தொட்டால் நோய் விலகும் - ரெய்கி
இது ஜப்பானில் பிறந்த முறையாகும். இதைக் கண்டுபிடித்து உருவாக்கியவர் மிக்காவோ உசுஇ. அவரிடம் மாணவன் ஓருவன் ஒரு கேள்வி கேட்டான். ஏசு மட்டும் பலரைத் தொட்டால் குணமானது. மற்றவர் தொட்டடால் ஏன் குணமாவதில்லை.? எல்லாரும் தொட்டால் குணமாக்க முடியாதா? என்று கேட்டான் .இக் கேள்விக்கு விடை தேடி பல நாடுகளுக்குச் சென்று வந்தார். பல கால முயற்சி, தேடலுக்குப் பின் அவர் கண்டுபிடித்ததுதான் ரெய்கி.
ரெய்கி என்பதில் ‘ரெய்’ என்கிற ஜப்பானிய சொல்லுக்கு பிரபஞ்சம் என்று பொருள். ‘கி’ என்றால் சக்தி,சக்தியால் குணப்படுத்துதல். அதாவது நம்மைக் சுற்றியுள்ள பிரபஞ்ச சக்திதான் மின்காந்த அலை. அதை முறைப்படுத்தி பயன்படுத்தி நோயைக் குணப்படுத்துவதே இம்முறையாகும். இந்த முறையைக் கற்றுக் கொண்டவர்கள் தனக்கும் பிறருக்கும் இதைப் பயன்படுத்தி நிவாரணம் பெறமுடியும். மருந்துகள் எதுவும் இல்லை. பக்க விளைவுகள் எதுவும் இல்லை. உள்ளங்கையால் நோயாளியைத் தொட்டு அளிக்கப் படும் சிகிச்சை இது. நம் பிராணசக்தியை கூட்டிக் கொண்டு நமக்கு நோய் வராமல் தடுத்துக் கொண்டு, நம் பிராண சக்தியினை , நாம் மற்றவர்கள் உடலில் செலுத்தி மற்றவர் நோய்களை குணப்படுத்துவதுதான் இந்த சிகிச்சை முறை.
இதில் முதலில் நமது ஏழு சக்கரங்களும் திறக்கப்படும். நமது முதுகுத் தண்டில் உள்ள சக்கரங்கள் அனைத்தும் வலஞ் சுழியாகச் சுற்றினால் பிரபஞ்ச சக்தி நம் உடலில் உள் வாங்கப்படும் . இடஞ் சுழியாகச் சுற்றினால் நம் உடலில் உள்ள பிரபஞ்ச சக்தி கொஞ்சம் , கொஞ்சமாக வெளியேறி உடல் இறப்பை நோக்கி விரையும்.இந்த சக்கரங்கள் அனைத்தும் பஞ்ச பூதங்களின் கூட்டால் உருவாக்கப்பட்டது.