உருவெடுத்தது. கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் மிகுந்த தொடர்புடையவனாக பரதன் கருதப்படுகின்றான். இவன் மகாபாரத போரிலும் மிகுந்த ஈடுபாடுடன் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஒரு முறை யாதவ இளைஞர்கள் கன்வ மகரிஷி புண்படும்படியான ஒரு காரியத்தில் ஈடுபட்டனர். ஒரு நாள் இந்த யாதவ இளைஞர்கள் நர்மதா நதிக்கரை ஓரத்தில் அமைந்திருந்த கன்வ மகரிஷியின் ஆசிரமத்திற்கு சென்றார்கள். அப்போது கன்வ மகரிஷி ஆழ்ந்த தியானத்தில் மூழ்கியிருந்தார். அந்த சமயத்தில் பகவான் கிருஷ்ணரின் புதல்வனான சம்பா மற்றும் இதர சில இளைஞர்கள் கன்வருக்கு ஒரு சோதனையை ஏற்படுத்தி விட்டார்கள். சம்பா ஒரு உலக்கையை இடுப்பில் வைத்து துணியால் கட்டி கொண்டு கர்ப்பிணியை போல் நின்றான். இதர யாதவர்கள் கன்வ மகரிஷியிடம் சென்று எப்போது இந்த கர்ப்பிணிக்கு குழந்தை பிறக்கும் என்று கேட்டார்கள். இதைக் கேட்ட கன்வ மகரிஷி கடும் கோபத்திற்கு ஆளானார். எந்த உலக்கையை கொண்டு தன்னை முட்டாளாக்க இந்த யாதவர்கள் நினைத்தார்களோ அதே உலக்கையின் காரணமாக யாதவ குலம் அழிந்து போகட்டும் என்று சாபம் இட்டு விட்டார். நடந்த விபரங்களை யாதவ இளைஞர்கள் கிருஷ்ண பகவானிடம் தெரிவித்தார்கள். உடனே கிருஷ்ணர் அந்த இரும்பு உலக்கையை ஒரு குளத்தில் போட்டு விடும்படியாக கட்டளையிட்டார். அந்த இரும்பு உலக்கையின் ஒரு சிறு துளியானது ஒரு மீனால் விழுங்கப்பட்டது. அந்த மீன் ஒரு வேட்டைகாரானால் பிடிக்கப்பட்டு அந்த மீனின் உடம்பிலிருந்த உலக்கை துண்டை தன்னுடைய அம்பில் பொருத்திக் கொண்டான். 
 
விதி வலியது என்பதற்கிணங்க, உலக்கைத் துண்டால் பொருத்தப்பட்ட அம்பினை பகவான் கிருஷ்ணருடைய பாதத்திற்கே பயன்படுத்தும் துர்பலமான சூழ்நிலை கன்வ மகரிஷியின் சாபத்தை தொடர்ந்து உருவானது. இதற்கு முன்பாக கன்வ மகரிஷியின் சாபத்திற்கு ஏற்ப யாதவர்கள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டு ஒருவருக்கொருவர் கொன்று தீர்த்தார்கள்.  குளத்தில் கொட்டப்பட்ட உலக்கைத் தூள் ஒவ்வொன்றும் முதலில் புல்லாகவும் பின்னர் அவையே உலக்கைகளாகவும் உருவாகி யாதவர்கள் ஒருவொருக்கு ஒருவர் கொன்று தீர்த்துக் கொள்வதில் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. இப்படியாக கன்வ மகரிஷியின் சாபம் முழுவதுமாக பலித்து விட்டது. 
 
கன்வ மகரிஷியின் பெருமை பற்றியும், அவருடைய தவ வலிமையை பற்றியும், அவர் ரிக் வேதத்தின் மூலமாக உலகுக்கு அளித்த அறிவு பெட்டகமாய் போற்றப்படத்தக்க பாசுரங்களை பற்றியும் சிவபெருமான் பார்வதியிடம் எடுத்து சொல்கின்றார். இது பத்ம புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிக் வேதங்களிலிருந்து எடுத்து பிரிக்கப்பட்ட 1028 சூத்திரங்களை பத்து மண்டலாக பிரித்து வழங்கப்பட்டுள்ளது. சப்த மகரிஷிகள் என போற்றப்படுகின்ற ஏழு மகரிஷிகளில் ஒருவராக கன்வ மகரிஷியும் விளங்குகின்றார்.
 
- அபிநந்தன்