அள்ளித் தரும் அட்சய திரிதி!

அள்ளித் தரும் அட்சய திரிதி!

எடுக்க எடுக்கக் குறையாத ஒன்றை அட்சயம் என்கிறோம். "அட்சயம்" என்றால் குறையாமல் வளர்ந்து கொண்டேயிருப்பது என்னும் அர்த்தத்தை தருவதாகும். அழிவின்றி வளர்வது, பூரணமானது, குறையாதது, அழியாத பலன்களை அள்ளித் தருவது போன்ற பொருள்களும் இந்த வார்த்தைக்கு இருக்கின்றன.

 
சித்திரை மாதம் அமாவாசையை அடுத்து வருகின்ற மூன்றாம் பிறை நாளான திரிதியை தினத்தில் தான் கிருதயுகத்தை பிரம்ம தேவன் படைத்ததாக பவிஷ்ய புராணம் தெரிவிக்கின்றது. ஒரு யுகம் முடிந்து மறுயுகம் தொடங்குகின்ற போது அந்த நாளை "யுகாதி” என்பர். அப்படி பார்க்கும் போது அட்சய திரிதியை தினமும் ஒரு காதி தான்.
 
மாலோடு திரு சேர்ந்து மகாவிஷ்ணு திருமாலான தினம் என்பதால், திரிதியை திதி பொதுவாகவே மிகுந்த லட்சுமி கடாட்சம் நிறைந்ததாக கருதப்படுகின்றது. எனவே, தான் அன்று பொன்னும் பொருளும் சேர்த்தால் எந்தவித குறைபாடும் இன்றி அந்த ஆண்டு முழுவதும் இல்லத்தில் எல்லா வளமும் கொழிக்கும் என்பது ஐதீகம். 
 
சித்திரை மாதம் சுக்லபட்ச திரிதியையை நாம் அட்சய திரிதியை நாளாக கொண்டாடுகின்றோம். அட்சய திரிதியை அன்று நம் இல்லங்களில் செய்கின்ற பூஜைகளை தவிர, அன்றைய தினத்தில் நாம் செய்யக்கூடிய புண்ணிய காரியங்கள் யாவும் நம்முடைய எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கத்தக்க புண்ணிய பலன்களை அளிக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
 
அத்துடன், அன்றைய தினம் பித்ருக்களுக்கான தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசியை பெற்று வறுமைகள் ஏதுமின்றி வளமான வாழ்வினை பெற்றிடலாம். இந்த பொன்னான தினத்தில் பொன்னும் மணியும் மற்றும் பலவும் வாங்கி குவிப்பதே குறி என்று இராமல், நம்மிடம் இருப்பதில் கொஞ்சத்தை எளியோருக்கு தானமாய் அளித்தால் லட்சுமி நாராயணனின் ஆசியையும் அவரது பரிபூரண அருளையும் அட்சயமாய் பெறலாம் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.
 
திருமகளின் எட்டு அவதாரங்களும் அஷ்டலட்சுமி எனப் போற்றப்படுகின்றது. இவற்றில் ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் தானிய லட்சுமி தோன்றியது இந்த அட்சய திருநாளில் தான் எனப் புராணங்கள் தெரிவிக்கின்றன.
 
பரந்தமானின் தசாவதாரங்களில் ஒன்றான பரசுராம அவதாரம் நிகழ்ந்ததும் இத்தினத்தில் தான். அமுதம் கடைந்தெடுக்கும் நோக்கத்தோடு பாற்கடல் கடையப்பட்ட போது, "அகலுமில்லேன்” என கூறி பாற்கடலில் அவதரித்த மலைமகள் திருமாலின் மார்பில் நிலையான இடம் பிடித்ததும் இந்த அட்சய திரிதியை நாளில் தான். பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின் போது, கடும் தவம் செய்த தர்மரின் முன்னால் காட்சி தந்த சூரிய பகவான் "அன்னவளம் குன்றாத அட்சய பாத்திரத்தை” தருமருக்கு அளித்ததும் இதே நாளில் தான்.
 
இருந்த இடத்திலிருந்தே சொல்லப்பட்ட கண்ணனின் அட்சயம் என்ற ஒரே சொல்லால், ஏழ்மைக்கு எடுத்துக்காட்டாய் இருந்து வந்த குசேலருக்கு குபேர வாழ்வு கிட்டியதும் இந்த திரிதியையில் தான்.
 
இத்தகைய பெருமைகள் மிக்க அட்சய திரிதியை தினத்தன்று அதிகாலையிலே எழுந்து நீராடி விட்டு பூஜை அறையில் கோலமிட்டு, மகாலட்சுமியும், மகா விஷ்ணுவும் சேர்ந்திருக்கும் சிற்பத்தையோ படத்தையோ வைத்து, விளக்கேற்றி பக்தியோடு பூஜை செய்து தூப தீபம் காட்டி காய்ச்சிய பால், பழம் நிவேதனம் செய்து வழிபட்டால் வற்றாத செல்வங்கள் என்றென்றும் நிலைத்திடும் என்பது திண்ணம்.
 
- S.ஆகாஷ்