நல்லூர் கந்தசாமி ஆலயம்

நல்லூர் கந்தசாமி ஆலயம்

இலங்கையில் மிகவும் புகழ்பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றாய் முக்கியத்துவம் பெற்று விளங்குவது நல்லூர் கந்தசாமி ஆலயம். இவ்வாலயம் இலங்கையின் வடப்பகுதியிலுள்ள யாழ்பாணம் குடா நாட்டில், யாழ்பாண நகரத்திலிருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள நல்லூர் என்னும் அழகிய ஊரில் அமையப் பெற்றுள்ளது. நல்லூர் நகரம் பன்னிரண்டாம் நூற்றாண்டு தொடக்கம் முதல் 17-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை அப்போதிருந்த யாழ்பாணம் ராஜ்யத்தின் தலைநகரமாக விளங்கிற்று. இந்த ஆலயத்தின் தோற்றம் பற்றிய சரியான தகவல்கள் இல்லையென்றாலும், யாழ்பாணம் அரசு காலத்தில் இது மிக முக்கியமானதொரு ஆலயமாக இருந்துள்ளது என்பது பல வரலாற்று செய்திகளிலிருந்து அறியப்படுகிறது. 
 
யாழ்ப்பாண வைபவ மாலை மற்றும் கைலாய மாலை ஆகிய நூல்களில் இந்த ஆலயம் எழுப்பப்பட்டது முதலான செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண இராஜ்யத்தை ஆண்டு வந்த கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சரான புவனேவாகு என்பவரால் இந்த ஆலயம் கட்டுவிக்கப்பட்டது என்ற செய்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு சிறிதாக இருந்த இந்த ஆலயத்தை புவனேவாகு புனரமைத்து தனது ஆட்சி காலத்தில் பெரிதாக கட்டியுள்ளார். யாழ்ப்பாண அரசின் இறுதி காலத்திலும் நல்லூர் கந்தசாமி ஆலயமே மிகப் பெரியதாக இருந்துள்ளது என்னும் தகவல் போர்த்துக்கீசருடைய குறிப்புகளிலிருந்தும் காணப்படுகின்றது. பின் வந்த காலங்களில் யாழ்பாணத்தைக் கைப்பற்றிய தளபதி பிலிப்பே டி ஒலிவேரா, 1620-ம் ஆண்டில் அரசின் தலைநகரத்தை யாழ்பாணத்துக்கு மாற்றியபோது நல்லூர் கந்தசாமிகோவிலை இடித்து தரை மட்டமாக்க உத்தரவிட்டான். அந்த இடத்தில் கத்தோலிக்க தேவாலாயம் ஒன்றை தளபதி பிலிப்பே டி ஒலிவேரா கட்டியதாக வரலாற்று செய்திகள் அறிவிக்கின்றன. ஒல்லாந்தூர் ஆட்சி காலத்தில், 1798-ம் ஆண்டில் இந்து ஆலய அமைப்புகள் தொடர்பான ஆட்சியாளர்களின் இறுக்கமான சூழ்நிலை சற்றே தளர்ந்தது. அப்போது நல்லூர் கந்தசாமி ஆலயம் மீண்டும் கிறித்தவ தேவலாயத்திற்கு அருகாமையிலேயே எழுப்பப்பட்டது. மடலாயம் போல் காட்சி அளித்துக் கொண்டிருந்த ஆலயம் ஆகம சிற்ப சாஸ்திர விதிமுறைகளுக்கு உட்பட்டும் சிறப்பாக உருவெடுத்தற்கு ஆறுமுக நாவலரே முன்னின்று வித்திட்டார். 
 
இந்த ஆலயம் கிழக்கிலும் தெற்கிலும் வாசல்களை கொண்டுள்ளது. இந்த வாசல்களின் மேல் பெரிய ராஜகோபுரங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. ஆலயத்தின் கர்ப்பக்கிரகத்தில் சிலைக்கு பதிலாக வேல் அமைக்கப்பட்டுள்ளது. இதனைச் சுற்றிலும் விநாயகர் முதலான பரிவார தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன. நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் நித்திய பூஜைகள் ஆகம விதிகளின்படி காலம் தவறாமல் நடைப்பெற்று வருகின்றன. ஆவணி அமாவாசை தீர்த்தமாக கொண்டு 25 நாட்களுக்கு ஆலயத்தில் மகோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. உற்சவ காலங்களில் காவடி எடுத்தல், தீச்சட்டி எடுத்தல், அங்கபிரதட்சணம் செய்தல், மடிப்பிச்சை எடுத்தல், மொட்டை அடித்தல், பட்டு சாற்றுதல், தேவாரம் ஓதுதல், வடம் பிடித்தல் ஆகியவை நேர்த்திக் கடன்களாக பக்தர்களால் நிறைவேறப்படுகின்றன. மேலும் ஆன்மிக மேம்பாட்டிற்காக உற்சவ காலத்தில் சமய பிரசங்கம் செய்தல், திருமுறைகள் ஓதுதல், ஓதுவார்களை அழைப்பித்து ஓதுவித்தல் முதலான சமய நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.