விளையாட்டு - கனவுகளும் பலன்களும்

விளையாட்டு - கனவுகளும் பலன்களும்

நீங்கள் கால்பந்து, பூப்பந்து போன்ற பந்தாட்டங்களைக் கனவில் கண்டால், வெற்றி அடைந்தாலும் அதற்கான மகிழ்ச்சி அடைய முடியாமல் தோல்வி அடைந்தாலும் அதற்காக வருத்தப்பட முடியாமல், எது வந்தாலும் சரி என்ற மனப்பான்மையுடன் உங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டு போக வேண்டிய கட்டம் ஒன்று உங்களுக்கு விரைவில் வரப்போகிறது. அந்தக் கட்டத்தைத் தாண்டிவிட்டால் எதிர்காலம் உங்களுக்கு மிகவும் இனியதாக இருக்கும்.
 
மல்யுத்தம், குத்துச்சண்டை போன்ற பயங்கரமான விளையாட்டுக்களைக் கனவில் கண்டால் விளையாட்டுப் போல் தொடங்கப்படுகிற ஒரு விவாதம், பெரிய வினையாக முற்றவிடக் கூடிய வாய்ப்பு ஒன்று உங்கள் வாழ்க்கையில் ஏற்படப் போகிறது. அப்படி ஏற்பட்டால், அதனால் உங்களுக்கு பெருத்த நஷ்டங்களே உண்டாகும். ஆகையால் இன்னும் சிறிதுகாலம் வரையில், உற்ற நண்பர்களுடனுங்கூட நீங்கள் விளையாட்டான தகராறுகளை வைத்துக் கொள்ளாதீர்கள்.
 
சீட்டு. சதுரங்கம். சொக்கட்டான் போன்ற தந்திர விளையாட்டக்களைக் கனவில் கண்டால் உங்களுடைய வாழ்க்கையில் இன்னும் சிறிது காலத்துக்கு ஏற்றமும் இறக்கமும் மாறிமாறி வந்து கொண்டிருக்கும். ஆகையால் ஏற்றம் வரும்போது எக்களிப்பு அடையாதீர்கள். இறக்கம் வரும்போத சோர்ந்து துவளாதீர்கள். எக்காரணத்தை முன்னிட்டும் பிறரை ஏமாற்றுவதற்கு எண்ணாதீர்கள். சிறித காலத்துக்கு அப்பால். நீங்கள் நிலையான நல்வாழ்வைப் பெறுவீர்கள்.
 
நீங்கள் குதிரைப் பந்தயத்தைக் கனவில் கண்டால் உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய பிரச்னை தோன்றியிருக்கிறது. அதைத் தீர்த்துக் கொள்வதற்கு ஒரு குறுக்கு வழியைக் கையாண்ட பார்க்க நினைக்கிறீர்கள். அப்படிக் கையாண்டால், அது உங்களை மேலும் பல தீராத பிரச்னைகளுக்கு ஆளாக்கிவிடும். ஆகையால், வருவது வரட்டும் என்ற துணிவோடு. நேர்மையை விட்டு விலகாமல் நில்லுங்கள். உங்களுடைய பிரச்னை தானாகவே தீர்ந்து போய்விடும்.
 
சேவல் சண்டை, ஆட்டுக்கடா சண்டை போன்ற கருணையற்ற விளையாட்டுகளைக் கனவில் கண்டால் நீங்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு வரப்போகிறது அல்லது உங்கள் சொந்த ஊரை விட்டுப் போய், வெளியூர்களில் சிறிது காலம் நீங்கள் தங்கியிருக்க நேரலாம். உள்ளூரில் இருந்தால், உங்கள் குடும்பத்தில் பெரிய சச்சரவு ஏற்படும். அல்லது சமூகத்தில் உங்களுக்கு எதிர்ப்பு ஏற்படும். ஆகையால் வெளியூர் போய் இருந்து விட்டு வருவதே நல்லது.
 
சர்க்கஸ். கழைக்கூத்து போன்ற ஆபத்தான விளையாட்டைக் கனவில் கண்டால் வெளிப்பார்வைக்கு மிகவும் மகிழ்ச்சியோடு காணப்பட்டாலும், உள்ளூர கலக்கம் அடைந்திருக்கிறீர்கள். அந்தக் கலக்கத்தைப் போக்கிக் கொள்வதற்கு ஒரு துணிச்சலான காரியத்தைச் செய்து விடலாமா என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் வேண்டாம். அதனால் ஆபத்துகள் ஏற்படக்கூடும். பேசாமல் சிலநாள்களைச் சும்மா தள்ளிக்கொண்டிருங்கள். உங்கள் கலக்கம் தீருவதற்கான வழி தானாகவே பிறக்கும்.
 
தமிழ்வாணன்