விக்கிரகங்களின் தத்துவம்!

விக்கிரகங்களின் தத்துவம்!

மனம் என்பது Consciousness ஆகும். உயிர்களோடு இயங்கும் காட்சி. யார் எந்தமுறையில் வணங்கினாலும் எதுவேண்டுமோ அந்த மாதிரி உருவத்தை வைத்துக் கொண்டு வணங்குகிறான். பூரணமான மெய்ப் பொருளிலிருந்து தான் வணங்குகிறான். பூரணமான மெய்ப் பொருளிலிருந்து தான் வணங்குகிறான். பூரணமான மெய்ப் பொருளிலிருந்து தான் எல்லாமே மனிதன் உள்பட எல்லா ஜீவராசிகளும் வந்தன. ஆனால் மனிதனிடம் மாத்திரம் எல்லாவித ஆற்றல்களும் அடங்கி இருக்கிறது. எனினும் மனிதன் அதனுடைய மனத்தை ஒழுங்கு படுத்துவதற்காகவே அல்லது உயர்த்திக்கொள்வதற்காகவோ கடவுளை சிருஷ்டிக்க ஆரம்பித்தான்.

இவனுடைய எண்ணம், குணங்கள். இவை எல்லாவற்றையும் கடவுள்ககு ஏற்றி வைத்தான். இவனுக்கு என்னென்ன தேவையோ அதையும் கடவுளுக்குத் தேவை என்று வைத்து அதற்கு ஆடைகள், ஆபரணங்கள், திருமணம், குழந்தைப்பேறு, சண்டை சச்சரவுகள் ஆகியவையெல்லாம் கடவுளுக்குச் செய்து வைத்தான். ஆனால் கடவுள் என்ற தத்துவத்திற்கு இது தேவையில்லாத ஒன்று. ஆனால் மனிதன் தன் தேவைக்கு உகந்தவாறு, தன் மனத்திற்கும் ஒரு பிடிப்பு ஏற்படுத்திக் கொள்வதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து கொண்டான். அதே நேரத்தில் மேலும் தன் மனத்திற்குப் பிடிப்பு ஏற்படுவதற்குத் தேவைப்பட்ட சடங்குகளைக் கொண்டு வந்து இணைத்துக் கொண்டான். இதுதான் விக்ரக வழிபாட்டில் உள்ள ஒரு முறையாகும்.

ஆலயங்களில் விக்ரக வழிபாடு செய்கிறார்கள் அல்லவா. அதிலே இரண்டு வகை உண்டு. பஞ்சலோகங்களினால் அன தகடு, அதில் அட்சரங்களை எழுதி சில மந்திரங்களை, எந்தெந்த நன்மைகளை அடைய வேண்டும் என்று எண்ணுகிறார்களோ அதற்கேற்றவாறு மந்திரங்களை உருவேற்றி, ஒரு உயிர்க்கு எழுச்சி கொடுப்பதற்குத் தரத்தக்க மந்திரங்களை அமைத்து அதைச் சிலையின் கீழ் புதைத்து வைப்பார்கள். தினந்தோறும் மந்திரங்களை உச்சரிக்க, உச்சரிக்கவும், மனிதன் ஆலயத்தைச் சுற்றி வரவும். அங்கு ஒரு ஆற்றல் களம் உண்டாகிறது. இப்படிச் சுற்றி வரும் போது அந்தச் சக்தியானது, ஆற்றலாக நீண்டகாலம் சுழன்று கொண்டு இருக்கும். இது ஒரு தத்துவம். இதிலே இன்னொரு சக்தி நுழைவது என்றால் அது மிகவும் சிரமம். அப்படி நுழைகின்ற சக்தியானது அதற்கு ஒத்ததாக இருக்க வேண்டும். அல்லது நுழையும் சக்தி அதைவிட நுண்ணியதாக இருக்க வேண்டும். அதுவே காப்பாகவும் அமையும்.

கோயில்களிலும், நமது வீடுகளிலும், ஆரத்தி எடுத்துச் சுற்றுவதை நாம் பார்க்கிறோம். அப்படி சுற்றுவதனாலே அந்த அளவுக்கு அந்த Vibration (சுழற்சி) நிறைந்திருக்கும். கண் பார்வையால் (கண் திருஷ்டி) ஏதேனும் தீங்கு நேருமானால் அது விலகிப் போக வேண்டுமென்ற அளவிலே தான் வைத்திருக்கின்றார்கள். கோயிலில் ஒருவன் எந்த இடத்திலே சுற்றி வந்தாலும் அங்கே இருக்கக்கூடிய Vibrationஎனானது, ஒருவன் பலவீனமாயிருக்கிறான் என்றால் அவனுக்கு சக்தி கூடுகிறது என்றும், ஒருவனுக்குச் சக்தி அதிகமாக இருக்கிறது. எனில் அதிலேயிருந்து அவன் தன் சக்தியைத் தருகிறான் என்றும் பொருள். இவ்வாறு பெறுவது, தருவது என்றபோது எல்லாக் கோயில்களுமே, ஒரு ஆற்றல் களம்தான் என்று சொல்ல வேண்டும். ஒவ்வொரு ஆலயமும் முறையாக நிர்வகிக்கப்பட்டால் ஒரு ஆற்றல் களமாகவே அமையும்.

ஆலயத்திற்குள் உட்கார்ந்து கொண்டு வேண்டுதல் செய்து கொள்வது, தனிமையில் இருந்து சிந்தனை செய்வது என்ற நிலையில் இருந்தால் கட்டாயம் அந்தந்த எல்லையிலே மனதுக்கு ஒரு நுண்ணிய இயக்கம் உண்டாகும். அந்த உந்து வேகத்தினுடைய சக்தியினால், அழுத்தத்தினால் இவன் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. இதுபோலவே யோகத்திலே தவத்திலே அவரவர்கள் மனதைத் திண்மைப் படுத்திக் கொண்டு சுயார்ஜிதமாகச் செய்யும் பொழுது இதே பலனை அடைய முடீயும். இதைத்தான் Auto - Suggestion என்றும், தனியாகப் பிரித்து செய்யும் போது  Prayer என்றும், வேண்டுதல் என்றும் சொல்லுகிறோம். இது ஒரு முறை.

மற்றொரு முறை என்னவென்றால் மகான்கள் சிலர் தன் உயிரை வெளியில் விடாமல், தன் உடலிலேயே அடக்கம் செய்து கொண்டு, “ஜீவசமாதி” என்ற நிலை எய்தி இருப்பார்கள். இதுபோல் நமது நாட்டில் 18 மகான்கள் அடக்கம் பெற்ற தலங்கள் உள்ளன. பழனி, திருப்பதி, சிதம்பரம், வைதீஸ்வரன் கோவில், இந்த இடங்களில் எல்லாம் சித்தர்கள் அடக்கமாகி உள்ளார்கள். அவர்கள் மேல் சிலைகளை வைத்துக் கோயில் கட்டி வழிபாட்டுக்குரியதாக அமைத்து உள்ளார்கள் நமது முன்னோர்கள். என்றைக்கும் அந்த மகானுடைய ஆற்றல் உடலை விட்டுப் பிரியாது. அவர்கள் உலக நன்மைக்காக உடல் அடக்கம் பெற்ற போது எண்ணிய எண்ணங்கள் இவை எல்லாம் இங்கேயே இருப்பதால், அதை மனிதன் சுற்றி வர வர அது ஆற்றல் களமாகவே இருக்கும். இதற்குக் குடமுழுக்குத் தேவை இல்லை. ஆனால் பஞ்சலோகத் தகட்டில் சக்கரங்கள் எழுதி வைத்திருக்கின்ற ஆலயங்களிலே தான் காலத்தால் சக்தியானது குறைகிறது. அப்போது அதற்கேற்ற மந்திரங்களை மறுபடியும் ஓதி, அழுத்தம் கொடுப்பதற்குக் குடமுழுக்குத் தேவைப்படும். சித்தர்கள் அடமக்கமான கோயில்களுக்கு குடமுழுக்குத் தேவையில்லை. அப்படி அவர்கள் செய்கிறார்கள் என்றால் தெரியாமல் செய்கிறார்கள் என்று பொருள். இதுதான் ஆலயங்களின் அடிப்படைத் தத்துவம்.

- வேதாத்திரி மகரிஷி