எல்லாமும் ஆகின்ற பக்தி!

எல்லாமும் ஆகின்ற பக்தி!

பக்தியோகம் என்பது கடவுளை தூய வழியில் எய்துவதாகும். இது ஆதியிலிருந்து அந்தம் வரை அன்பையே மூலாதாரமாகக் கொண்டிருக்கும். கடவுள் மீது உண்டான அன்பின் முதிர்ச்சி ஒரு வினாடியளவே தோன்றினாலும், அதுவே எல்லையற்ற சுயேச்சை நிலையாகும்.  “பக்தி என்பது ஆண்டவனிடத்தில் ஒருவன் கொண்டுள்ள நெருக்கமான அன்புறவாகும். ஒருவனுக்கு அத்தகைய பக்தி உண்டாகுமானால், அவன் அனைவரையுமே நேசிக்கிறவனாகிறான். அவன் யாரையும் வெறுப்பதில்லை. எப்போதும் அவன் மனநிறைவுள்ளவனாயிருக்கிறான்” என்று தமது பக்தி சூத்திரத்தில் குறிப்பிடுகிறார் நாரத முனிவர். இத்தகைய அன்பை எந்தவிதமான உலகாயத நன்மைக்கும் அவன் பயன்படுத்திக் கொள்வதில்லை. ஏனெனில், உலக ஆசைககள் உள்ளவும் ஒருவனுக்கு அத்தகைய அன்பு தோன்றுவதில்லை. “பக்தி” என்கிற இந்த அன்பு கருமத்தையும் யோகத்தையும் விடப் பெரியதாகும். கருமமும் யோகமும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் பக்திக்கோ பயனும் சாதனமுங்கூட பக்தியாகவே உள்ளது. அதன் முடிவும் பக்தியாகவே இருக்கிறது
 

ஞானத்துக்கும் பக்திக்கும் அதிக வேற்றுமை இல்லை. இரண்டும் வளைந்து சென்று முடிவில் ஓரிடத்திலேயே சந்தித்துக் கொள்ளுகின்றன. பக்தி யோகத்தின் பெரிய நன்மை என்னவென்றால், நம் நோக்கமான தெய்வ நிலையை எய்த் அதுவே இயற்கையானதாகவும், வெகு எளிதாகவும் இருக்கிறது என்பதுதான். அதிலுள்ள குறையாதெனில், அதன் தாழ்வான கட்டங்களில் அது வெறுக்கத்தக்க மதியீனமாக மாறிவிடுவதுதான். பக்தியின் இந்தத் தாழ்ந்த கட்டங்களில் உள்ளவர்கள்தான் பல்வேறு மதங்களிலுமுள்ள மதவெறியர்களாவார்கள். தமக்கு விருப்பமான ஒன்றிடம் அவர்களால் ஒருமுகமாகச் செலுத்தப்படும் பற்றானதுஅவர்களைப் பிறவற்றை நிந்திக்கத் தூண்டுகிறது. இத்தகைய ஒருமுகமான பற்றுதல் தேவையானதுதான். அது இல்லையேல் பக்தி உண்டாவதில்லைதான். ஆனால் உலகில் எல்லா நாடுகளிலும் சமயங்களிலும் உள்ள பக்குவமடையாத உள்ளங்கள், பிறவற்றை வெறுத்தொதுக்குவதே தம் கொள்கையில் தமக்குள்ள பிடிப்புக்கு அத்தாட்சியென்று கருதிக் கொள்ளுகின்றன. தனது மதத்திலும் அதுகூறும் கடவுள் கொள்கையிலும் தீவிரமான பற்றுள்ளவன் வேறு எந்தக் கோட்பாடுகளையாவது மதத்தையாவது கேள்வியுறுகையில், வெறிபிடித்து ஓலமிடுவதற்கு இதுவே காரணமாயிருக்கிறது. இந்த ஆபத்து பக்தியின் ஆரம்ப நிலையிலேதான் தென்படுகின்றது. பக்தி முதிர்ந்து உயர்ந்த கட்டத்தை எய்தும்போதுஅதுமறைந்து விடுகின்றது. பக்தியின் உயர் நிலைகளாகும் ஆன்மா, வெறுப்பை வெளியிடுகின்ற கருவியாக ஆகிவிடாத அளவுக்கு அன்புருவான கடவுளுடன் ஐக்கியமாகி விடுகின்றது.