திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில்

 
ஆன்மீக சேவைகள்: 2000Book Now
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில்

நவக்கிரகங்களின் கோயில்களிலேயே மிகவும் பிரபலமான ஒரு கோயில் சனைச்சர பகவான் (சனீசுவரன் என பலராலும் கூறப்பட்டாலும் சமஸ்கிருதத்தில் "மெதுவாக செல்பவன்" என பொருள் படும் "சனைச்சர:" என்ற சொல்லே இவரது திரு நாமமாகும்) எழுந்தருளியிருக்கும் திருநள்ளாறு ஆகும்.

தமிழ் நாட்டை சேர்ந்த கோயிலாக கருதப்பட்டாலும் உண்மையில் இக்கோயில் இருக்கும் திருநள்ளாறு எனும் இடம் தற்பொழுது புதுச்சேரி மாநிலத்தில் தான் உள்ளது. காரைக்காலுக்கு மிகவும் அருகிலுள்ள திருநள்ளாறு எனும் புண்ணிய ஸ்தலத்தில் ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் என்ற நாமத்தில் சிவ பெருமானும், பிராணாம்பிகையாக தாயாரும் வீற்றிருக்கிறார்கள். இவர்களிருவருக்கும் நடுவே உள்ளது சனைச்சர பகவானின் சன்னதி. அபய ஹஸ்தத்துடன் காட்சி தரும் சனைச்சர பகவானின் திரு உருவம் இக்கோயிலின் சிறப்பாகும்.

7-ஆவது நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படும் தர்பாரண்யேசுவரர் திருக்கோயில் கரைக்கலிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சனைச்சரரின் பார்வையால் பாதிக்கப்பட்ட நள சக்கிரவர்த்தி பல இன்னல்களை அனுபவித்து கடைசியாக இக்கோயிலுக்கு வந்து "நள தீர்த்தம்" என இன்றும் பிரபலமாக விளங்கும் இக்கோயிலின் புஷ்கரிணியில் ஸ்நானம் செய்து தர்பாரண்யேசுவரரை தரிசனம் செய்து சனி தோஷத்திலிருந்து முக்தி பெற்றதாக கருதப்படுகிறது. ஆகவே சுமார் இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடை பெரும் சனிப் பெயர்ச்சி நடைபெறும் நாளன்று இக்கோயிலில் பக்தர்கள் பல ஆயிரக் கணக்கில் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயிலை பற்றிய பல தகவல்கள் புதுச்சேரி அரசாங்க இணைய தளத்தில் தரப்பட்டுள்ளதை காணலாம்.

சனி பகவானுக்கு உரிய நிறம், உலோகம், தானியம் போன்றவை வருமாறு:-

நிறம்: கறுப்பு, தானியம்: எள், வாகனம்: காகம், மலர்: கருங்குவளை, உலோகம்: இரும்பு, கிழமை: சனி, இரத்தினம்: நீலம், பலன்கள்: வியாதி, கடன், பேய், பிசாசு பயம் நீங்குதல்