சர்ப்ப தோஷம் நீக்கிடும் திருநாகேஸ்வரம் நாகநாதர் ஆலயம்!

சர்ப்ப தோஷம் நீக்கிடும் திருநாகேஸ்வரம் நாகநாதர் ஆலயம்!

ஜாதகத்தில் லக்னம் 2,5,7,8-ல் இராகு இருப்பதால் ஏற்படும் தோசங்களும், இராகு தசை புத்தி நடைபெறும் பொழுது ஏற்படும் கெடு பலன்களும் இத்தலம் வந்து பரிகாரம் செய்வதால் நிவர்த்தியாகின்றன. நவகிரக ஸ்தலங்களில் இராகுவுக்கு உரியதாக திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயில் கருதப்படுகிறது. சுசீல முனிவரின் மகன் சுகர்மனை நாக அரசனான தக்ககன் என்ற பாம்பு தீண்டியது. இதையறிந்த முனிவர் தக்ககனை மானிடனாகப் பிறக்கும்படி சாபமிட்டார். இந்த சாபத்திலிருந்து விமோசனம் பெற, காசிப முனிவரிடம் தக்ககன் வழி கேட்க, அவர் பூலோகத்திலி லிங்க பிரதிஷ்டை செய்து, சிவ பூஜை செய்தால், சாபம் நீங்கும் என்றார். அதன் படி தக்ககன் பூலோகம் வந்து லிங்க பூஜை செய்ய, சிவன் காட்சியளித்து சாப விமோசனம் அளித்தார்.

அதனால் சிவனுக்கு நாகநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. பாம்புடன் சம்பந்தப்பட்ட கோவில் என்பதால் நவகிரகங்களில் ஒருவரான இராகு இத்தலத்தில் சிவனை வழிபட, தன் தேவியருடன் வந்தார். இத்தல அழகில் மயங்கி இங்கேயே தன் மனைவியருடன் தங்கி விட்டார். பிற்காலத்தில் இராகுவுக்கு அவரது மனைவியருடன் இணைந்திருக்கும் அனுக்கிரக மூர்த்தியாக சிலை வடிக்கப்பட்டு தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்கே இராகு மங்கள இராகுவாக அருளுகிறார். பொதுவாக இராகு மனித தலை நாக உடலுடன் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் முழுமையாக மனித வடிவில் நாகவல்லி, நாக கன்னி என்ற தேவியருடன் காட்சி தருகிறார். நாக தோசம் உள்ளவர்கள், இங்கு இராகுவுக்குப் பால் அபிசேகம் செய்யும் போது பால் நீல நிறமாக மாறும். தினமும் காலை 9.30, 11.30, மாலை 5.30 மற்றும் இராகு காலங்களில் பால் அபிசேகம் நடைபெறுகிறது.

வழித்தடம்

கும்பகோணம் - காரைக்கால் சாலையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து பஸ் வசதி உண்டு. ஆலய திறப்பு நேரம் - காலை 6 மணி முதல் பகல் 12.45 மணி, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி