இராகு - கேது பரிகார முறைகள்!
புத்திர தோஷம் உடையவர்கள் சனிக்கிழமை தோறும் அவரவர் வீட்டில் அமைந்துள்ள அம்மியின் குழவியை மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு பூஜை அறையில் வைத்து தீப நைவேத்தியம் செய்து, பின்பு தென்மேற்கு திசையை நோக்கி உட்கார்ந்து குடும்பத்தில் உள்ள முதிய வயதுடையவர்களை வரவழைத்து ஆந்த அம்மிக் குழவியை எடுத்து ஆலம் சுற்றி திருஷ்டி கழிப்பது போல திருஷ்டி கழித்து தலையில் வைத்து உருட்ட வேண்டும். இவ்வாறு மூன்று முறை அல்லது ஒன்பது முறை செய்து வருவோமானால் நலம் பயக்கும்.
மேலும் இராகு தோஷம் உடையவர்கள் இராகு காலத்தில் அருகம் புல்லை உலர்த்தி யாக குண்டலத்தில் நெய் இட்டு தீயெழுப்பி அதில் உளுந்து மாவும் - நெய்யும் கலந்த ஒன்பது சிறு உருண்டைகளை ஒன்றன் பின் ஒன்றாக இட வேண்டும். யாகம் என்கிற போது வேத விற்பன்னரைக் கொண்டு செய்தல் என்கிற அவசியம் இன்றி நாமே செய்து கொள்ளலாம். இவ்வாறு யாகத்தில் உருண்டைகளைப் போடுகிற போது இராகு தோஷத்திற்கு இராக கவசம் அல்லது இராகு மந்திரம் சொல்லித் துதிக்கலாம்.
மேலும் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகேஸ்வரம் எனும் இராகு ஸ்தலத்திற்கு சென்று பால் அபிஷேகம் செய்து வரலாம். இதனின்றி காளஹஸ்திக்குச் சென்று வழிபாடு, பரிகாரம் செய்து வருவதும் மிகச் சிறப்பானதாகும்.
கேது தோஷம் உடையவர்கள் தர்பையை உலர்த்தி யாக குண்டலத்தில் நெய் இட்டு தீ எழுப்பி கொள்ளு மாவில் நெய் கலந்து ஒன்பது சிறு உருண்டைகளாக ஒன்றன் பின் ஒன்றாக இட்டு பூஜை செய்யலாம். இதனை எமகண்ட நேரத்தில் செய்வது சிறப்பாகும்.
மேலும் கீழ்ப்பெரும்பள்ளம் எனும் கேது ஸ்தலத்திற்கு சென்று அங்கு எழுந்தருளியுள்ள பகவானைத் தரிசித்து வரலாம்.
- கச்சனம் நடராஜன்