2023 - 2025 சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள் - கும்பம்

2023 - 2025 சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள் - கும்பம்

திடமான நம்பிக்கையும், ஆளுமை திறனும் கொண்ட கும்ப ராசி வாசகர்களே!
 
இதுவரை உங்களின் ராசிக்கு விரைய சனியாக இருந்து வந்த ராசிநாதன் சனி பகவான், இனி ஜென்ம சனியாக 29.03.2023 முதல் ராசியில் அமருகிறார். விரைய சனி காலங்களில் பல்வேறு பிரச்சனைகளையும், தேவையற்ற செலவுகளையும் செய்து, வெளியில் சொல்ல முடியாத கஷ்டங்களைச் சந்தித்து வந்தீர்கள். இனி ஜென்ம சனி உங்களுக்கு பெரிய துன்பத்தை அடையவிடமாட்டார். இந்த ஏழரை சனி காலம் உங்களுக்கு புதிய அனுபவங்களைப் பெற்றுத் தரும். நல்ல நண்பர்களின் சேர்க்கை மூலம் உங்களின் வாழ்க்கை சூழ்நிலைகளை மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். பாதியில் நின்ற காரியம் செயல்பட துவங்கும். பிறரால் பட்ட துன்பம் விலகும். 
 
தொழில் மூடக்கம், கடன் பெறுவதில் தாமதம், கோர்ட் வழக்குகள் இழுபறி.. போன்ற சகல துன்பங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து சேரும். எதிரிகளிடமிருந்து விடுபடுவீர்கள். பொருளாதாரத்தில் நல்லபடி முன்னேற்றம் உண்டாகும். சிறு உடல் உபாதை வந்து மறையும். ஞாபகமறதி அடிக்கடி வரும். அன்றாட செயல்களை பட்டியலிட்டு எழுதி வைத்து செயல்படுவதன் மூலம் உங்களின் காரியங்ளை சரியாக செய்து கொள்ள ஏதுவாக இருக்கும். 
 
பழைய கடன் தீர, சொத்து விற்றால் கடன் தீரும் என்று முயற்சி எடுத்து, சொத்து விற்காமல் தடைபட்டு வந்த நிலைமாறி, சொத்தை விற்று கடன் முழுவதும் அடைவீர்கள். தொழில் செய்து வருபவர்களுக்கு பழைய வாடிக்கையாளர்கள். மீண்டும் வந்து உங்களை ஊக்கப்படுத்துவார்கள். நோயினால் அவதிப்பட்டு மருத்துவம் பார்த்து  வந்தவர்கள், பாட்டி வைத்தியத்தில் குணமடைவீர்கள். அடுத்தவரை நம்பி கொண்டிருந்தவர்கள், சொந்த கடலில் நின்று சுயதொழில் செய்து முன்னேற்றம் காண்பீர்கள்.
 
புதிய திட்டங்களை செயல்படுத்த தேவையான விடயங்களை தேர்வு செய்து நல்ல பலனை பெறுவீர்கள். காற்றுள்ள போதே தூற்றி கொள் என்பது போல காலம் கனியும் போதே அதை பயன்படுத்தி வளமாக வாழ பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
 
பரிகாரம்:
 
ஞாயிறுக்கிழமை ராகு காலத்தில் மாலை 04.30 - 06.00 மணிக்குள் பைரவருக்கு 27 மிளகை, சிவப்பு துணியில் கட்டி, நல்லெண்ணெய் தீபம் தொடர்ந்து போட்டு வர உங்களின் அனைத்துவித காரியமும் சிறப்பாக நடக்கும்.