ஸ்ரீ ஆண்டாளின் பாவை நோன்பு!

ஸ்ரீ ஆண்டாளின் பாவை நோன்பு!

தெய்வங்கள் மானிட வடிவங்களில் பூமியில் அவதாரம் மேற்கொண்டு சில நல்ல நல்லவர்களை வாழ வைத்தும் அதர்மவாதிகளை அழித்தும் அருள் பாலிக்கின்றனர்.

 
இந்த அடிப்படையில, ஒரு சமயம் திருமாலின் துணைவியான மகாலட்சுமி, பூலோகத்தில் பிறந்து மக்களை நல்வழிப்படுத்தவும், தங்களை வணங்கினால் இம்மை மறுமை பேற்றை அடையலாம் என்பது உணர்த்தவும் கூடியதான பிறப்பு ஒன்றினை தமக்கு அளிக்க வேண்டும் என்று திருமாலை வேண்டிக் கொண்டாள், திருமாலும் திருமகளின் வேண்டுகோளை ஏற்று, இம்மைக்கும் மறுமைக்கும் என்ன தேவையென்பதை முன்னரே பூமியில் உணர்த்தியிருக்கும் விஷ்ணு சித்தனாகிய பெரியாழ்வார் மகளாக அவதாரம் செய்ய அருள் புரிந்தார். அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய நந்தவனம் அமைத்து அதன் மூலம் கிடைக்கப் பெற்ற மலர்கள் அனைத்தையும் விஷ்ணு வழிபாட்டிற்கே செய்து வந்த விஷ்ணு சித்தரின் நந்தவனத்தில் பச்சிளம் குழந்தையாய் விடியற்காலையில் அழுதபடியே திருமகள் அவதரித்தாள்.
 
திருமகளையே மகளாக பெறும் பேற்றினை பெற்ற பெரியாழ்வார், பரந்தாமனை தரிசனம் செய்த நாள் எல்லாமே பட்டினி நாளாக கருதி கைங்கரியங்கள் செய்து வந்தார். இவர் திருமாலின் மீது அளப்பரிய பக்தி கொண்டு பகவத் பக்தியில் தம்மை மறந்து வாழ்ந்தவராவார். மலர் கொய்ய வந்த பெரியாழ்வார், தனக்கு திருமகளே குழந்தையாய் அவதரித்திருப்பதை அறியாமல், இறைவன் கொடுத்த குழந்தை இது என எண்ணி எடுத்து வந்து கோதை என பெயரிட்டு வளர்த்து வந்தார். அரங்கனையே ஆள பிறந்தவள் என்னவோ இவளை ஆண்டாள் என்றும் அழைத்தார்கள். தன் தந்தை தொடுத்து கொடுத்த மாலையை தான் முதலில் அணிந்து அழகு பார்த்த பின்பே இறைவனுக்குச் சூட்டியதால் “சூடிக் கொடுத்த சுடர்கொடி” என்னும் பெயரும் இவளுக்கு உண்டாயிற்று.
 
தன் தந்தை பெரியாழ்வார் பெருமாளின் 108 திவ்ய சேத்திரங்களின் சரித்திரங்களை எடுத்துரைத்த போது, ஆண்டாளின் மனம் திருவரங்கத்தில் உறையும் ஸ்ரீரெங்காநாதரின் மீது காதல் கொண்டது. இதை அறிந்த பெரியாழ்வார் மானிடராய் பிறந்தவர் இறைவனை எப்படி மணக்க முடியும் என்று கலங்கி நின்றார். ஆண்டாளோ எது பற்றியும் கவலை கொள்ளாது திருமணக் கனவை ஸ்ரீரெங்கநாதரோடு இணைத்து சேர்ந்த நிலையில் மகிழ்ந்து கொண்டிருந்தாள். ரெங்கன் மீது பக்தியில் உருகி போன ஆண்டாள் பாவை நோன்பு இருந்து திருப்பாவை பாசுரங்களையும் பாடி இறுதியில் தான் விரும்பியபடியே ரெங்க நாதருடன் இரண்டற கலந்தாள்.
 
பெண்கள் பாவை நோன்பு இருப்பதால் கிடைக்கும் பலன்களை இவ்வுலக பெண்டிற்யாவரும் அறிந்து கொள்வற்காகவே திரு பாவையில் பாசுரங்கள் பக்தியுடன் பாடி வைத்துச் சென்றுள்ளாள் ஸ்ரீ ஆண்டாள். 
 
அபிதா மணாளன்