ஆதி முதல்வருக்கு முதல் வணக்கம்!

ஆதி முதல்வருக்கு முதல் வணக்கம்!

எந்த ஒரு காரியத்தை நாம் தொடங்கினாலும் அது எவ்விதத் தடையும் இல்லாமல் முற்றுபெற விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிப்பது நமது வழக்கம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்தமானவர் விநாயகர். எளியவர்களுக்கெல்லாம் எளியவராய் விளங்கும் விநாயகர் பெரும்பாலும் அரச மரத்தடி குளக்கரை போன்ற இடங்களில் அமர்ந்துதான் தரிசனம் தருகிறார். இவருக்கு படைக்கப்படும் பொருட்களும் எளிமையானவையே. காட்டில் பூத்துக் கிடக்கும் எருக்கம்பூ வாய்க்கால் வரப்புகளில் பரவலாக முளைந்திருக்கும் அறுகம்புல் போன்ற மிக எளிமையான பொருட்களைத் தாம் ஏற்றுக் கொண்டு தன் பக்தர்களுக்கு அருளை வெள்ளமென பெருக்கி அருள்கிறார். இவருக்கு இருபத்தோரு திருநாமங்கள் உள்ளதாக புராணங்கள் சொல்கின்றன. இவரை வணங்கினால் எந்த செயலிலும் வெற்றி நிச்சயம்.

எளிமையான விநாயகர் ஸ்லோகங்கள்

1. கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
 
2. விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் - தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து
 
3. ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றினை
நந்திமகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேன்
 
4. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு
 
5. பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந்தா
 
- காமாக்ஷி வெங்கட்