சிற்பச் சிறப்பின் பிறப்பிடமாய் விளங்கும் சுசீந்திரம் ஸ்தாணுமாலயான் ஆலயம்!

சிற்பச் சிறப்பின் பிறப்பிடமாய் விளங்கும் சுசீந்திரம் ஸ்தாணுமாலயான் ஆலயம்!

குமரி மாவட்டத்தின் பிரம்மாண்டமான கோயில்களில் ஒன்று சுசீந்திரம். கன்னியாகுமரிப் பாதையில் இது இருப்பதனால் பொதுவாக இங்கே வந்திருக்கக் கூடியவர்கள் அதிகம். பெரும்பாலானவர்கள் பயணத்தின் நடுவே புயல் வேகமாக கோயிலைக் கடந்து சென்றிருப்பார்கள். சற்றே கூர்ந்து கவனிப்பவர்கள் தென் தமிழ்நாட்டின் வரலற்றையே இந்த ஒரு கோயிலில் இருந்து அறிந்துகொள்ள முடியும்.

 
கன்னியாகுமரி - நாகர்கோயில் சாலையில் நாகர்கோயிலில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது சுசீந்திரம். சுசீந்திரம் கோயில் அமைந்திருக்கும் இடம் வரலாற்றுரீதியாக முக்கியத்துவம் கொண்டது. கடலில் இருந்து சுசீந்திரம் வரை விரிந்து கிடக்கும் மணக்குடி காயல் ஒரு காலத்தில் சிறிய துறைமுகம் போலவே இயங்கியது. அதனருகே உள்ள கோட்டாறு பழங்காலம் முதலே முக்கியமான ஒரு சந்தைத்தலம். ஆகவே வணிக முக்கியத்துவம் கொண்ட இடத்தில் அமைந்த பெரும் கோயில் இது.
 
தென்னாட்டின் முக்கியமான நெல்லுற்பத்தி மையமாக இருந்த நாஞ்சில்நாட்டின் நிர்வாகத் தலைமையகமாக இக்கோயில்தான் நெடுங்காலமாக இருந்துள்ளது.
 
இக்கோயிலைச் சுற்றியிருக்கும் வேளாள ஊர்கள் 12 பிடாகைகளாக வருவாய்ப் பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தன. அவர்கள் அனைவருமே தங்கள் ஆலோசனைகளை சுசீந்திரம் கோயிலில் சுப்ரமணியசாமிகோயிலின் முன்புள்ள செண்பகராமன் முற்றத்தில் கூடித்தான் தீர்மானிப்பது என்ற வழக்கம் இருந்தது. இது சுதந்திரம் கிடைக்கும் காலம் வரை இப்படியே நீடித்தது.
 
மிகப்பெரிய நிலச்சொத்துள்ள கோயில் சுசீந்திரம். அந்நகரமே அக்கோயிலை ஒட்டி உருவானதுதான். கோயிலின் நிலங்கள் கோயிலைச் சுற்றியிருக்கும் பெரும்பாலான கிராமங்களில் பரந்து கிடந்தன. அவற்றை நிர்வாகம் செய்யும் அமைப்புகள் இருந்தன. அந்த நிலத்திலிருந்து கிடைக்கும் வருவாய் பொதுக்காரியங்களுக்குச் செலவிடப்பட்டதோடு பஞ்சத்துக்கான சேமிப்பாகவும் இருந்தது.
 
சுசீந்திரம் என்ற பேரை சமகால பக்திநூல்கள் பலவகையாக விளக்குகின்றன. பெரும்பாலும் அவை வரலாற்று பேதம் இல்லாத சொற்பகுப்புகள். சுசீ+இந்திரம் என்று பகுத்து இந்திரன் அகலிகை விஷயத்தில் சாபம் பெற்று இங்கே வந்து தன் சாபத்தை தீர்த்து சுத்தம் செய்து கொண்டதனால் இப்பெயர் என்பார்கள். ஆனால் கோயிலில் அகலிகையின் சிலை கிடையாது. பழைய நூல்களிலும் அப்படிப்பட்ட குறிப்பேதும் இல்லை.
 
ஸ்ரீ இந்திரம் என்ற பெயரே பழந்தமிழில் சிவிந்திரம் என்று மருவியது என்பது ஆய்வாளர் கருத்து. ஸ்ரீ என்பது சி என்றாகும் மரபு உண்டு. கிபி 941 ஆண்டுள்ள கல்வெட்டு ஒன்றில் சுசிந்திரம் என்ற பெயர் முதன்முதலில் வருகிறது. கிபி 11 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு இந்த ஊரை ‘ராஜராஜப் பாண்டிநாட்டு உத்தமசோழ வளநாட்டு நாஞ்சில்நாட்டு பிரம்மதேயம் சுசீந்திரமான சுந்தர சதுர்வேதி மங்கலம்‘ என்று சொல்கிறது
 
சுசீந்திரம் பிரம்மதேய கிராமம். இது சதுர்வேதிமங்கலமும் கூட. அதாவது மன்னர்களால் வேதம் பயில பிராமணர்களுக்கு நிலமும் கிராமமும் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நகரம் இது. இது முதலில் தொன்மையான நாஞ்சில்நாட்டு ஆட்சியாளர்களின் ஆதிக்கத்திலும் பின்பு சேரர் ஆதிக்கத்திலும் அதன்பின் பாண்டிய ஆட்சியிலும் பின்பு சோழர் ஆட்சியிலும் மீண்டும் பாண்டிய ஆட்சியிலும் நடுவே நாயக்கர் ஆதிக்கத்திலும் கடைசியாக வேணாட்டு திருவிதாங்கூர் ஆட்சியிலும் இருந்துள்ளது. ஒவ்வொருவரும் கோயிலை விரிவாக்கம் செய்து கட்டியிருக்கிறார்கள்.
 
இது ஐதீகப்பிரகாரம் மும்மூர்த்திகளின் கோயில். ஸ்தாணுமாலயன் என்பது மூலவரின் பெயர். ஸ்தாணு என்றால் சிவன். மால் விஷ்ணு. அயன் பிரம்மன். ஆனால் மையச்சிலை சிவலிங்கம்தான். அந்த லிங்கம் மும்மூர்த்தியாக வழிபடப்படுகிறது. கல்வெட்டுகள் இக்கோயில் மூலவரை மகாதேவர், சடையார், நயினா, உடையார் எம்பெருமான், பரமேஸ்வரன் போன்ற பெயர்களில் குறிப்பிடுகின்றன. இக்கோயிலில் உள்ள செண்பகராமன் மண்டபத்தில் உள்ள ஒரு கல்வெட்டில்தான் முதலில் தாணுமாலயன் என்ற பெயர் வருகிறது. இக்கல்வெட்டு 1471 ஆம் ஆண்டைச்சார்ந்தது.
 
கோயிலின் சிற்ப – கட்டுமான அமைப்பு:-
 
பிற பேராலயங்களைப் போலவே இதுவும் பல கோயில்களின் ஒரு பெரிய தொகுப்பு. கோயிலுக்கு முன்னால் உள்ள முன்னுதித்த நங்கை என்ற கோயில் தான் ஆகமப் பழையது. இது ஒரு காளிகோயில். பின்பு வந்தது உள்ளே ஒரு பாறை மேல் இருக்கும் பழமையான சிவன் கோயிலான கைலாசநாதர் ஆலயம். அதன்பின் மையக்கோயில் பெருமாள் கோயில்கள் மற்றும் பல்வேறு சிற்றாலயங்கள்.
 
மூலதிருநாள் மகாராஜா காலத்தில் – பேச்சிப்பாறை அணை கட்டப்பட்டபோது - தான் சுசீந்திரம் ராஜகோபுரம் கட்டப்பட்டது. ஏற்கனவே அஸ்திவாரம் மட்டுமே இருந்தது. அப்போது மண்ணைத் தோண்டும்போது கிடைத்த மாபெரும் ஒற்றைக்கல்லில் அனுமார் சிலை உள்ளே நிறுவப்பட்டது. இன்று சுசீந்திரம் அனுமார் மிக முக்கியமான வழிபாட்டு மையம். கோயிலுக்குள் உள்ள கொன்றைமரம் புராதனமானது – இப்போது பாஸில் ஆக உள்ளது அது. இக்கோயிலின் தலவிருட்சம்.
 
கோயிலுக்குள் உள்ள சிற்பங்கள் உலகப் பிரசித்தமாகும். நாயக்கர் கால சிற்பக்கலையின் சிறந்த மாதிரிகள் இங்கே உள்ளன. வீரபத்ர சிலைகள். குறவன் குறத்தி சிலைகள். கல்லை உலோக வழவழப்புவரை கொண்டு சென்றிருப்பதன் நுட்பம் மிகத் தேர்ச்சியான கலையைக் காட்டுகிறது. கோயிலின் பூசைகள் நிர்வாக முறைகள் திருவிழாக்கள் அரிய பொக்கிஷங்களை உள்ளடக்கியிருக்கின்றது. 
 
இக்கோவில் கட்டிடங்கள், சிற்பங்கள் மற்றும் ஓவியங்களை காண குறைந்தது 15 நாட்கள் ஆகும் என்று தமிழ் சான்றோர்கள் தெரிவிக்கின்றார்கள். ஒவ்வொரு சிற்பங்களும் அத்தனை நுண்ணிய வேலைப்பாடுகளால் அமைக்கப் பெற்றுள்ளதாம். காரணம் அனைத்து நாட்டு அரசர்களும் இக் கோவிலை விரிவாக்கம் செய்திருப்பதன் அழகிய வெளிப்பாடுகள்தாம் இவை. கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை 1949ல் சுசீந்திரம் கோயிலின் தேவாரப்பாடசாலை விழாவுக்கு தலைமைதாங்கிப் பேசும்போது ”ஐரோப்பாவில் அமேசான் என்ற வீரப்பெண்கள் இருந்தார்கள். அவர்கள் வில் நாணை இழுத்து அம்பு பூட்டும் வசதிக்காக தங்கள் ஒரு மார்பை வளரவிடாமல் செய்வார்கள். இந்த விஷயத்தை அறிந்த ஓர் ஐரோப்பியர் இந்தக் கோயிலில் ஒரு சிற்பத்தைப் பார்த்து ‘ஓ இங்கும் அமேசான்‘ என்றா ராம். அவர் குறிப்பிட்டது இந்த கோவிலில் இருக்கும் அர்த்தநாரீஸ்வரர் சிற்பம்‘ ஆகும்.