திருப்பதி பிரம்மோற்சவம்!

திருப்பதி பிரம்மோற்சவம்!

இந்தியாவில் உள்ள மிக முக்கிய வைணவத்திருத்தலங்களில் திருப்பதியும் ஒன்றாகும். இத்திருத்தலம் பெருமாளுக்கான நூற்றி எட்டு திவ்யதேசங்களுள், திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் வைத்துப் போற்றப்படுகின்றது.

 
இந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தென்கிழக்குப் பகதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி அமைந்துள்ளது. இப்புண்ணியத் திருத்தலம் திருப்பதி மலையில் அமைந்துள்ள ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளின் திவ்ய தரிசனத்திற்காக பக்தர்கள் உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கில் வருடம் முழுவதும் வந்து கொண்டே இருக்கின்றார்கள். ஏழு சிகரங்களைக் கொண்ட மலைகளில் திருமலை உள்ளது. எனவேதான், திருமலை, ஏழுமலை என்று தமிழிலும் ஏழு கொண்டலு என்று தெலுங்கிலும் அழைக்கப்படுகின்றது. திருப்பதி என்ற சொல் திரு எனவும் பதி எனவும் பிரிக்கப்படுகின்றது. வடமொழிச் சொல்லான பதி என்பதற்கு கணவன் அல்லது தலைவன் எனப் பொருள்படுகின்றது. தமிழ் சொல்லான திரு என்பதற்கு புண்ணியம், தெய்வத்தன்மை, மேன்மை மிக்க என்றெல்லாம் அர்த்தமாகின்றது. திருப்படி என்பதே பிற்காலத்தில் மருவி திருப்பதி ஆகியதாகவும் சொல்லப்படுகின்றது.
 
திருப்பதியில் உள்ள ஏழு சிகரங்களும் ஆதிசேஷனின் ஏழு தலைகளைக் குறிப்பதால் இந்த மலைக்கு கோசாலம் என்ற பெயரும் உள்ளது. சேஷாத்திரி நீலாத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்திரி, வரிசபத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி என்பவையே அந்த ஏழு மலைகள். உலகின் பழைமையும், பெருமையும் வாய்ந்த பாறை மலைகளில் இரண்டாம் இடத்தைப் பிடிப்பவை இந்த திருமலை மலைகள் தான்.
 
பழைமை மிக்க சங்கத்தமிழ் இலக்கியங்களான இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்திலும் சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலையிலும் திருப்பதியின் பழைமைப் பெயரான திருவேங்கடத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. திருமலையின் இந்த ஏழு மலைகளும் பண்டைய தமிழகத்தின் வட புறத்து எல்லையாக சிலப்பதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.
 
ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளின் ஆலயம் எந்த ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது என்பது உறுதியாகத் தெரியவில்லை. இருப்பினும், பழைமையும் புராணப் பெருமைகளும் கொண்ட இந்த ஆலயம் பல்லவ, சோழ, விஜயநகரப் பேரசுகளால் பல ஆண்டுகள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
 
விஜயநகரப் பேரரசின் மிக முக்கிய அரசனான ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், இந்த ஆலயத்திற்காக தங்கத்தையும், மற்ற விலை உயர்ந்த ஆபரணங்களையும் நன்கொடையாகக் கொடுத்துள்ளார். இந்தக் கோயிலுக்கு அருகாமையில் இதர கோயில்களையும் நிறையக் கட்டியுள்ளார். திருப்பதியிலிருந்து சில கிலோமீற்றர்கள் தொலைவில் தென்மேற்குத் திசையில் அமைந்திருக்கும் “சந்திரகிரி” என்னும் கிராமம் விஜயநகர சக்கரவர்த்தியின் இரண்டாம் தலைநகரமாக விளங்கியது. வைணவம் தளைத்திருந்த கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வைணவப் புனித் திருத்லமாகிய திருப்பதி, “கலியுக வைகுண்டம்” என ஆழ்வார்களால் போற்றப்பட்டது.
 
புரட்டாசி திருவோணம், திருவேங்கடநாதனின் பிறந்த நாளாகத் தொன்றுதொட்டு அனுசரிக்கப்பட்டு வருகிறது. திருவோண தினத்திற்கு முன்பாக வருகின்ற ஒன்பது நாட்கள் நடைபெறும் மிகப் பெரிய திருவிழாவில் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் பலவிதமான வாகனங்களில் விசேட அலங்காரங்களுடன் உற்சவ மூர்த்தி ஏழு மலையான் அமர்ந்து திருவீதி உலா வருகின்றார்.
 
ஸ்ரீ வேங்கடேஸ்வரருக்கு நடத்தப்படுகின்ற இந்தத் திருவிழாவை, படைப்புக் கடவுளான பிரம்ம தேவனே முன்னின்று நடத்தி வந்ததால், இந்த உற்சவம் பிரம்மோற்சவம் என அழைக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்னர் வருடம் ஒரு முறை பிரம்மோற்சவம் நடைபெற்று வந்ததாகவம் அதன் பின்பாக புரட்டாசி மாதத்தில் ஒரு முறையும் மார்கழி மாதத்தில் ஒரு முறையும் இரண்டு தடவைகள் நடத்தப்பட்டதாகவும் ஆலயம் சம்பந்தப்பட்ட பழைமையான கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளன.திருமலையின் மூன்றாம் சுற்றுச் சுவரில் காணப்படும் ஒரு கல்வெட்டில் 1551 ம் ஆண்டில் ஒரே ஆண்டில் பதினெட்டு முறை பிரம்மோற்சவம் நடத்தப்பட்டதாகவும் தெரிவிகக்ப்பட்டுள்ளது.
 
திருமலையில் கொடியேற்றத்துடன் துவங்கப்படுகிற பிரம்மோற்சவம், ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதில், ஐந்தாம் நாள் திருவிழாவான மோகினி அவதார உற்சவம் மிகுந்த பிரசித்தி பெற்றது. அன்றிரவு உற்சவரான எம்பெருமான், கருடாழ்வார் மீது திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்து அருள்பாலிப்பார். திருவீதி உலாவின் போது கருட வாகனத்திற்கு வெண்பட்டுக் குடைகள் சமர்ப்பிக்கும் வழக்கம் இன்றளவும் இருந்து வருகின்றது.
 
- அபிதா மணாளன்