மக்களை மகிழ்விக்கும் தீப ஒளித்திருநாள்!

மக்களை மகிழ்விக்கும் தீப ஒளித்திருநாள்!

இந்து மதத்தினரால் ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த உற்சாகத்துடனும், ஆனந்தத்துடனும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி ஆகும். தீப ஆவளியே தீபாவளியாகிற்று. விளக்குகளின் வரிசைதான் தீபாவளி என்றும், ஆன்மீகச் சான்றோர் விளக்கம் அளிக்கின்றார்கள். இந்த நன்னாளில் இல்லங்களிலும், அலுவலகக் கட்டிடங்களிலும் வியாபாரத் தலங்களிலும், ஆலயங்களிலும் விளக்குகளை வரிசையாகவும் அழகாகவும் தீபம் ஏற்றி வைத்துக் கொண்டாடுவார்கள். புராண காலத்தில் பிரக்ஜோதிஜபுரம் என்னும் நகரத்தில் நரகாசுரன் என்கின்ற ஒரு அசுரன் இருந்தான். அவன் பிரம்மனைக் குறித்து கடுந்தவம் மேற்கொண்டு கிடைத்தற்கரிய பெரும் வரங்களைப் பெற்றிருந்தான். அவற்றின் துணைக்கொண்டு நரகாசுரன் பாதாள பூலோகங்களை அழித்து எல்லோருக்கும் இடர் பல விளைவித்தான். பின்னர் தேவருலகையும் துன்பப்படுத்த எண்ணி, தேவர்களுக்கரசனாகிய இந்திரனோடு போர் புரிந்து அவனையும் தோற்கச் செய்தான். இந்திரனின் தாயார் அணிந்திருந்த காதணியாகிய மகர குண்டலங்களையும் கவர்ந்து கொண்டு பிரக்ஜோதிஜபுரம் சென்றடைந்தான். பத்ரிகா ஆசிரமத்து முனிவர்களும் நரகாசுரனால் ஏற்கனவே துன்புறுத்தப்பட்டு மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். இந்திரன், தேவர்கள் மற்றும் முனிவர்கள் துவாரகாபுரி சென்று கிருஷ்ண பகவானிடம் நரகாசுரன் பற்றிய தமது குறைகளைக் கூறி முறையிட்டனர். 

 

தேவர்களின் முறையீட்டை ஏற்றுக்கொண்டு சத்தியபாமா சமேதராக நரகாசுரனோடு போர் புரிய புறப்பட்டார் கிருஷ்ண பகவான். தனது சோனா சமுத்திரம் அனைத்தையும் போரில் பகவானிடம் தோற்ற நரகாசுரன் கடுஞ்சினம் கொண்டு முன்னிலும் உக்கிரமாய் பெரும் போர் புரிந்தான். அவனால் ஏவப்பட்ட சில அஸ்திரங்களினால் கிருஷ்ணர் சற்றே சோர்வடைந்தார். இதைக் கண்ட சத்யபாமா கிருஷ்ரைத் தேற்றி, தானே எண்ணற்ற பாணங்களைத் தொடுத்து இடைவிடாது நரகாசுரன் மேல் பிரயோகித்தாள், அப்பாணங்கள் அவனுடலில் பல பாகங்களிலும் துளைத்து குருதி ஒழுகச் செய்தன. இதனால் சிறிது பின்னடைந்த நரகாசுரன், பின்னர் தன்னைத்தேற்றிக் கொண்டு மீண்டும் அதிக வலிமையோடு போர் புரியத் தொடங்கினான். இதைக் கண்ட கிருஷ்ண பகவான் தனது சக்ராயுதத்தை அவன் மீது பாவித்து அவன் உடல்தன்னை இரு கூராகப் பிளந்துவிட்டார். அப்போது இறக்கும் தருவாயிலிருந்த நரகாசுரன் கிருஷ்ண பகவானை வணங்கி “யான் இழைத்த கொடுமைகளையும் பாவங்களையும் பொருத்தருள வேண்டும். கொடி யோனாகிய நான் உயிர் துறக்கும் இந்நாளை தொல்லை நீங்கின மங்களகரமான நாளாகக் கொண்டாட வேண்டும். இந்த நாளில், என்னை நினைத்து நீராடி புதிய வஸ்திரங்கள் அணிந்து ஆலய வழிபாடு செய்யும் பக்தர்கள் அனைவருக்கும் அசுவமேதயாகம் செய்த பலன் கிட்ட வேண்டும்” என்றும் வேண்டிக் கொண்டான். கிருஷ்ண பகவானும் நரகாசுரனுக்கு அவன் வேண்டிய வரத்தை அளித்து அருள் செய்தார். அத்தினமே தீபாவளித் திருநாளாய் உலகெங்கிலும் உள்ள இந்துப் பெருமக்களால் கொண்டாடப்படுகின்றது. கிருஷ்ண பகவான் நரகாசுரனுக்கு மோட்சம் அளித்து அருள்புரிந்த காரணத்தினால் தீபாவளிப் பண்டிகையை நரக சதுர்த்தி என்றும் அழைக்கின்றார்கள்.

 

தீபாவளிப் பண்டிகைக்கு எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்ட போதிலும், கிருஷ்ண பகவான் நரகாசுர வதம் செய்து அவனுக்கு மோட்சம் அளித்தருளியதே முக்கியமான காரணமாக பெரும்பான்மை மக்களால் ஏற்கப்பட்டுள்ளது. இராமபிரான் ஆரண்ய வாசத்தையும், இராவணவதத்தையும் முடித்த பின்பு மீண்டும் அயோத்தி நகருக்குத் திரும்பிய தினத்தன்று, மக்கள் நகரம் முழுவதும் தீபங்கள் ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்கள். பின் வந்த காலங்களில் இதுவே இராமாயணத் தீபாவளியாகக் கடைப்பிடிக்கப்பட்டது. மிகச் சிறந்த நீதி மானாகிய மகாபலிச் சக்கரவர்த்தி, தான் அரசனாகப் பதவியேற்ற நாளன்று நாடெங்கிலும் தீபங்கள் ஏற்றிக் கொண்டாடும்படி ஆணையிட்டார். இதுவும் தீபாவளி தினமாகக் கருதப்பட்டது. மராட்டிய மன்னர் வீரசிவாஜி எதிரிகளை வென்று கோட்டை போல் கட்டி அதற்குள் விளக்குகளை ஏற்றிவைத்து வணங்கினார். இதுவே மராட்டியத்தில் பிற்காலத்து மக்களால் தீபாவளியாகப் போற்றப்பட்டது. இதனை முன்னிருத்தியே, மராட்டிய மக்கள் மும்பையில் இன்றும் கூட மண்கோட்டை கட்டி தீபங்கள் ஏற்றி வைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதே போன்று உஜ்ஜையனி நாட்டை ஆண்டு வந்த விக்கிரமாதித்தன் போரில் வெற்றி பெற்ற தினத்தையும் தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள்.

 

துன்பங்கள் சூழ்ந்த இருளை அகற்றி, ஆனந்த வெளிச்சத்தைப் பரப்புகின்ற விளக்குகளில் வரிசைதான் தீபாவளியாய் மின்னுகிறது. தீபாவளி தினத்தன்று அதிகாலைப் பொழுதில் எண்ணெய் தேய்த்து நீராடுவது கங்கையில் நீராடிய புண்ணியத்தைத் தரும் என்பது இந்துக்களின் நம்பிக்கை, புத்தாடைகள், இனிப்புகள், வெடி மத்தாப்பு ஆகியவை தீபாவளித் திருநாளை கலகலப்பாக்குகின்றன.

 

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் ஆகிய நாடுகளிலும் தீபாவளிப் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. தீபாவளி தினத்தன்று தீபாவளியைக் கொண்டாடுகின்ற அனைவருமே தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக புத்தாடைகளை உடுத்திக் கொண்டு உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறார்கள். தீபாவளி அனைவருக்கும் புத்தம் புதிய ஆடைகளையும் பல வகை இனிப்புகளையும் பெற்றிட ஒரு வாய்ப்பினை வழங்குவ தோடு மட்டுமல்லாமல், வருடத்தில் ஒரு நாளாவது கஷ்டங்களையும் கவலைகளையும் மறந்து உற்றார் உறவினரோடும், நண்பர்களோடும் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கும் சந்தர்ப்பத்தையும் வழங்குகிறது. தர்மத்தையும், நியதிகளையும் அனுஷ்டித்து சக மனிதர்களுடன் அன்பு பாராட்டி மனித நேயத்தோடு இயந்து வாழ்ந்து, எல்லோரது வாழ்விலும் எல்லா வளமும் நிறைந்திட இறை வனைப் பிரார்த்திக்கும் அருமையானதொரு சந்தர்ப்பமாக தீபாவளித் திருநாளை ஆக்கிக் கொள்வது அவசியமாகும். இந்த இனிய நாள் அனைவருக்கும் ஆனந்தம் அளித்திட இறைவனை வேண்டுவோமாக!
 

- நவநீதம்