அருகம்புல் மகிமை!

அருகம்புல் மகிமை!

கலபன் என்ற மன்னன் அவந்தி நாட்டினை ஆட்சிபுரிந்து வந்தான். அவன் மனைவியின் பெயர் சுபத்திரை. நீதிநெறி பிறழாமல் மிகச் சிறப்பாக ஆட்சியினைப் புரிந்து வந்தான்.

 
அவனிடம் ஒரு நாள் அந்தணன் ஒருவன் யாசகம் பெறுவதற்காக வந்தான். அவன் ஏழ்மையினால் மிகவும் துவண்டு போயிருந்தான். கந்தலாடையே கட்டியிருந்தான். அவனது பெயர் மதுசூதனன் என்பதாகும்.
 
அரசனுக்கு ஏனோ அந்த அந்தணனைப் பார்த்ததும் பரிதாபம் ஏற்படவில்லை. மாறாக நகைத்துவிட்டான். அந்த ஏழை அந்தணனுக்கு கோபம் ஏற்பட்டது.
 
“அரசே! என்னைப் பார்த்து இரக்கம் கொள்வதற்குப் பதிலாக நகைத்து என்னை புண்படுத்தி விட்டாய். அதோடு என் குலதா்தையும் உன் நகைப்பு சுட்டுவிட்டது. பசுவின் பின்பாகத்தை முகர்ந்து பார்த்து பல்லை இளிக்கும் எருதைப் போல நீ நடந்து கொண்டாய் அதனால் நீ எருதாகப் பிறக்கக் கடவது” என்று சபித்தான்.
 
அந்தச் சாபம் சுபத்திரையைக் கோபம் கொள்ளச் செய்தது.
 
“நீயும் ஒரு அந்தண்னா? வேதியர்கள் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள்! நீயோ அவசரப்பட்டு ஒரு கழுதையைப் போல நடந்து கொண்டாய். அரசர் நகைத்தது தவறுதான். அதைத் தவறு என்று சுட்டிக்காட்டி நீ திருத்தியிருக்க வேண்டும்! மாறாக சபித்து விட்டாய். நீ கழுதையாகப் பிறந்து அழுக்கைச் சுமந்து திரிவாயாக”! என்று சபித்தாள்.
 
மதுசூதுனன் என்ற அந்த அந்தணன் மேலும் கோபமடைந்தான்.
 
“அரசியே! குற்றத்தை உணர்ந்து மன்னிப்பு கேட்பது உங்கள் கடமை. அதை விடுத்து நீ நீச ஸ்திரீயாகப் போனாய். எனக்கே புத்தி சொல்ல துணிந்தாய். அதோடு என்னையும் சபித்தாய் அதனால் நீங்களும் சண்டாளப் பெண்ணாய்ப் பிறக்கக் கடவது”! என்று அவளையும் சபித்தான்.
 
சாபத்தின் பலாபலனை மூவருமே அனுபவிக்கத் தொடங்கியிருந்தனர். 
 
கலபன் எருதாக மாறினான். விவசாயி ஒருவனிடம் போய்ச் சேர்ந்தான். மதுசூதனன் கழுதையாகி சலவை தொழிலாளி ஒருவனிடம் அடிமையானான். சுபத்திரையோ சண்டாளப் பெண்ணாகி சேரி் ஒன்றை போய்ச் சேரந்்தாள். மூவரும் ஒரே நகரத்தில் பிறவியெடுத்திருந்தனர்.
 
ஒரு நாள் உழவுக்குப் பின்பு அந்த எருதை அவிழ்த்து விட்டான் விவசாயி. அதே நேரத்தில் அழுக்குமூட்டையைச் சுமந்து வந்த கழுதையும் குளக்கரையில் அழுக்கு மூட்டையை இறக்கியதும் மேய்ந்தபடி அந்தப் பக்கமாக வந்தது. சண்டாளப் பெண்ணும் அருகிலேயே புல் அறுத்துக் கொண்டிருந்தாள்.
 
திடீரென்று இடி மின்னலுடன் பெருமழை பெய்தது. சண்டாளப் பெண் ஓடிச்சென்று அருகிலிருந்த விநாயகர் கோயிலுக்குள் நுழைந்து கொண்டாள். வயலில் மேய்ந்து கொண்டிருந்த எருதும், கழுதையும் கூட அதே கோயிலுக்குள் சென்று ஒதுங்கின.
 
சண்டாளப் பெண் தான் சேகரித்த புல்கட்டை ஓர் ஓரமாகச் சாத்தி வைத்திருந்தாள். நெடுநேரமாக மழை விடாமல் பெய்து கொண்டிருந்ததால் அவர்களால் கிளம்பிச் செல்ல முடியவில்லை.
 
கழுதை புல்லைப் பார்த்ததும் அதனருகே சென்று சாப்பிடத் தொடங்கியது. அதைப் பார்த்த பெண் கோபம் கொண்டாள். அருகிலிருந்து பெரிய கட்டையை எடுத்து கழுதையை வெளுத்து வாங்கினாள். கழுதை தன் பின்னங்கால்களால் எருதை உதைத்தது. எருது கோபம் கொண்டது. கழுதையை முட்டித் தள்ளியது. அப்போது கழுதை தூரப்போய் அந்தப் பெண்ணின் மேல் விழுந்தது.
 
ஆலயத்திற்குள் ஸ்ரீவிநாயகப் பெருமானுக்கு பூஜைகளை செய்து கொண்டிருந்த முனிவர்கள் அங்கே வந்தனர். அங்கே நடந்த களேபரத்தைக் கண்டவர்கள். தங்கள் வழிபாட்டிற்கு இடையூறு செய்யும் மூன்று பேரையும் வெளியே விரட்டி விட்டனர்.
 
வெளியே மழை மேலும் அதிகமாக பெய்ததால் அவ்மூவராலும் எங்கும் செல்ல முடியாமல் ஆலயத்தையே சுற்றிச் சுற்றி வந்தனர். அவள் தலையில் இருந்த புல்லுக் கட்டை எருதுவும், கழுதையும் பிடுங்க முயற்சித்தன. அதனால் அவள் தலையில் புல்லுக்கட்டு சந்நதி முன்பு விழுந்தது.
 
எருது, கழுதையின் வாயில் இருந்த புற்களில் இரண்டு சிலையின் மீது போய் விழுந்தன. புல்லுக்கட்டில் இருந்து பறந்து வந்த புல்லானது விநாயகரின் கிரீடம் மீதும், எருதின் வாயிலிருந்து காற்றில் சென்ற புல் தும்பிக்கை மீதும், கழுதையின் வாயிலிருந்து பறந்த புல் பாதங்களிலும் விழுந்தது.
 
இதனைக் கண்ட முனிவர்கள் சண்டாளப் பெண் கொண்டு வந்த புல் விநாயகப் பெருமான் மீது விழுந்தது கண்டு கோபமடைந்து, அவர்களை விரட்டியடித்துவிட்டு, தண்ணீரைக் கொண்டு வந்து அபிஷேகம் செய்து மீண்டும் பூஜைகளைச் செய்தனர்.
 
பொழுது விடிந்து தான் மழை நின்றிருந்தது. வெளியே அந்தச் சண்டாளப் பெண்ணும், எருதும், கழுதையும் இறந்து போய்க் கிடந்தனர்.
 
அம்மூவரையும் அழைத்துச் செல்ல ஸ்ரீவிநாயகப் பெருமான் விமானத்தை அனுப்பியிருந்தார். அந்த விமானத்தில் மூவருமே ஏறியதைக் கண்ட முனிவர்கள் தேவகணங்களைப் பார்த்து,
 
“இழிபிறவிகளான இவர்களுக்கு இந்தப் பாக்கியம் எப்படிக் கிட்டியது?” என்று வினவினர்.
 
அதற்கு தேவகணங்கள், “முனிவர்களே! அருகம்புல்லால் விநாயகரைப் பூஜித்த பலனைப் பெற்றதால் மானிடப் பிறவியை விடுத்து, தெய்வசரீரம் பெற்று வானுலகம் செல்லுகின்றர்” என்றனர்.
 
- S.L.S. பழனியப்பன்