மியான்மர் பீலிக்கனின் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம்!

மியான்மர் பீலிக்கனின் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம்!

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வாழும் மியான்மர் என்று அழைக்கப்படும் பர்மாவில் வீற்றிருக்கும் அங்காள பரமேஸ்வரி மூனீஸ்வரர் ஆலயம் இந்த நாட்டின் மிகப் பிரசித்தமான இந்து ஆலயங்களில் ஒன்று. இவ்வாலயம் 150 வருடங்களுக்கு முன்பு யங்கொன் நகருக்கு அருகாமையிலுள்ள பீலிக்கன் கிராமத்தில் அங்கு குடியேறிய தமிழகத் தமிழர்களால் அமைக்கப்பட்டது. விவசாய முயற்சிகளுக்காகச் சென்ற தமிழர்கள் தமது வழிபாட்டுத் தெய்வங்களையும் எடுத்துச் சென்றனர்.

 
விசாலமான அரச மரத்தின் கீழ் திரிசூலத்தை நாட்டி அவர்கள் இந்தக் ஆலயத்தின் தோற்றத்திற்கு உதவினார்கள். பெருந்தொகையான தமிழர்கள் வாழ்ந்த பீலிக்கன் கிராமத்தில் இன்று இருபது தமிழ் குடும்பங்கள் மாத்திரம் வாழ்கின்றன. தமிழர்கள் மாத்திரமல்ல மியன்மாரின் பிற இனத்தவர்களும் இந்த கோவிலில் வழிபாடு செய்கின்றனர். 1962 மார்ச் 02ம் நாள் ஜெனரல் நீ வின் தலைமையில் பர்மிய இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இராணுவ ஆட்சியில் தமிழர்களுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் நாட்டை விட்டு விரட்டப்பட்டனர்.
 
பர்மா அகதிகள் கால் நடையாகச் சென்று தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்தனர். பலர் இந்தக் கோவில் மண்ணைச் சிறிய பொட்டலம் கட்டி எடுத்துச் சென்றனர். இந்த மண்ணை அடிக்கல் குழியில் போட்டுப் புதிய கோவில்களை தமிழ் நாட்டில் அமைத்தார்கள். அங்காள பரமேஸ்வரி முனீஸ்வரர் ஆலயங்கள் பாடிய நல்லூர், தஞ்சாவூர், என்னூர், வையாபாடி ஆகிய கிராமங்களில் பர்மாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மண்ணை வைத்துக் கட்டப்பட்டுள்ளன.
 
மியான்மரின் அங்காள பரமேஸ்வரி முனீஸ்வரர் கோவிலுக்கு அய்யர் கோவில் என்ற அழைப்புப் பெயர் உண்டு. அய்யர் கோவில் என்ற பெயர் தான் மியன்மார் வாழ் தமிழர்களுக்கும் பிற இனத்தவர்களுக்கும் அதிகம் தெரிந்த பெயர்.
 
இந்த ஆலயத்திற்கு நீதி நிலையம் என்ற காரணப் பெயரும் இருக்கிறது. தமக்கிடையிலான பிணக்குகளை இந்த வட்டாரத்தில் வாழும் மக்கள் கோவில் மண்டபத்தில் பேசித் தீர்ப்பார்கள். கற்பூரம் கொழுத்திச் சத்தியம் செய்யும் வழமையும் உண்டு.
 
தீர்க்கப்படாத பிரச்சனைகளை தெய்வத்திடம் ஒப்படைக்கும் வழமையும் இந்தக் ஆலயத்தில் காணப்படுகிறது. ஓவ்வொரு வாரமும் வெள்ளி, செவ்வாய் நாட்களில் விசேட பூசைகளும் நீதி வழங்கலும் நடத்தப்படுகின்றன.
 
மார்ச் – ஏப்ரல் மாதங்களில் வரும் பங்குனி உத்தரத்தோடு பத்து நாள் உற்சவம் இந்தக் கோவிலில் நடை பெறுகிறது. அய்யர் கோவிலின் புனருத்தாரணம் 2002ல் ஆரம்பிக்கப்பட்டு 2011ல் பூர்த்தி செய்யப்பட்டது. கோவில் குடமுழுக்கு தமிழ் நாட்டில் இருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட அந்தணர்களால் நடத்தி வைக்கப்பட்டது. மலேசியா, சிங்கப்பூர், தமிழ்நாடு ஆகியவற்றில் இருந்து பக்தர்கள் பெருந்திரளாக வந்தனர்.
 
மியான்மர் நாட்டின் பீலிக்கான் நகரில் உள்ள அருள்மிகு அன்னை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி-அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் தேவஸ்தானங்களின் ஜீரணோத்தார அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகப் பெருவிழா கடந்த 10.-04.-2011, ஞாயிற்றுக்கிழமை காலை 9.45 மணிக்கு இராஜகோபுரங்களில் உள்ள வெண்கலக் கலசங்களில் நன்னீரூற்றி குடமுழுக்காற்ற சுமார் 2 லட்சம் பக்தர்கள் கண்டு மகிழந்தனர்.
 
தமிழகம், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். மியான்மர் நாட்டில் மிகமிகப் பிரசித்தி பெற்ற இத்தேவஸ்தானங்களின் கும்பாபிஷேகப் பெருவிழாவிற்கு நாடெங்கிலுமிருந்தும் இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் என சமய வேறுபாடின்றி கலந்து கொண்டது இதன் சிறப்பாகும்.
 
மியான்மர் நாட்டின் தலைமை நகரங்களில் ஒன்றான யாங்கோன் நகரிலிருந்து 32 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள பீலிக்கான் என்ற கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அன்னை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி-அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் தேவஸ்தானங்களானது 150 ஆண்டுகளுக்கு முன்னர் அவ்வேளையில் குடியேறியிருந்த தமிழ் விவசாயப் பெருமக்களால் சிறிய அளவில் அரசமரத்தடியில் சூலாயுதம் ஊன்றி ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயமாகவும் சற்று அருகில் சிறிய அளவிலான அருள்மிகு அன்னை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம் அமைத்தும் வழிபாடுகள் செய்து வந்தனர்.
 
வயல் வெளிகள் சூழ்ந்த இக்கிராமத்தில் சுமார் 20 தமிழ்க் குடும்பங்கள் மட்டும் வாழ்கின்றனர் என்றாலும் 64 சுற்றுக் கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் குலதெய்வமாக காக்கும் கடவுளர்களாக அம்மையும் அப்பனுமாக அருளாட்சி செய்ததின் காரணமாய் இத்தலத்தின் புகழும் பெருமையும் பேரருள் கடாட்சமும் நாடுதழுவிய அளவில் பரவியது. 
 
இத்தலங்களில் உள்ள அன்னை அங்காள பரமேஸ்வரின் தீமிதியும் பலிதமாகும் வேண்டுதலும் பிரசித்தம் என்றானதோடு, ''ஐயா கோயில் ''என்று பயபக்தியோடு அழைக்கப்பெறும் அரசோடு ஆலயங்கொண்டுள்ள ஸ்ரீ முனீஸ்வரர் சுவாமிகள் நடுநிலைமாறாத நீதிபதியாக நீதிமன்றமும் அமைத்து அருள்பாலிக்கிறார் என்பது கூடுதல் செய்தி.
 
இந்த ஆலயம் தமிழர்களின் வழிபாட்டுத்தலமாகவும், கலாச்சார மையமாகவும் செயல்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
 
ஒத்தக்கடை ராமன்