குதூகலம் தரும் கோகுலாஷ்டமி!

குதூகலம் தரும் கோகுலாஷ்டமி!

கடவுளின் சில அவதாரங்கள் நம்முடைய பக்தியை மேம்படுத்தும் வகையிலே இருக்கும். இன்னும் சில அவதாரங்கள் நம்முடைய உள்ளம் எல்லாம் நிறைந்து நம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகின்ற வகையில் அமைந்து விடும். கடவுள் அவதாரங்கள் யாவுமே முக்கிய மூன்று பிரதான நோக்கங்களை கொண்டிருக்கும். அவை, நல்லவர்களை வாழ வைத்தல், தீயவர்களை அழித்தல் மற்றும் தர்மம் அழியாமல் காத்து அவற்றை பூமியில் நிலை நாட்டுதல். இந்த வகையில் கிருஷ்ணாவதாரம் மகிழ்ச்சிக்குரியதாகவும் மேற்காண் நோக்கங்களை முழுமையாக நிறைவேற்றுவதாகவும் அமைந்துள்ளதை நாம் உணர்கின்றோம்.

 
எப்பொழுதெல்லாம் பூமியில் தர்மம் நசிந்து அதர்மம் தலையெடுக்கின்றதோ அப்பொழுதெல்லாம் நான் அவதார ரூபியாக தோன்றி தர்மத்தை நிலைநாட்டிட அவதரிப்பேன் என கீதையின் நாயகன் அருளியிருக்கின்றார். துரியோதனன் போன்ற தர்ம நெறி தவறிய கொடிய அரசர்களின் மற்றும் அசுரர்களின் போக்கை கண்டித்து தர்மம் தலைத்தோங்கச் செய்து உலகம் உய்வதற்காக துவாபர யுகத்தில் அவதரித்த கிருஷ்ண பெருமான் மகாபாரத சரித்திரத்தில் முக்கியமான ஒரு பாத்திரமாய் இடம் பெற்றுள்ளார். 
 
முழு முதற் கடவுளான மகாவிஷ்ணுவே கிருஷ்ணராய், வசுதேவரின் மகனாய் பிறந்தார். யதுகுலத்தின் தலைவனான சூரசேனன் மதுரா நகரினை ஆட்சி செய்து வந்தார். அவரது மகனான வசுதேவர் தேவகர் என்பவரின் மகளான தேவகியை திருமணம் செய்து மகிழ்ச்சியாய் வாழ்ந்து வந்தார். தேவகியின் ஒன்று விட்ட சகோதரன் கம்ச மகாராஜன். அவன் மிக கொடிய குணத்தை கொண்டவன். உக்கிரசேனன் என்பவரின் மகன். தந்தை என்றும் பாராமல் உக்கிரசேனனை கொடுமைப்படுத்தி வந்தான் கம்சன். ஆயினும் தங்கையாகிய தேவகி மீது அன்பு பூண்டு ஒழுகினான். அவன் புதுமண தம்பதியரை தேரில் அழைத்துக் கொண்டு வீதி வழியாக சென்று கொண்டிருந்தான். அப்போது, ஆகாயத்திலிருந்து அசரீரி கேட்டது.  “மூடனே கம்சா! உன் சகோதரியின் வயிற்றிலே பிறக்க போகும் எட்டாவது குழந்தை உன்னை கொல்லப் போகிறதடா” அசரீரியின் உட்கருத்தை புரிந்து கொண்ட கம்சன் உடனே கோபம் அடைந்து, தங்கை உயிருடன் இருந்தால் அல்லவோ பிள்ளை பிறந்து என்னை கொலை செய்யும் என்று எண்ணி வாளை உருவி தங்கை தேவகியை கொல்ல எத்தனித்தான். இதனை கண்ணுற்ற வசுதேவர், “கம்சா! உன் தங்கையால் உனக்கு ஒரு கெடுதலும் நேராது நான் பார்த்துக் கொள்வேன். அவளுக்குப் பிறக்க போகும் அத்தனை குழந்தைகளையும் உன்னிடமே ஒப்படைத்து விடுகின்றேன். அந்த குழந்தைகளை நீ உன் இஷ்டம் போல் என்ன வேண்டுமானலும் செய்துகொள்” என்று வாக்களித்தார். இதனால் சமாதானம் அடைந்த கம்ச மகாராஜன் வசுதேவரையும் தேவகியையும் சிறையில் அடைத்தான். பின்னர் அவர்களுக்கு சிறையில் பிறந்த ஆறு குழந்தைகளையும் வாளுக்கு இரையாக்கினான். 
 
பரம்பொருளான மகாவிஷ்ணு, ஏழாவது கர்ப்பத்தை வசுதேவரின் மற்றொரு மனைவியான ரோஹிணியின் வயிற்றில் வளரச் செய்தார். அவரே ஆயர்பாடியில் பலராமராக பிறந்தார். மேலும் எட்டாவது குழந்தையாக விஷ்ணு பெருமான் ஆவணி மாத அஷ்டமி நாள் நள்ளிரவில் வசுதேவர் தேவகி தம்பதியருக்கு குழந்தையாக பிறந்தார். அதே நேரத்தில் விஷ்ணுவின் மாய சக்தியாகிய அம்பிகை ஆயர்பாடியில் வசித்த யசோதைக்கும் நந்தகோபனுக்கு மகளாகப் பிறந்தாள். வசுதேவரின் ஆத்ம நண்பராக விளங்கியவர் நந்த கோபர். குழந்தை பிறந்ததும் விஸ்வரூபம் எடுத்து தேவகி வசுதேவர் தம்பதியருக்கு தெய்வீக வடிவத்தை காட்டியது. நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரைமலர் முதலியன ஒளி வீசின. மஞ்சள் நிறப்பட்டாடை, ஸ்ரீவத்சம், கவுஸ்துபமணி ஆகியவையும் அவருக்கு அழகு செய்தன. 
 
சிறையில் இருந்த தேவகியும் வசுதேவரும் பரம்பொருளாகிய பரந்தாமனே தங்களுக்கு அருமை பிள்ளையாக பிறந்திருப்பதை அறிந்து அகமிக மகிழ்ந்தனர். பச்சிளம் குழந்தையாய் இருக்க வேண்டிய பரந்தாமன் மேற்சொன்னவாறு சர்வ அலங்காரத்தில் இருந்து கொண்டு, வசுதேவரிடம் தந்தையே! என்னை ஆயர்பாடிக்கு எடுத்துச் செல்லுங்கள். உங்கள் நண்பர் நந்த கோபரின் மனைவியாகிய யசோதைக்கு பிறந்துள்ள யோக மாயா என்னும் பெண் குழந்தையை இங்கு கொண்டு வந்து சேர்த்து விடுங்கள் என்று கட்டளையிட்டு தன் தெய்வீக கோலத்தை களைந்து, சாதாரண குழந்தையாக மாறினார். அந்த சமயத்தில் சிறையின் கதவுகள் தாமாகவே திறந்து கொண்டன. சிறைகாவலர்கள் யாவரும் ஆழ்ந்த தூக்கத்தில் மெய் மறந்து போய் கிடந்தனர். தனக்கு பிறந்த மகன் கண்ணுக்கு கண்ணான கண்ணனை தலை மீது வைத்துக் கொண்டு வசுதேவர் ஆயர்பாடிக்கு கிளம்பினார். அப்போது பலத்த மழை பொழிய ஆரம்பித்தது. குழந்தையின் மேல் மழைத் தண்ணீர் விழுந்து குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஆதிசேஷன் குடையென வந்து நின்று கொண்டார். யமுனை ஆறு வசுதேவர் நடந்து செல்வதற்கு ஏதுவாக இரண்டாக பிளந்து வழி விட்டது. ஆற்றினை எளிதில் கடந்த வசுதேவர், நந்தகோபன் மாளிகையில் கண்ணனை ஒப்படைத்து விட்டு யோக மாயா என்னும் பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு மதுராபுரி வந்து சேர்ந்தார். 
 
கம்ச மகாராஜன், தேவகிக்கு குழந்தை பிறந்துள்ளது என்பதை அறிந்து அதனை கொல்வதற்காக ஓடோடியும் சிறைச் சாலைக்கு வந்தான். ஆனால் பெண் குழந்தை பிறந்துள்ளது என்பதை அறிந்த அவன் ஏமாற்றம் அடைந்தான். ஏனென்றால், ஆண் குழந்தையால் மட்டுமே அவனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பது அசரீரியின் வாக்கு. இருந்த போதிலும், சந்தேகத்துடன் அந்த பெண் குழந்தையின் கால்களை பிடித்து சுழற்றி வானிலே வீசினான். அந்த பெண் குழந்தை காளியாய் மாறி “அடே கம்சா, உன்னை கொல்ல பிறந்த குழந்தை கண்ணன் ஆயர்பாடிக்கு சென்று விட்டான்” என்று சொல்லி எச்சரித்து மறைந்தது. இவ்விதமாக அதர்மத்தை ஒழிக்க அவதிரித்த கண்ணன் பிறந்த நாளையே கிருஷ்ண ஜெயந்தி என்றும் கோகுலாஷ்டமி என்றும் இந்துக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றார்கள். 
 
கோகுலாஷ்டமி தினத்தில் குழந்தை கிருஷ்ணனுக்கு மிகவும் விருப்பமான பட்சணங்களாகிய வெண்ணெய், பால், திரட்டுப்பால், பழங்கள் ஆகியவற்றை கி்ருஷ்ணனுக்கு நைவேத்தியம் செய்து வழிபடுவதே வழக்கமாகும். இந்த நல்ல நாளில் பாகவதம், பகவத்கீதை ஆகியவற்றை பாராயணம் செய்து கண்ணனை மனதிலே இருத்தி பக்தி பெருக்குடன் வழிபாடுகள் செய்தால் அறிவாற்றல், நற்புத்தி, நேர்மை, சமயயோஜித்த புத்தி, அடக்க உணர்வு, வளமான வாழ்வு முதலியவை கிட்டிடும் என்பது நம்பிக்கை. 
 
அபிதா மணாளன்