குலதெய்வத்தை அறிந்து கொள்ளுங்கள்!

குலதெய்வத்தை அறிந்து கொள்ளுங்கள்!

குலதெய்வம் என்பது தந்தை பாட்டன், முப்பாட்டன் என்று நமது முன்னோர்கள் தொடர்ந்து வழிபட்ட கோவிலாகும். எனவே குலதெய்வத்துக்கென்று தனியாக ஒரு சாந்நித்யம், முக்கியத்துவம் உள்ளது. குலதெய்வம் என்பது ஒவ்வொரு குடும்பத்துக்கும் உரிய முதன்மை தெய்வம் ஆகும். இருப்பினும் சிலர் அவர்களுடைய குலதெய்வம் எங்குள்ளது என்று தெரியாமல் இருக்கின்றனர். அவர்களும் தங்கள் ஜாதக லக்னம் அல்லது ராசி தெரிந்தால், குலதெய்வத்தைக் கண்டுகொள்ள வைக்கும் சிறு முயற்சியே இந்தக் கட்டுரை.

 
லக்னத்துக்கு 5-ஆம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே 5-ஆம் வீட்டை வைத்துதான் குலதெய்வத்தையும் கண்டுபிடிக்க முடியும்.
 
லக்னம் தெரிந்தவர்கள் லக்னத்தை வைத்தும், லக்னம் தெரியாதவர்கள் ராசியை வைத்தும் குலதெய்வத்தைக் கண்டு பிடிக்கலாம்.

மேஷ லக்னம் அல்லது மேஷ ராசி
 
இவர்களுடைய குலதெய்வம் ஆண் தெய்வமாக இருப்பார். கிழக்கு திசையில் இருத்தல் வேண்டும். இவர்கள் பிறந்த இடத்திற்கு அருகில் இருப்பார். மலை சார்ந்த வெப்பமுள்ள இடங்களில் கோவில் இருக்கும். கோவில் வட்ட வடிவில் இருக்கக்கூடும். மயில், தேர், அன்னம் போன்றவை வாகனமாக இருக்கலாம். சிவப்பு வஸ்திரங்கள் முக்கியமானதாக இருக்கலாம். சூரியனைப் போன்று முதன்மை தெய்வமாக இருப்பார். இரு தேவியர் இருக்கக்கூடும்.
 
ரிஷப லக்னம் அல்லது ரிஷப ராசி
 
இவர்களின் குலதெய்வம் பெண் தெய்வமாக இருப்பார். அனோகமாக கன்னிமார் தெய்வமாக இருக்கக்கூடும். இவர்கள் பிறந்த இடத்திலிருந்து தெற்கு திசையில் அருகிலும் இல்லாமல் வெகுதூரத்திலும் இல்லாமல் இடைப்பட்ட தூரத்தில் கோவில் இருக்கும். அநேகமாக விவசாய நிலங்கள் அருகில் இருக்கும். குதிரை, அம்பு போன்ற சிற்பங்களை காணக்கூடும். பச்சை அல்லது பல வண்ண வஸ்திரம் முதன்மையாக இருக்கும். மகாலட்சுமி அம்சம் பொருந்திய இரட்டைத் தெய்வமாகவும் இருக்கலாம். கோவில் குளிர்ச்சியான இடத்தில் இருக்கும்.
 
மிதுன லக்னம் அல்லது மிதுன ராசி
 
இவர்களின் குலதெய்வம் ஆண் தெய்வமாக இருப்பார். மேற்கு திசையில் வெகுதொலைவில் கோவில் இருக்கும். மிதுன லக்னத்தாரின் குலதெய்வக் கோவில் வியாபார ஸ்தலங்களின் நடுவில்கூட இருக்கும். ஐங்கோண வடிவில் இருக்கக்கூடும். வாகனம் யானையாக இருக்கலாம். கருப்பு அல்லதுவெள்ளை வண்ணம் இருக்கலாம். அத்தி மரம் சம்பந்தப்பட்டிருக்கும்.
 
கடக லக்னம் அல்லது கடக ராசி
 
இவர்கள் குலதெய்வம் பெண் தெய்வமாக இருக்கும். சிலருக்கு இரட்டை தெய்வமாக இருக்கும். சிலருக்கு ஐயப்பன் சார்ந்த தெய்வமாக இருக்கலாம். பிறந்த இடத்திலிருந்து வடக்கு திக்கில் அருகிலேயே இருக்கலாம். கோவில் சிறு கிராமத்தில் முட்கள், கற்கள் நிறைந்த பகுதியில் சற்று காட்டுப் பகுதியில் இருக்கும் வாகனம் அன்னமாக இருக்கும். சிவப்பு அல்லது மஞ்சள் வண்ணம். முக்கியமாக இருக்கும். சிலருக்கு கோபமுள்ள குலதெய்வமாக அமையக்கூடும்.
 
சிம்ம லக்னம் அல்லது சிம்ம ராசி
 
இவர்களுக்கு குலதெய்வம் ஆண் தெய்வமாக இருக்கும். சிலசமயம் மதுரை வீரன் போன்ற புரவிமீது அமர்ந்து வில் தொடுக்கும் தோற்றம் கொண்ட தெய்வமாகவும் இருக்கும். சிலருக்கு அந்தணர்களும் வணங்கும் சாத்வீக தெய்வமாகவும் இருக்கலாம். பிறந்த இடத்திலிருந்து கிழக்கு திக்கில், இடைப்பட்ட தூரத்தில் கோவில் அமைந்திருக்கும். மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் கோவில் இருக்கும். மஞ்சள் நிறம் முக்கியமானதாக இருக்கும். தலவிருட்சம் அரசமரமாக இருக்கும். கோவில் செவ்வக வடிவத்தில் இருக்கக்கூடும். அநேகமாக குரு ஸ்தானத்தில் இருக்கும் சாத்வீக கடவுளாகவே இருப்பார். யானை அல்லது அன்னம் வாகனமாக இருக்கும்.
 
கன்னி லக்னம் அல்லது கன்னி ராசி
 
இவர்களுக்கு இரட்டை பெண் தெய்வம் குலதெய்வமாக இருக்கக்கூடும். இவர்கள் பிறந்த இடத்திலிருந்து தெற்கு திசையில் வெகுதூரத்தில் இருக்கும். ராஜராஜேஸ்வரி அம்சமான தெய்வமாக இருக்கலாம். சேறு நிரம்பிய பகுதி அணைக்கட்டு அருகில், கடற்கரை அருகில், சேற்று நீர் தங்கிய பகுதி இவற்றுள் ஏதாவது ஒரு இடத்தில் கோவில் இருக்கலாம். வன்னி மரம் தலவிருட்சமாக இருக்கக்கூடும். ஆடு வாகனமாக இருக்கும். வெளிர் சிவப்பு அல்லது கருப்பு வண்ணம் முதன்மையாக இருக்கக்கூடும்.
 
துலா லக்னம் அல்லது துலா ராசி
 
இவர்களுக்கு ஆண் குலதெய்வமாக அமையும். பரமேஸ்வரன் அம்சத்தில் இருக்கக்கூடும். பிறந்த இடத்துக்கு மேற்கு திசையில் அருகிலேயே இருக்கும். தெய்வத்தோடு கும்பம் சம்பந்தப்ட்டிருக்கும். சாம்பல் வண்ணம் முதன்மையாக இருக்கும். கோவில் வயல்வெளிகளின் அருகிலோ அல்லது சந்நியாசிகள் தங்கும் தனிமைப்பட்ட இடத்திலோ இருக்கக்கூடும். குளிர்ச்சியான இடத்தில் இருக்கும்.
 
விருச்சிக லக்னம் அல்லது விருச்சிக ராசி
 
இவர்களின் குலதெய்வம் பெண் தெய்வமாக இருக்கும். இரட்டைப் பெண் தெய்வமாகவும் இருக்கக்கூடும். பிறந்த இடத்திலிருந்து வடக்கு திக்கில் இடைப்பட்ட தூரத்தில் கோவில் இருக்கும். கிணறு, குளம், புண்ணிய நதிக்கரை போன்ற நீர் சம்பந்தமான இடங்களுக்கு அருகில் கோவில் இருக்கும். வாகனமாக யானை இருக்கும். அரச மரம் தலவிருட்சமாக இருக்கும் சாத்வீகமாக அந்தணர்களும் வணங்கத்தக்க தெய்வமாக இருப்பார். வெள்ளை நிறம் முதன்மை பெறும். கோவில் செவ்வக வடிவில் இருக்கக்கூடும். மிகக் குளிர்ச்சியான இடத்தில் கோவில் இருக்கும்.
 
தனுசு லக்னம் அல்லது தனுசு ராசி
 
இவர்களுக்கு ஆண் குலதெய்வமாக அமையும். முருக அம்சம் கொண்டவராக கோப குணம் கொண்டவராக இருப்பார். பிறந்த இடத்திலிருந்து கிழக்கு திசையில் அதிக தூரத்தில் கோவில் இருக்கும். வெப்பம் அதிகம் உள்ள சிறு காட்டுப் பகுதி, மலை சார்ந்த பகுதிகளில் கோவில் இருக்கக் கூடும். வாகனமாக ஆடு இருக்கும் சிவப்பு நிறம் முக்கியமானதாக இருக்கும்.
 
மகர லக்னம் அல்லது மகர ராசி
 
இவர்களுக்கு பெண் தெய்வம் குலதெய்வமாக இருக்கும். மீனாட்சி அம்சம் கொண்டதாக இருக்கும். இரட்டைப் பெண் தெய்வமாகவும் இருக்கக்கூடும். பிறந்த இடத்திலிருந்து தெற்கு திசையில் அருகில் அமைந்திருக்கும். காளை அல்லது மாடு வாகனமாக இருக்கலாம். வெள்ளை நிறம் முக்கியமாக இருக்கும். கால்நடைகள் மேயும் பகுதியிலோ, வயல்வெளிகளிலோ கோவில் இருக்கக்கூடும். வெண்தாமரை முதன்மையாக கருதப்படும்.
 
கும்ப லக்னம் அல்லது கும்ப ராசி 
 
இவர்களுக்கு ஆண் தெய்வமே குலதெய்வம் ஆகும். விஷ்ணு அம்சமான தெய்வமாக இருப்பார். பிறந்த இடத்திலிருந்து மேற்கு திசையில் இடைப்பட்ட தூரத்தில் கோவில் இருக்கும். சிலருக்கு குலதெய்வம் தம்பதிகளான தெய்வமாகவும் இருக்கலாம். பச்சை நிறம் முக்கியமானதாக இருக்கும் வாகனமாக குதிரை இருக்கும்.
 
மீன லக்னம் அல்லது மீன ராசி
 
இவர்களுக்கு அமைதியான பெண் தெய்வமே குலதெய்வமாக இருக்கும். பராசக்தியின் அம்சமாக தெய்வம் இருப்பார். பிறந்த இடத்திலிருந்து வடக்கு திசையில் அதிக தொலைவில் கோவில் இருக்கும். நீர் சார்ந்த கடல், நதிக்கரை போன்ற இடங்களில் கோவில் இருக்கும் வெண்மை நிறம் முதன்மையாக இருக்கும். இத்தெய்வத்தின் வாகனம் நாகமாக இருக்கக்கூடும். கோவில் சதுர அமைப்பில் அமைதியான இடத்தில் இருக்கக்கூடும். இக்கோவிலில் முத்து பிரதானமாக இருக்கும்.
 
இவை எல்லாமே பொதுவான பலன்கள் ஆகும். குறிப்பிட்ட பலன் கண்டுபிடிக்க ஜாதகத்தில் 5-ஆம் இடத்தைக் கண்டுபிடித்து, அந்த 5-ஆம் அதிபதி எங்கு இருக்கிறார் எனவும் கண்டுபிடித்து, இரண்டையும் சேர்த்து பலன் பார்த்தால் சரியான பதில் தெரிந்து விடும்.
 
- ஆர். மகாலட்சுமி