இஷ்ட சித்தி அருளும் விநாயக சதுர்த்தி விரதம்!

இஷ்ட சித்தி அருளும் விநாயக சதுர்த்தி விரதம்!

புனிதம் பொருந்திய விநாயக சதுர்த்தி தினமானது உலகின் காரணராகிய சிவபிரானே பூஜித்ததும் மகிமையும் கீர்த்தியும் வாய்ந்ததுமான நாளாகும். யானை முகமும் மூஞ்சுரு வாகனமும் விநாயகரின் விவேக புத்திகளின் அடையாளங்களென மதிக்கப்படுகின்றன. அவரது ஞானம், விவேகம், திறன், சுறுசுறுப்பு என்பனவற்றைக் கண்டே வியாச முனிவர் மகாபாரதத்தைத தங்கு தடையின்றி எழுதுவதற்கு விநாயகப் பெருமானைப் பணித்தார். பண்டைக் காலத்துப் புலவர்கள், நூலாசிரியர்கள் விநாயகரை வணங்கியே தம் நூல்களைப் பாடினர். 
 
பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர், ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர், கந்தபூர்வசர், மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன், கயமுகன், ஓங்காரன், பிரணவன் போன்ற இன்னும் பல நாமங்கள் விநாயகருக்கு வழக்கிலுள்ளன. இவற்றுள் 'விநாயகர்' என்பது 'மேலான தலைவர்' என அர்த்தப்படும். மேலான: நாயகர் தலைவர் தனக்கு மேலாக ஒருவர் இல்லாதவர் எனப் பொருள்படும். அதுபோலவே 'விக்னேஸ்வரர்' என்றால் 'இடையூறுகளை நீக்குபவர்' என்றும், 'ஐங்கரன்' என்றால் (தும்பிக்கையுடன் சேர்த்து) ஐந்து கரங்களை உடையவரெனவும்' அர்த்தப்படும். 'கணபதி' என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும். இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்தப் பெயர்களிலேயே பொதிந்துள்ளன.
 
இந்து மக்கள் அனுஷ்டிக்கின்ற விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி அனுட்டிக்கப்படுகின்றது. அன்றைய தினம் உலகெங்கணுமுள்ள இந்துக்கள் பயபக்தியோடு விநாயக வழிபாடியற்றி, உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர். நாட்டுக்கு நாடு அந்தக் கொண்டாட்டங்கள் வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்படுவதைக் காணலாம். 
 
ஆவ‌ணி மா‌த‌ம் சு‌க்ல ப‌ட்ச சது‌‌ர்‌த்‌தி ‌தின‌த்‌தி‌ல் அதி காலை‌யி‌ல் எழு‌ந்‌து மூ‌‌ஷிக வாகனனை முழு மனதோடு ‌நினை‌த்து ‌‌நீராட வே‌ண்டு‌ம்‌. பூஜை அறை‌யி‌ல் சு‌த்தமான மன‌ப்பலகை வை‌த்து அத‌ன் ‌‌‌மீது கோல‌ம் போட வே‌ண்டு‌ம். அத‌ன் மே‌ல் தலைவாழை இலை ஒன்லறை வட‌க்கு பா‌‌‌ர்‌த்து வை‌த்து அத‌ன் மேலே ‌‌ப‌ச்ச‌ ரி‌சியை பர‌ப்‌பி பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
 
சிரசிலே குட்டுதல், தோப்புக்கரணம் போடுதல் என்பன விசேஷமாக விநாயகரை வசீகரிக்கும், வணங்கும் முறைகளாகும். தேகாரோக்கிய முறையில் நல்ல சக்தியும் உண்டாகின்றது. தேகாப்பியாசத்தைக்கூட நமது முன்னோர்கள் தெய்வீகமாக்கி இருக்கின்றனரென்பது இதனால் அறியலாம். திருமால் கூட இவ்விரதத்தை அனுஷ்டித்துக் குருட்டுப் பாம்பாகும்படி உமையம்மையாரிடம் பெற்ற சாபம் நீங்கப் பெற்றார். இவ்விரதத்தை முறைப்படி அனுஷ்டிப்போர் துன்பம், நோய், வறுமை முதலியன நீங்கி இன்புறுவர். இட்ட சித்திகள் யாவும் பெற்று மகிழ்வர். இவ்விரத மகிமையைச் சொன்னால் கர்ப்பவதிகள் வேதனை நீங்கிச் சுகப் பிரசவம் பெறுவார்கள் எனவும் யாத்திரை நாட்களில் கூறினால் எவ்வகை இடர்களும் நேராது என்பது ஐதீகம்! இத்தகைய மகிமையும், கீர்த்தியும், புனிதம் பொருந்திய விநாயக சதுர்த்தி விரதத்தை பக்தியும் கடைப்பிடித்து சகல சௌபாக்கியங்களையும் அமைந்திடுவோமாக!
 
- நவநீதம்