காய்கள் - கனவுகளும் பலன்களும்

காய்கள் - கனவுகளும் பலன்களும்

நீங்கள் ஒரே சமயத்தில் பல காய்கறிக் குவியல்களை கனவில் கண்டால் உங்கள் முதலாளிக்கு அல்லது மேல் அதிகாரி கட்கு உங்களிடம் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. அதைப் போக்க வேண்டுமானால், இனிமேலாவது உங்களுடைய ஒவ்வொரு வேலையையும் உரிய காலத்தில் செய்து முடிக்க வேண்டும் குவிந்து கிடக்கும் பழைய ஃபைல்களையும் கூடுமான விரைவில் பைசல் செய்து வர வேண்டும். இவ்விரண்டு காரியங்களையும் சிறிது சிரமப்பட்டாவது செய்வீர்களானால் உங்களுக்கு உத்தியோக உயர்வு காத்திருக்கிறது.
 
காய்கறிகளைச் செடிகளிலிருந்து பறிப்பது போல் கனவு கண்டால் உங்களைச் சேர்ந்தவர்களே உங்களுக்கு தீமை செய்ய முயலுவார்கள். காரணம் அவர்களை நீங்கள் ஒரு பொருட்டாக மதிக்காமல் அகம்பாவத்தோடு நடந்து கொள்வதாக அவர்கள் எண்ணுகிறார்கள். அதற்கு இடங்கொடாதவாறு இனிமேலாவது நீங்கள் எல்லாரிடமும் சிறிது பணிவோடு நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சரியான சமயத்தில் உங்களை அவர்கள் காலை வாரி விட்டு விடுவார்கள்.
 
காய்கறிகளைச் சமைப்பது போல் கனவு கண்டால் நீங்கள் இப்போது ஈடுபட்டிருக்கும் அலுவல்கள், அவ்வளவு இலாபகரமானவை அல்ல என்றாலும் அவற்றை நீங்கள் அரைகுறையாக விட்டுவிடாதீர்கள். ஏனென்றால் இவற்றின் முடிவில் நீங்கள் சிறிதும் எதிர்பாராத ஒரு பெரிய பயனை அடையப் போகிறீர்கள். ஆகையால் காரியங்களை உற்சாகமாகக் கவனியுங்கள்.
 
காய்கறிகளை நீங்கள் உண்பது போல் கனவு கண்டால் நீங்கள் எப்போதோ அனுபவித்த சில சுகங்களுக்கு இப்போது விலை கொடுக்குமாறு கேட்கப்படுவார்கள். நீங்கள் அதை ஓசைப்படாமல் கொடுத்துவிடுவதே நல்லது. அது தான் உங்கள் எதிர்கால நிம்மதிக்கு உகந்ததாய் இருக்கும்.
 
நீங்கள் காய்கறிகளைப் பயிரிடுவது போல் கனவு கண்டால் உங்கள் குடும்பம் செழிப்பாக வளர்ச்சி அடையும். நீங்கள் உங்கள் மனைவி மக்களும் ஆரோக்கியமாக வாழ்வீர்கள். உங்களுடைய செல்வநிலையும் உயர்வு அடையும். ஆனால் இத்தனை நன்மைகளும் நீடித்து நிற்க வேண்டுமானால் நீங்கள் எல்லோருமே உங்களுடைய உழைப்பைக் குறைத்துக் கொள்ளக்கூடாது.
 
சுரைக்காய், பூசணிக்காய், பரங்கிக்காய் போன்ற பெரிய காய்களைக் கனவில் கண்டால், குடும்பத்தில் உள்ள முதியவர்களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய சங்கதிகள் நிரம்பி இருக்கின்றன. அவர்கள் தங்கள் அனுபவத்தில் கண்ட உண்மைகள். உங்களுடைய வாழ்க்கைக்கு மிகவும் பயன்படக் கூடியவை அவர்களுடைய ஆலோசனைகளை மட்டும் கேட்டு நடப்பீர்களானால் உங்கள் சிக்கல்கள் பலவற்றிலிருந்து நீங்கள் எளிதில் விடுபட இயலும்.
 
தமிழ்வாணன்