காதல் - கனவுகளும் பலன்களும்

காதல் - கனவுகளும் பலன்களும்

உங்கள் உள்ளத்தில் காதல் வேட்கை எழுவது போல் கனவு கண்டால் சமூகத்தில் உங்களுடைய அந்தஸ்து உயரும். அதே சமயத்தில் உங்களுக்கு சில எதிரிகளும் ஏற்படுவார்கள். பொறாமை காரணமாக, உங்கள் மீது பழியான வதந்திகளையும் அவர்கள் கிளப்பி விடுவார்கள். அது பற்றி நீங்கள் ஆத்திரம் அடையக் கூடாது. பொறுமையாக இருந்தால், அந்தப் பழிச் சொற்கள் தாமாகவே மறைந்துவிடும். 
 
உங்கள் காதனோடு நீங்கள் உல்லாசமாக பொழுது போக்குவதுபோல் கனவு கண்டால் உங்கள் மனதிற்குள் நீங்கள் வளர்த்து வைத்துக் கொண்டிருக்கிற ஒரு முக்கியமான ஆசை நிறைவேறப் போகிறது. நீங்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய ஒரு திருமணச் செய்தி உங்களுக்குக் கிடைக்கப்போகிறது. 
 
உங்கள் காதலியோடு நீங்கள் உல்லாசப் பொழுது போக்குவது போல் கனவு கண்டால் உங்கள் திருமணத்திற்குச் சில தடங்கல்கள் ஏற்பட்டு பின்பு அவை நீங்கிவிடும். அல்லது ஒரு முக்கியமான காரியத்தில் நீங்கள் சிறிது ஏமாற்றத்துக்கு ஆளாக நேரலாம். என்றாலும் முடிவில் நீங்கள் எண்ணியபடியே அது நடைபெற்று விடும். 
 
நீங்கள் காதலில் தோல்வியுற்றது போல் கனவு கண்டால் சில மறைமுகமான எதிரிகள் உங்களுக்குத் தொல்லை கொடுத்து வருகிறார்கள். அவர்கள் யார் என்பது விரைவில் உங்களுக்கு விளங்கிவிடப் போகிறது. அத்துடன் உங்கள் தொல்லைகளும் தீர்த்துவிடப் போகின்றன. 
 
நீங்கள் உங்கள் மனைவியுடன் தேன்நிலவை அனுபவித்துக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால் உங்களுக்குப் பிரியமான ஒரு நண்பரோடு வீணாகச் சண்டை போட்டுக் கொள்ள போகிறீர்கள். அதைத் தவிர்க்க வேண்டுமானால் அவரிடம் குத்தலாகப் பேசுகிற உங்கள் பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். 
 
பல பெண்களுக்கு நடுவில் நீங்கள் ஒரு பேரழிகயாக விளங்குவது போல் கனவு கண்டால் உங்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். உங்கள் மனதுக்கு உகந்த ஒரு கணவனை அடைவீர்கள். அதே நேரத்தில் உங்களது காலத்தின் காரணமாக, நீங்கள் அவருடைய வெறுப்புக்கு ஆளாகிவிடக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. ஆகையால் பணிவோடு நடந்து கொள்ள பழகுங்கள். 
 
நீங்கள் ஒரு காமக்கிழத்தியைப் பெற்றிருப்பது போல் கனவு கண்டால் சில புதிய பொறுப்புகள் உங்கள் தலையில் சுமத்தப்பட இருக்கின்றன. அவை முதலில் உங்களுக்கு இனிமையாகவே இருக்கும். ஆனால், நான் ஆக, ஆக அவை உங்களால் தாங்க முடியாத பளுக்களாக மாறிவிடும். ஆகையால், அந்தப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளுவதற்கு முன், நன்கு யோசனை செய்து ஒரு முடிவுக்கு வாருங்கள். 
 
உங்கள் காதலி அல்லாத வேறு இளம் பெண்களுடன் நீங்கள் காதல் பேச்சுகளைப் பேசுவது போல் கனவு கண்டால் நீங்கள் பயன் உள்ள காரியங்களைக் கவனிக்காமல், பயன் அற்ற காரியங்களிலேயே ஆர்வம் காட்டி வருகிறீர்கள். இதனால் நீங்கள் பிறகு பல இழப்புகளுக்கு ஆளாக நேரிடலாம். ஆகையால், இப்போதே உடனடியாக உங்கள் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள்.
 
நீங்கள் ஓர் இளம் பெண்ணின் அந்தரங்க அறைக்குள் நுழைவது போல் கனவு கண்டால் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த எவருமே ஈடுபடாத ஒரு பதிய துறையில் நீங்கள் ஈடுபடப் போகிறீர்கள். அது கலைத்துறையாக இருக்கலாம். தொழில் துறையாகவும் இருக்கலாம். எந்த துறையாக இருந்தாலும், அதில் நீங்கள் வெற்றி காண்பீர்கள்.
 
தமிழ்வாணன்