அமெரிக்காவின் ஆஸ்லேண்டின் ஸ்ரீ லெட்சுமி திருக்கோயில்!

அமெரிக்காவின் ஆஸ்லேண்டின் ஸ்ரீ லெட்சுமி திருக்கோயில்!

இந்து கலாச்சாரத்தில் அன்றாட வாழ்வில் இறைவழிபாடு என்பது முக்கியமான விடயமாக திகழ்கின்றது. இந்து மதம் தழுவிய ரிஷிகளும் முனிபுங்கவர்களும் புராணக் காலம் தொட்டே, மனிதர்களுக்கு மிகச் சிறந்த ஆத்ம திருப்தியையும் தெளிவான மனதையும் அளிக்க வல்லது எனவும் பல்வேறு விதமான சாதனைகளை நிகழ்த்துவதற்கு அடித்தளமாக அமைவதும் இறைவழிபாடு ஒன்று தான் என வலியுறுத்தியிருக்கின்றார்கள்.


அதனால் தான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று, கோபுர தரிசனம் கோடி புண்ணியம் தரும் ஆகிய பழமொழிகள் தொன்று தொட்டு இந்து கலாச்சாரத்தில் தொடர்ந்து இருந்து வருகின்றன. எனவே, இந்து சமயியிகளின் வாழ்வியல் முறைகளில் ஆலயங்களுக்குச் சென்றோ அல்லது வீட்டின் பூஜையறையிலோ அதற்கென சற்று நேரத்தை ஒதுக்கி இறைவழிபாட்டை முழு மனதோடு மேற்கொள்வது இன்றியமையாததாக இருந்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் இந்து ஆலயங்கள் தனி நபர் பிரார்த்தனை, குடும்ப பிரார்த்தனை, கூட்டு பிரார்த்தனைகள், விழாக்கால சிறப்பு பூஜைகள், கலாச்சார முறைகளை போதிக்கின்ற உபன்யாசங்கள், ஆன்மீக சொற்பொழிவுகள், பண்டிகை கால கூட்டங்கள், சுவாமி நகர்வலம், பக்தர்கள் வடம் கொண்டு தேரினை இழுத்தல் ஆகிய அனைத்திற்கும் வழிவகுக்கின்றன. 

 
இந்து மதத்தை தழுவியிருக்கின்ற மக்கள், தமது சொந்த நாட்டில் இருந்தாலும் அல்லது தொழில் மற்றும் வியாபார நிமித்தமாக வேறு நாடுகளில் தங்கியிருந்த போதிலும் இறைவழிபாட்டிற்கான ஆலயம் அமைத்திட முயற்சிகள் மேற்கொண்டு அந்த பகுதியில் வாழுகின்ற பக்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எழில்மிகு ஆலயங்களை கம்பீரமாக எழுப்பிக் கொள்கின்றார்கள். இந்த ஆலயங்களின் மூலமாக இந்து பக்தர்களின் பிரார்த்தனைகளும், நேர்த்திக்கடன்களும் மற்றும் இதர பக்தி மார்க்கத்திலான நோக்கங்களும் பூர்த்தி செய்யப்படுகின்றன. இறைவழிபாடு மிகச் சிற்நத ஆத்ம திருப்தியையும் மன அமைதியையும் தெளிவான சிந்தனையையும் வழங்குவதால் வெளிநாட்டில் வாழ்கின்ற இந்துக்களும் ஆலயங்களுக்கும் ஆலய வழிபாட்டிற்கும் மிக அதிகமான முக்கியத்துவத்தை அளிக்கின்றார்கள். இதன் காரணமாக அவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்த போதிலும் மற்றவர்களை ஒன்றிணைத்து நல்ல ஆலயங்களை ஆகம விதிகளின்படி உருவாக்குவதற்கு தேவையான நில ஆர்ஜிதத்தையும் நிதி ஆதாரத்தையும் தவறாது ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். 
 
இப்படியானதொரு இந்து ஆலயம் அமெரிக்காவின் ஆஸ்லேண்டில் ஸ்ரீலெட்சுமிக்காக சிறப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்து கலாச்சாரத்தை ஆஸ்லேண்டில் வாழும் மக்களும் அவர்களின் சந்ததியினரும் இடைவிடாமல் கடைபிடித்து வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தையும், இந்து மத கோட்பாடுகள் மேலும் நல்ல முறையில் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற கோட்பாட்டிலும், அமெரிக்காவின் பாஸ்டனிலிருந்து சுமார் 40 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஆஸ்லேண்ட் என்னும் இடத்தில் இந்த லெட்சுமி திருக்கோயில் அமையப் பெற்றுள்ளது. இந்த ஆலயம் இரண்டடுக்கு நிலையுடன் கட்டப்பட்ட அழகியதொரு கோயிலாக விளங்குகின்றது. ஆலயத்தின் உள்ளே உள்ள மகாமண்டபத்தில் தெய்வீக திருப்பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆலயத்தின் நடுவில் நடுநாயகமாக கொலு வீற்றிருந்து அருள்மிகு லெட்சுமி பக்தர்களுக்கு சகல வளங்களையும் தந்து அருள் பாலிக்கின்றாள். அருள்மிகு லெட்சுமிக்கு இரண்டு புறங்களிலும் பக்தர்கள் வழிபடுவதற்காக விஷ்ணுவின் அவதாரமான வெங்கடேச பெருமானும், முழுமுதற் கடவுளாய் போற்றப்படும் விநாயகரும் தனித்தனி சன்னதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
 
இந்த லெட்சுமி திருத்தலத்தில் எந்நாட்டவர்க்கும் சிவபெருமான் அன்னை சிவகாமி அம்பாளுடன் அருள்பாலிக்கின்ற காட்சி கண்கொள்ளாக் காட்சியாக விளங்குகின்றது. திருத்தலத்தின் மகாபண்டத்து வலப்புறத்தில் சக்தி சொரூப நிலையுடன் கூடிய அம்மனும், வள்ளி தெய்வானுடன் கூடிய சுப்ரமணியசுவாமியும் அருள் பாலித்திருக்கின்றார்கள். ஆலயத்தில் மூலவரை கடந்து சென்றவுடன் நாம் வணங்கக்கூடிய தெய்வீக சன்னதிகளில் நவக்கிரகம், ஐயப்ப சுவாமி, ஆஞ்சநேயர் மற்றும் கருடாழ்வார் ஆகியோர் இருக்கின்றார்கள். இந்த தலத்தில் வாரத்தின் ஏழு நாட்களிலும் பக்தர்கள் வந்து தெய்வ தரிசனம் செய்கின்றார்கள், சிறப்பு பூஜைகளும் கலந்து கொள்கின்றார்கள். ஆலயத்தில் பக்தர்கள் விசேட நாட்களில் சிறப்பு பூஜைகளை மேற்கொள்வதோடு, தம்முடைய இல்லங்களில் நடக்கின்ற விசேஷ பூஜைகளும் மிகச் சிறப்பான முறையில் நடத்தி தருவதாக இங்குள்ள ஆலய குருக்களை அழைத்துச் செல்கின்றார்கள். 
 
இந்த லெட்சுமி திருத்தலத்தின் கீழ் வளாகத்தில் கலாச்சாரம் தொடர்பான விழாக்கள் அனைத்தும் நடத்தப்படுகின்றன. வாடகை அடிப்படையில் இந்த வளாகம் பக்தர்களுக்கு கொடுக்கப்படுகின்றது. ஆலயத்தில் பக்தர்கள் தரிசனம் செய்த பின்பு, பிரசாதம் பெற்றுக் கொள்ள தேவையான வசதிகளும் செய்யப்பட்டன. இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தாங்கள் வரும் போது இறைவனுக்கு படைப்பதற்காக தங்களின் இல்லங்களில் தயார் செய்யப்பட்ட உணவுகளை எடுத்து வந்து ஆலயத்தை இறைவிக்கு படைத்து பின் அதனை கீழ் வளாகத்தில் உள்ள பொதுவான இடத்தில் பக்தர்களின் நன்மைக்காக வைத்து விடுகின்றார்கள். உணவு வகைகளை ஆலயம் வருகின்ற பக்தர்கள் அனைவரும் எடுத்து உண்பதற்கு வேண்டிய வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன. யாருடைய உதவியுமின்றி, நேராக சென்று பக்தர்களுக்கு தேவையான பிரசாதத்தை அவர்களே எடுத்துச் சாப்பிடலாம். பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு புதியதாக பெரியதொரு மண்டபமும் இந்த தலத்துடன் இணைந்த வண்ணம் கட்டியுள்ளார்கள். 
 
இத்திருத்தலத்தில் அண்மையில், பிரமோற்சவ விழா அனைத்து பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் மிகுந்த ஈடுபாட்டுடன் பத்து நாட்களுக்கு மிகச் சிறப்பாக நடதப்பட்டுள்ளது. இந்த விழாவில் சேஷ வாகன உற்சவம், கல்யாண உற்சவம், கருட வாகன உற்சவம், ரத யாத்திரை, அஸ்வ வாகன உற்சவம், லெட்சுமி வெங்கடேச உற்சவம், ஊஞ்சல் உற்சவம், தெப்ப உற்சவம், புஷ்ப வாகன உற்சவம் ஆகியவை தமிழ்நாட்டின் ஸ்ரீரெங்கத்தில் ஸ்ரீரெங்கநாதர் ஆலயத்தில் நடத்துவதைப் போல மிகச் சிறப்பாக நடத்தப்பட்டன. பக்தர்கள் வழிபாட்டிற்காக இந்த லெட்சுமி ஆலயம் காலை 09.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும் மாலை 05.00 மணி முதல் இரவு 09.00 மணி வரையிலும் திறந்திருக்கும். 
 
- அபிதா மணாளன்