யோகா கலை - 1

யோகா கலை - 1

சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் உதயமானதாக உலகமெங்கும் போற்றப்படும் யோகா கலை, இன்று மேற்கத்தைய நாடுகளில், கீழ்த்திசை நாடுகளில், ஏன் சீனத்திலும்,ஆஸ்திரேலியாவிலும் கூட கடைகட்டி விற்கப்படுகிறது. லண்டனில் மட்டும் மொத்தம் முன்னூறு யோகா மையங்கள். சீனாவில் கிட்டத்தட்ட அறுநூறு யோகா மையங்கள். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மட்டும் இருநூறு யோகா மையங்கள்.

ஆனால் இந்தக்கலையைக் கண்டறிந்த தாயகமான இந்தியத்திருநாட்டிலோ, உரிய மதிப்பின்றி இருந்த இந்தக்கலை, இப்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும், அதிகரித்துவரும் மனோதத்துவ ரீதியிலான பிரச்சினைகளாலும், மீண்டும் உரிய முக்கியத்துவத்தைப் பெறத் தொடங்கியுள்ளது.

இன்றைக்கு கொரியர்கள் நடத்தும் எங்கள் நிறுவனம் யோகா பயிற்சியைக் கொடுக்கிறது. இதன் புனிதத்தையும், நோய் தீர்க்கும் தன்மையையும் உணர்ந்த கொரியர்களும் ஆர்வத்துடன் பங்குபெறுகிறார்கள். தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்கிறார்கள். இதன் பெருமையைச் சிலாகிக்கிறார்கள். இதன் மூலம் அடைந்த பலன்களை வெளிப்படையாகச் சொல்கிறார்கள்.

யாருக்கு பயன் ?

இன்றைய நவீன யுகத்தில் ஆண்களும் பெண்களும் குறைந்தபட்சம் எட்டிலிருந்து பத்துமணிவரை பணிபுரிய வேண்டியுள்ளது. வீடு திரும்பும் நேரத்தையும் கணக்கில் கொண்டால் சராசரியாக பத்திலிருந்து பதினாலு மணிநேரம் செலவு செய்கிறார்கள். இந்த நேரத்தில் மூளைக்கு வேலை கொடுக்கவேண்டியுள்ளது. இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இலக்கு முடிவதற்குள் பணியை நிறைவு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

பணி முடிந்து வீடு வந்தால் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் திருப்தி செய்ய உணவு தயாரித்தல், குடும்ப வேலைகள், மாமியார், மாமனார், அத்தை மகன், பெரியம்மா பையன், நீண்டகால நண்பர், எதிர்த்த வீட்டுத் தோழர், வீட்டு வாடகை, பஞ்சர் ஆன பைக், பக்கத்து வீட்டில் இருந்து கழிவு நீர் வாசனை, டிக்கெட் புக்கிங், தெருவிளக்கு எரியாதது, சாலை சரியில்லாதது, காப்புறுதி, கடன் அட்டை காலக்கெடு தவறியது, வங்கி என்று சுற்றிலும் அம்புகளால் துளைபடுகிறார் நமது மனது என்னும் அபாக்கியசாலி.

இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அதற்கு சிறந்த வழி, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது ஒதுக்கி யோகா போன்ற பயிற்சியில் ஈடுபடுவது.

இதன் மூலம் கர்ப்பிணிப் பெண்களில் இருந்து, மன அழுத்த நோய்க்கு ஆளானவர்கள் வரை பயனடையலாம். நாட்பட்ட தலைவலி, முதுவலி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு உள்ளவர்கள், எப்போதும் வேலையைச் சிந்தித்து அதன் மூலம் உயர் இரத்த அழுத்தம், மைகிரேன், உடல் வலி, தூக்கமின்மை ஆகிய நோய்களுள்ள அனைவரும் பயன் அடையலாம். வியாதிகள் ஏதுமின்றி உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்பும் அனைவரும் பயனடையலாம்