சிவநாமத்தின் சிறப்பு!

சிவநாமத்தின் சிறப்பு!

ஆன்மீக சபைகளில் யாராவது “நம பார்வதீ பதயே” என்று சொன்னவுடன் கட்டத்தில் உள்ள யாவரும் “ஹரஹர மஹாதேவ” என்று கோஷிக்கிறார்கள்.

 
பார்வதிபதியான சிவனுக்கு எத்தனையோ பெயர்கள் இருந்தாலும் கூட்டமாக கோஷம் செய்யும் போது “ஹர” நாமமே முன்னால் நிற்கிறது.
 
இந்த வார்த்தை ஒரு குழந்தையின் வாக்காக வெளிப்பட்டதாலேயே இதற்கு இத்தனை விசேஷம்.
 
அம்பிகையினிடத்தில் ஞானப்பால் உண்ட ஞானசம்பந்தக் குழந்தையின் வாக்கில் இருந்து “ஹர” சப்தம். அதுவும் நமது தர்மத்திற்கு வெற்றி தேடித் தர வந்த, சப்தம் வெளிவந்தது. மதுரை சமணர்கள் ஞானசம்பந்தரை வாதத்திற்கு அழைத்தபோது தங்கள் அறிவின் மீது நம்பிக்கை இன்றி அனல் வாதம் புனல் வாதம் என்ற பெயரில் சண்டித்தனம் செய் முடிந்தபோது சம்பந்தர் ஓர் ஓலையில் ஒரு பாடலை எழுதி அதனை தீயிலிட்டு எரியாமல் இருப்பதை நிலைநாட்டினார். அதுபோலவே இறுதிப் பரீக்ஷை ஆன புனல்வாதத்தில் ஆற்று நீரோட்டத்தை எதிர்த்துக் கரை ஏறிய திருஏடு அதனில் அவர் எழுதியதுதான் இந்த நாமம்.
 
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்க்கவே.
 
“ஹரன் நாமமே சூழ்க” என்று அந்த தெய்வக் குழந்தை ஆணையிட்டதாலோ என்னவோ - எங்கும் இந்த கோஷம் நிலைத்து விட்டது.
 
நம சங்காரயச மயஸ்கராய நல
சிவாயச சிவதராயச் (ஸ்ரீருத்ரம்)
 
சிவநாமத்தை உச்சாடனம் செய்தாலே நாம் அனைத்துப் பயன்களையும் அடைய முடியும்.
 
இப்படிப்பட்ட லகுவான இரண்டே எழுத்துக்களால் ஆன, வேதங்களின் உயிரோட்டமான “சிவ” என்னும் நாமாவை எப்பொழுதும் நினைக்க, சொல்ல சித்த சுத்தி ஏற்படுகிறது.
 
ஔவை பிராட்டி தனது நல்வழி என்ற நூலில் அனைத்து மக்களும் சிவ நாமத்தைச் சொல்வதால் பயனடைவர் என்று, “சிவாய நம எனச் சிந்தித்து இருப்போர்க்கு அபாய ஒரு நாளுமில்லை” என்று கூறியிருக்கிறார்.
 
நமச்சிவாய மந்த்ரம் கற்பகத் திருவாய் நமக்கு வேண்டியதை எல்லாம் வாரி வழங்குகிறது.
 
கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சியபோது நற்றுணையாக நின்றது, இந்த நமசிவாயம் தான் என்பதை நாவுக்கரசர் வாழ்வு நமக்குப் புகல்கிறது.
 
இதனையே திருமூலர்
 
நாமமோ ராயிரம் ஓதுமின் நாதனை
ஏமமோ ராயிரத் துள்ளே இசைவீர்கள்
ஓமமோ ராயிரம் ஓதவல் வாரவர்
காமமோ ராயிரங் கண்டொழிந் தாரே.
 என்கிறார்.
 
ஐந்தெழுத்துடைய “நமசிவாய” என்னும் பஞ்சாக்ஷர மஹாமந்த்ரம் இறைவனின் ஸ்தூல, சூக்ஷ்ம ரூபங்களின் வெளிப்பாடாகும்.
 
சிவன் ஆசுதோஷி அதாவது எளிதில் சந்தோஷப் படுகிறவன். தும்பை மலரால், வில்வ பத்ரத்தால் அர்ச்சித்து, நல்ல நீரால் அபிஷேகம் செய்து அவன் அருளைப் பெற்று விடலாம்.
 
நம்முடைய நாவால் சிவ சிவ என்று ஜபித்தால் போதும் அவன் அருள் நமக்குக் கிட்டும்.
 
சிவநாமா என்பது சிவஸ்வரூபமே. எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் சிவ சிவ என்று இரண்டு அக்ஷரங்களை சொல்லி லோகமெல்லாம் சிவமயமாக அதாவது மங்கள மயமாக, கல்யாண வைபோகமாக சந்தோமாக இருக்கச் செய்திடலாமே!
 
எனவே சிவநாமம் ஜபித்து ஜன்ம சாபல்யம் அடைவோமாக.
 
- ஆர்.பி.வி.எஸ்.மணியன்