இங்கிலாந்தின் போன்டியாக்கில் அன்னை பராசக்தி ஆலயம்!

இங்கிலாந்தின் போன்டியாக்கில் அன்னை பராசக்தி ஆலயம்!

“ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்னும் முதுமொழிக்கிணங்க, வெளிநாட்டில் வாழும் இந்து பெருமக்கள், தாம் சார்ந்துள்ள தொழில் அலுவல் எதுவாக இருப்பினும் வழிபாடு நடத்த ஆலயம் ஒன்று இல்லாமல் இருப்பதில்லை. எப்பாடு பட்டாகிலும் நல்லதொரு ஆலயத்தை உருவாக்கி அப்பகுதியில் வாழுகின்ற இந்து சமயிகளை ஒன்றிணைந்து கல்வி, கலாச்சாரம், பண்பாட்டு நிகழ்வுகள், வழிபாடுகள் முதலியவற்றிற்கான தேவைகளை எப்போதும் பூர்த்தி செய்து கொள்கின்றார்கள். இதற்காக பிரத்யேகமான அறக்கட்டளைகளை நிறுவி நிதி பெருக்கத்தை ஏற்படுத்தி தேவைப்படும் இடத்தை கையகப்படுத்தி மிகக் குறைந்த கால அளவில் அற்புதமான ஆலயங்களை எழுப்பு கின்றார்கள். இப்படியானதொரு ஆலயம் தான் இங்கிலாந்தின் போன்டியாக்கில் அதி உன்னதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பராசக்தி கருமாரியம்மன் ஆலயம் என்பதாகும். 

 
இந்த ஆலயமானது 1999-ம் ஆண்டு கட்டப்பட்டது. அதே ஆண்டில் ஒக்டோபர் மாதத்தில் இந்த ஆலயத்தின் முதல் கும்பாபிசேகம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. இவ்வாலயத்தின் விக்கிரக பிரதிஷ்டைகள் பல்வேறு காலக்கட்டங்களில் படிப்படியாக செய்து முடிக்கப்பட்டன. அனைத்து விக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு மற்றுமொரு கும்பாபிசேகம் செய்யப்பட்ட நாள் முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களுடைய அன்பையும் பக்தியையும் வெளிப்படுத்தி அன்னை பராசக்தியின் திருவடிகளில் சமர்ப்பிப்பதற்காக வருடம் முழுவதும் வருகை தந்து கொண்டேயிருக்கிறார்கள். 
 
ஆலயத்தின் மூலவராய் வீற்றிருக்கும் அன்னை பராசக்தி அற்புதமான அதிசயங்கள் பலவற்றை பக்தர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் நிகழ்த்தி காட்டியிருக்கின்றாள். இக்காரணம் கொண்டே, பக்தர்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இந்த ஆலயத்திற்கு ஒவ்வொரு வாரமும் வந்து குழுமி அபிசேகம் மற்றும் ஆராதனைகளில் பங்குபற்றுகின்றார்கள். புதிய வீடு வாங்குதல், புதிய கார் வாங்குதல், வீட்டின் கல்யாண வைபவம், காது குத்து வைபவம், புதுமனை புகுவிழா ஆகிய எல்லாவிதமான முக்கிய நிகழ்வுகளையும் பக்தர்கள் அன்னை பராசக்தியின் ஆசியும் அருளையும் பெற்ற பின்பே செய்கின்றார்கள். ஆலயத்தின் பிரதான தெய்வமாக அன்னை பராசக்தி கருமாரி இருக்கின்றாள். அன்னையை இங்கு உள்ளவர்கள் “அழியா அன்பு டைய அன்னை” என பக்தியோடு அழைக்கின்றார்கள். ஆலயத்தின் பிரதான நோக்கமே மனித குலத்திற்கு அன்னையின் தெய்வீக அருள் கிடைத்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்பது தான். இவ்வாலயத்தில் அருள் பாலிக்கும் அன்னை பராசக்தியம்மன் உலக உயிர்கள் எல்லாவற்றிற்கும் தாயாகவும் அவற்றுடன் எல்லாம் நெருக்கமாகவும் ஆசி வழங்குகின்றாள். அனைத்து இதர தெய்வங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு பக்தர்களுக்கு தெய்வீக அதிர்வுகளை அன்புடன் அளித்து வருகின்றாள்.
 
அன்னை பராசக்தி ஆலயம் இங்கிலாந்தின் போன்டியாக்கில் கென்னட் சாலையின் ஒரு பகுதியில் சரசோட்டா அவென்யூவில் பதினாறு ஏக்கர் காணி பரப்பளவில் மிகப் பரந்த வெளியில் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் தெற்கு பகுதியில் அழகானதொரு சிற்றோடையும் ஓடிக் கொண்டிருக்கிறது. அடர்ந்த பசுமையான வனப்பகுதியில் ஆலயம் அமைந்துள்ளதால், இப்பகுதியில் மான்களும் பிற வன உயிரினங்களும் அதிகளவில் வாழ்ந்து  வருகின்றன. 
 
அண்மையில் ஆலயத்தில் புனரமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு, முழுமையாக ஆலய வளாகம் விஸ்தரிக்கப்பட்டது. வழிபாட்டு இடமாக ஆறாயிரம் சதுரடியும் மற்றும் நான்காயிரம் சதுரடி பொதுவான நிகழ்ச்சி கூடம், ஆலய அலுவலகம், சமையற்கூடம், யாகசாலை ஆகியவற்றிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின் எல்லா தெய்வங்களுக்கான நித்திய சடங்குகளும், அபிசேகங்களும், ஆராதனைகளும், ஹோமங்களும் அனுபவமிக்க நான்கு ஆச்சாரியர்களை கொண்டு நடத்தப்படுகின்றன. இதைத் தவிர ஆலயத்திற்கு வெளியே பக்தர்களின் இல்லங்களிலும், பிற வைபவஙகளிலும் இந்த ஆச்சாரியர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி கொடுக்கின்றார்கள். ஆலய பூஜைகள் யாவும் ஆகம விதிமுறைகளின்படி குறைவின்றி செய்து முடிக்கப்படுகின்றன. 
 
நடராஜர், சுவாமி அய்யப்பன், அஷ்டலட்சுமி, கணபதி, முருகன், கிருஷ்ணன், கொடுங்காலூர் பகவதி, அனுமன், சோட்டானிகரை பகவதி, ஜெகன்னாதர், காலபைரவர், நாகதேவதை, சத்தியநாராயணர், வராகி, வெங்கடேஸ்வரர், குபேரலிங்கம், லட்சுமி நரசிம்மர், ராதா கிருஷ்ணர் மற்றும் நவகிரகங்கள் ஆகிய பரிவார தெய்வங்களும் இவ்வாலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
 
இந்த ஆலயம் இங்கிலாந்தின் இப்பகுதியில் வாழுகின்ற இந்து மக்களுக்கு வழிபாட்டு தேவைகள், வைதீக வைபவங்கள், ஆன்மீகச் சொற்பொழிவுகள், சங்கீத உபன்யாசம், இந்து மத பண்டிகை கொண்டாட்டங்கள் முதலியவை தொடர்பான எல்லா சேவைகளையும் வழங்குகின்ற ஒரு அற்புதமான பண்பாட்டு மையமாகவும் விளங்குகின்றது. 
 
அபிதா மணாளன்