கலிபோர்னியாவின் ஸ்ரீ மகா காளேஸ்வர் ஆலயம்

கலிபோர்னியாவின் ஸ்ரீ மகா காளேஸ்வர் ஆலயம்

வெளிநாட்டில் வாழுகின்ற இந்து மதத்தை தழுவியுள்ளவர்களின் ஆன்மீக தேவைகளை பூர்த்தி செய்வதில் ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு இடங்களில் ஆலயங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்னும் பழைய தமிழ் சொல்லடைக்கிணங்க, வெளிநாடு வாழ் இந்துக்கள் எங்ஙனமாயினும் ஒன்றிணைந்து பெருமுயற்சிகள் மேற்கொண்டு அவர்கள் வாழ்கின்ற பகுதிகளில் இந்து ஆலயங்களை எழுப்பி வழிபாட்டுத் தலங்களுக்கு வழி வகுத்து கொள்கின்றார்கள். வெளிநாட்டில் அமையப் பெறும் இந்த வழிபாட்டு தலங்கள் பக்தியை வெளிப்படுத்தும் இடமாக மட்டும் அமையாமல் இந்துக்கள் ஒன்றுபட்டு வழிபடவும், பக்தி சொற்பொழிவுகள் கேட்டிடவும், தெய்வீக கலை நிகழ்ச்சிகள் மற்றும் சங்கீத கச்சேரிகள் ஏற்பாடு செய்திடவும் பெரிதும் உதவுகின்றன. 

 
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் அமைந்துள்ள ஸ்ரீ மகாகாளேஸ்வரர் ஆலயம் அமெரிக்காவின் முதல் ஜோதிர்லிங்க சிவாலயம் என்னும் பெருமையை பெற்றதாகும். இந்த ஆலயத்தின் சகஸ்ரலிங்கம் இரண்டு டன் எடையுள்ள கருங்கல்லால் அமைக்கப்பட்டு ஆகஸ்ட் 28, 2010-ம் ஆண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த லிங்கத்தை இவ்வாலயத்தில் நிறுவுவதற்கு சென்னை காளிகாம்பாள் ஆலயத்தின் தலைமை அர்ச்சகர் சுவாமி சதாசிவம் அவர்கள் மிகவும் உறுதுணையாக இருந்துள்ளார்கள்.  
 
1989-ம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு இந்து சிவாலயத்தை முழுமையாக எழுப்பி முடித்திட வேண்டும் என்ற எண்ணம் சுவாமி சதாசிவம் அவர்களுக்கு உண்டானது. இந்த எண்ணத்தை பூர்த்தி செய்திட, 2010-ம் ஆண்டின் கோடையில் சதாசிவ சுவாமிகள் 1008 சண்டி ஹோமம் செய்ய சங்கல்பம் எடுத்துக் கொண்டார். அதைப் போலவே மூன்று மாதங்களில் 1008 சண்டி ஹோமங்களை தினமும் செய்வதன் மூலமாக பூர்த்தி செய்தார். 2010-ம் ஆண்டில் 1008 சண்டி ஹோமத்தை தொடர்ந்து  லாஹாண்டா மலையில் அபிசேகம், திருவிழாக்கள் மற்றும் இதர நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 
 
கூடுதல் பக்தர்கள் எல்லா நிகழ்வுகளிலும் வழிபாடுகளிலும் கலந்து கொள்ளவேண்டும் என்கின்ற பரந்த நோக்கத்தில் மகாகாளேஸ்வர் சகஸ்ர ஜோதிர்லிங்கம் 2012-ம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் சாண்டா கிளாரா என்னும் இடத்திற்கு மாற்றப்பட்டது. சாண்டா கிளாராவில் ஆலயத்திற்கான புதிய இடம் ஸ்ரீ சாம்பசதாசிவ வித்யா பீடம் என்னும் லாப நோக்கற்ற மத மற்றும் கல்வி அறக்கட்டளை மூலமாக வழங்கப்பட்டதாகும். ஸ்ரீ மகாகாளேஸ்வரரின் பூர்வீக ஆலயமாக இந்தியாவின் மத்தியபிரதேசம் உஜ்ஜையினில் உள்ள ஆலயமே குறிப்பிடப்படுகின்றது. இதில் உள்ள சிவனை நேரத்தின் இறைவன் அல்லது கால பைரவர் என்று அழைக்கின்றார்கள். 
 
சாண்டா கிளாரா ஆலயத்தில் மூலவரான ஸ்ரீ மகாகாளேஸ்வரர் இந்து மத சம்பிரதாயத்தின்படி தெற்கு நோக்கி வீற்றிருக்கின்றார். இந்து மத கலாச்சாரத்தின்படி தெற்கு திசையானது எம திசை என வழங்கப்படுகின்றது. 
 
காலபைரவர் எதற்கும் இணங்காமல் அவருடைய முகத்தை துன்பத்தின் பக்கமோ, நோயின் பக்கமோ அல்லது இறப்பின் பக்கமோ திருப்புவதில்லை. மற்றும் அவர் மிக கடினமான சூழ்நிலையையும் எதிர் நோக்கும் வண்ணமே அமர்ந்திருக்கின்றார். இவரை நோக்கி பிரார்த்தித்துக் கொண்டால் மன மற்றும் உடலளவிலான சிரமங்களும் கஷ்டங்களும் பெருமளவில் குறையும் என்பது ஐதீகம். இவர் அறிவு, அமைதி மற்றும் உடல்நலத்தை அருளுகின்றார். 
 
மகாகாளேஸ்வரர் ஆலயத்தில், இதர மதத்தை சார்ந்தவர்கள், இதர இனத்தை சார்ந்தவர்கள், ஆண் பெண் ஆகிய அனைவருக்கும் நிபந்தனையற்ற நுழைவு அனுமதிக்கப்படுகின்றது. 
 
இந்த ஆலயம் சேவை, அறிவை மேம்படுத்துதல் மற்றும் சமுதாய முன்னேற்றத்தை குறிக்கோளாக கொண்டு இயங்குகின்றது. இந்த ஆலயத்தில் வழமையாக நடைபெறுகின்ற அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் தவிர, பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சில விசேட தினங்களில் அவர்களின் விருப்பப்படி பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
 
இந்த ஆலயத்தை நிர்ணயிக்கின்ற ஸ்ரீ சாம்ப சதாசிவ வித்யா பீடம் பக்தர்களில் பல்வேறு ஆன்மீக தேவைகளை பூர்த்தி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகின்றது. 
 
அமெரிக்காவில் கலிபோர்னியா மாவட்டத்தின் சாண்டா கிளாரா பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகாகாளேஸ்வரர் ஆலயத்தில் ஒரே லிங்கத்தில் 1116 சிறிய லிங்கங்கள் கொண்ட சகஸ்ர லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது தனி சிறப்பாகும். 
 
இவ்வாலயத்தில் இந்துக்களின் பாரம்பரிய முறையிலான ஆடைகள் மட்டுமே அணிந்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. பக்தர்களுக்கு நவநாகரிக ஆடைகளில் ஆலயம் நுழைய அனுமதிக்கப்படவில்லை. 
 
ஸ்ரீ மகாகாளேஸ்வரர் ஆலயம் திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் பகல் 01.00 முதல் இரவு 08.30 மணி வரையிலும் செவ்வாய் புதன் மற்றும் வியாழன் கிழமைகளிலும் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை 11.00 மணி முதல் 08.00 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்கு திறந்து வைக்கப்படுகிறது.
 
அபிதா மணாளன்