உலகின் புகழ்மிக்க மூன்றாம் கற்பக விநாயகர்!

உலகின் புகழ்மிக்க மூன்றாம் கற்பக விநாயகர்!

வெளிநாடுகளில் வாழும் இந்து பெருமக்கள் தங்களின் ஆன்மீக தேடல்களின் சங்கமமாக இருப்பது ஆலயம் என்றே கருதுகின்றார்கள். ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிக்கின்ற இந்துக்கள் அனைவரும் சிறிய இடைவெளிகளில் ஆலயத்தில் ஒன்று கூடி பண்டிகை, விழாக்காலங்கள், குடும்ப மங்கள நிகழ்ச்சிகள், மாதப்பிறப்பு தினங்கள் ஆகியவற்றில் வழிபாட்டையும் மேற்கொண்டு கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று மனநிறைவை அடைகின்றார்கள்.

எல்லா வெளிநாடுகளிலும் நிறைந்து காணப்படுவது வேதநாயக மூர்த்தியான கணேசப் பெருமானின் ஆலயமேயாகும். எளிமை மற்றும் கருணை ஆகியவற்றின் கூட்டே கணபதித் தெய்வம் என போற்றப்படுகின்றது. அனைவரும் எளிதில் வணங்கும் விதமாக எல்லா இடங்களிலும் கோயில் கொண்டு பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுபவரும் இவரே.

தங்களுக்காக பக்தர்கள் செய்யும் வழிபாட்டு முறைகளும் நேர்த்தி கடன்களும் கூட மிகவும் எளிமையானதாக இருந்தால் போதுமானது என நினைக்கும் கருணை உள்ளம் கொண்டவர் வேத முதல்வரான விநாயக பெருமான். துவக்கத்தில் பக்தர்களுக்கு சில சோதனைகளைத் தந்து விட்டாலும், முடிவில் பக்தர்களின் அனைத்து வேதனைகளையும் களைந்து ஆனந்தத்தை அளிக்கக் கூடியவர் விநாயகர் ஆவார். எந்தவொரு இந்து மதம் சார்ந்த வைபவமாக இருந்தாலும் அங்கு விநாயகரை சந்தனத்தாலோ அல்லது மஞ்சளாலோ உருவாக்கி முன்னிறுத்தி வைத்து விடுவார்கள். 

 
கோருகின்ற வரங்களையெல்லாம் பக்தர்களுக்கு எளிதில் வழங்கி ஆசிர்வதிக்கக் கூடியவர் கற்பக விநாயகர் ஆவார். கற்பகம் என்ற தமிழ் வார்த்தை “கல்பத்தரு” என்ற வடமொழிச் சொல்லிலிருந்து தோன்றியதாகும். கல்பத்தரு என்பது கேட்டதையெல்லாம் தருகின்ற கற்பக மரம் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதன் நிழலில் அமர்ந்து கொண்டு எதை வேண்டி நினைத்தாலும் அது அப்படியே நடக்கவும் கிடைக்கவும் செயயும் என பழம் பெரும் புராணங்களில் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன. மேலும் கற்பக விநாயகர், தன்னை உண்மையுடன் வணங்குகிறவர்களின் பிரார்த்தனைகளை கட்டாயம் நிறைவேற்றி வைப்பார் என்ற நம்பிக்கை எல்லா பக்தர்களுக்கும் எப்போதும் இருக்கின்றது. கற்பக விநாயகர் என்ற பெயரில், விநாயகப் பெருமான் இரண்டு இடங்களில் மட்டுமே கோயில் கொண்டுள்ளார். அவற்றில் ஒன்று தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டியிலும் மற்றொன்று இலங்கையின் கச்சாரி - நல்லூர் சாலையில் உள்ள ஜாப்னா என்னும் இடத்திலும் இடம் பெற்றிருக்கின்றன. 
 
இப்போது அவுஸ்திரிலேயாவின் நியு சவுத்வேல்ஸ் மாகாணத்தில் புதிததாக ஒரு கற்பக விநாயகர் ஆலயம் பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டுள்ளது. இலங்கையின் நல்லூர் கற்பக விநாயகர் கோயிலில் புரோகிதர்களில் ஒருவரான சிவஸ்ரீ ஞானசேகர் குருக்கள் தனது வாழ்நாள் முழுவதையும் தெய்வ பணிக்காக அர்ப்பணித்தவர். இவரின் வழித்தோன்றலான இளம் வயதுடைய ரகுநாத சர்மா சில இடம் மாற்றச் சூழ்நிலைகளால் இலங்கையின் கண்டியிலுள்ள அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயிலில் புரோகிதராக நியமிக்கப்பட்டார். பின்பு 1999-ம் ஆண்டு அவுஸ்திரிலேயாவின் தலைநகரான சிட்னிக்கு குடிப் பெயர்ந்தார் ரகுநாத சர்மா. அங்கு கணேச பெருமானுக்கான திருக்கோயில் ஒன்றை அமைக்க எண்ணினார். தனது விருப்பத் தெய்வமான கற்பக விநாயகர் பெயரிலேயே சிட்னியில் கோயில் அமைக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தார். அத்தகைய தனது விருப்பத்தினை தன்னுடைய சில நண்பர்கள், சில பக்தர்கள் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தார். 
 
அதன் பின்பு 2001-ம் ஆண்டு இந்திர ராஜா என்பவரது உதவியுடன் கற்பக விநாயகர் ஆலயம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. 2004-ம் ஆண்டில் குமார ராஜன் என்பவரின் துணையுடன் சிவஸ்ரீ ரகுநாத குருக்கள் நியூ சவுத்வேல்ஸ் பகுதியில் இந்த ஆலயத்தை பதிவு செய்தார். தயாள சிந்தனை கொண்ட, விநாயக பெருமான் மேல் பக்தி கொண்ட சில நிதி உதவியாளர்களின் ஒத்தாசையுடன் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட விநாயகர், ராஜேஸ்வரியம்மன் மற்றும் பாலமுருகன் ஆகிய தெய்வங்களின் பஞ்சலோக விக்ரகங்கள் லிட்கோம்ப் பகுதியில் தற்காலிகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டன.
 
அதன் பிறகு டொக்டர் ரஞ்சனி மற்றும் டொக்டர் சரவணமுத்து ராஜா ஆகியோர் மாதாந்திர விநாயக சதுர்த்தி பூஜைகளை நடத்துவதற்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டார்கள். இதைத் தொடர்ந்து இந்த ஆலயத்தில் காலை மாலை ஆகிய இரு வேளைகளிலும் பூஜைகள் நடைபெறத் துவங்கின. இதன் பின்னர் சற்று காலம் கழித்து வெள்ளிக்கிழமை நாட்களிலும் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை பூஜை நேரங்கள் விரிவுப்படுத்தப்பட்டன. 
 
பக்தர்களின் வருகை அதிக எண்ணிக்கையில் இருக்கப் பெற்றதால் ஆலயத்திற்கான நிரந்தர இடம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. டொக்டர் இந்திர ராஜாவின் மூலம் 123 கிரசெண்ட் பகுதியில் நிலம் பெறப் பெற்றது. பக்தர்களால் அளிக்கப்பட்ட பெரிய அளவிலான பொருள் உதவியுடன் வெகு விரைவிலேயே இந்த ஆலயத்திற்கான கட்டிடப் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றன. 2006-ம் ஆண்டு ஜுலை மாதம் 3-ம் திகதி கற்பக விநாயகர் ஆலயத்தின் மகாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.
 
பூரணமான முறையில் நடத்தப்பட்ட இந்த கும்பாபிஷேக விழாவில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். கும்பாபிசேகத்தை தொடர்ந்து 48 நாட்க்ள சிறப்பு மண்டல அபிசேகங்கள் நடத்தப்பட்டது. அதே போலவே அந்த ஆண்டில் வந்த விநாயக சதுர்த்தியும் ஆலய வளாகத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தற்போது இந்து திருவிழாக்களான நவராத்திரி, கந்தசஷ்டி, திருவெம்பாவை முதலியவையும் பக்தி சிரத்தையுடன் அனுஷ்டிக்கப் பெறுகின்றன. 2006-ம் ஆண்டின் கடைசியில் கற்பக விநாயகர் ஆலயத்தில் தில்லை நடராஜர், சிவகாமசுந்தரி மற்றும் மாணிக்கவாசகர் போன்ற விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 
 
2007-ம் ஆண்டு ஜனவரி 21 மற்றும் 22-ம் திகதிகளில் பஞ்சமுக விநாயகர் பிரதிஷ்டை விழாவும் சிறப்பாக செய்யப்பட்டது. பக்தர்களின் ஒத்துழைப்பு மட்டுமின்றி, தன்னலமற்ற சேவார்த்திகளின் உதவியுடன் ஆலயமும் அதன் சுற்றுப்புறமும் எப்போதும் தூய்மையாக வைக்கப்படுகின்றன. இந்த ஆலயம் புகழ் பெற்ற வழிபாட்டுத் தளமாக மட்டுமல்லாமல் இந்து பக்தர்களுக்கு ஒரு சிறந்த கலாச்சார மையமாகவும் விளங்குகின்றது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். 
 
- அபிதா மணாளன்