திருக்கோயில்கள் - பிள்ளையார்பட்டி
நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்று திருவிடந்தை நித்திய கல்யாணப் பெருமாள் ஆலயமாகும். “திரு” என்று அழைக்கப்படும் லட்சுமியைத் தன் இடப்பாகத்தில் கொண்டுள்ளதால், “திருஇடந்தை” என்று பெயர் ஏற்பட்டு பின்னர் அப்பெயர் “திருவிடந்தை” என்று அழைக்கப்பட்டது.
முன்பு ஒரு காலத்தில் “குனி” என்ற முனிவரும் அவருடைய மகளும் சொர்க்கம் செல்ல வேண்டித் தவமிருக்க “குனி” மட்டுமே சொர்க்கம் செல்ல முடிந்தது. நீ திருமணம் ஆகாதவள், அதனால் சொர்க்கம் செல்ல முடியாது என்று அங்கு வந்த நாரதர் கூறி, அருகிலிருந்த மற்ற முனிவர்களிடம் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டினார்.
காலவ ரிஷி என்ற முனிவர் அப்பெண்ணை மணம் புரிந்து, 360 பெண் குழந்தைகளைப் பெற்றார். பெண்களுக்கு உரிய வயது வந்ததும், தன் பெண்களை மணம் புரிந்து ஏற்றுக் கொள்ளுமாறு பெருமாளிடம் வேண்டி கடும் தவம் மேற்கொண்டார். ஒருநாள் பெருமாள் தெய்வீகத் தன்மையுடன் பிரம்மச்சாரியாக வந்து காலவ ரிஷியின் வேண்டுதலை ஏற்று தினமும் ஒரு பெண்ணாக 360 நாட்களில் அனைவரையும் மணம் புரிந்துகொண்டு, கடைசி நாளன்று அனைவரையும் ஒருவராக்கி தனது இடப்பாகத்தில் வைத்துக் கொண்டு காட்சி தந்தார்.
அதனால், இப்பெருமாள் நித்ய கல்யாணப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார் என்று கூறுகிறது கோவில் ஸ்தல புராணம்.
இவ்வாலய மூலவராக ஆதிவராகப் பெருமாளும் அவருக்குரிய தாயாராக அகிலவல்லி நாச்சியாரும், உற்சவராக நித்திய கல்யாணப் பெருமாளும் காட்சியளிக்கின்றனர். ஸ்தல விருட்சம் புன்னை மரம், மூலவர் ஆதிவராகப் பெருமாள் தம்பதி சமேதராக ஆறரை அடி உயரத்தில் காட்சி தருகிறார்.
வழிபடும் முறை:
திருமணத்தடை உள்ள ஆண்கள், பெண்கள் இவ்வாலயம் வந்து, ஒரு பூ மாலை வாங்கி, சுவாமிக்கு அர்ச்சனை செய்ய கொடுக்க வேண்டும். சுவாமி அர்ச்சனை செய்து முடித்ததும் அந்த மாலையைக் கொடுப்பார்கள். அதைக் கழுத்தில் போட்டுக் கொண்டு ஆலயத்தை 9 முறை வலம் வந்து, ஆலய கொடிக் கம்பம் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து வழிபட வேண்டும். பின்பு, அம்மாலையுடன் நேராக வீட்டிற்கு வந்து. பூஜை அறையில் அம்மாலையை வைத்து விட வேண்டும். திருமணம் முடிந்ததும் தம்பதியராக வந்து அந்த மாலையை ஆலயத்தில் இதற்கென்று ஆலய பின்புறம் உள்ள மரத்தில் சேர்த்து விட வேண்டும்.
இராகு, கேது தோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. இங்கு பெருமாள் தனது ஒரு திருவடியைப் பூமியிலும், மற்றொன்றை ஆதிசேஷன் மற்றும் அவனது மனைவியின் தலை மீதும் வைத்துக் கொண்டு அகிலவல்லித் தாயாரை தன் இடதுதொடையில் தாங்கிக் கொண்டு வராக மூர்த்தியாக அருள் புரிகிறார். தம்பதி சமேதராய் ஆதிசேஷன் பெருமாள் திருவடியைத் தாங்கி சேவை புரிவதால், இவ்வாலயப் பெருமாளை சேவிப்பவர்களுக்கு இராகு - கேது தோஷங்களும் நிவர்த்தியாகின்றன.
சிறப்பு அம்சங்கள்:
உற்சவர் நித்திய கல்யாணப் பெருமாள் மற்றும் கோமளவல்லித் தாயார் ஆகிய இருவரின் தாடையிலும் இயற்கையிலேயே திருஷ்டி பொட்டு அமைந்துள்ளதால், இவ்வாலயம் வந்து வழிபடுபவர்களின் திருஷ்டிகள் நீங்கும். ஆதிவராகப் பெருமாள், பலி என்ற அசுர மன்னனுக்கு வழங்கிய அருள் வாக்கின்படி இங்குள்ள வராக தீர்த்தத்தில் மாசி மாதம் நீராடி, பெருமாளை சேவித்தால் மோட்சம் கிடைக்கும்.
நடை திறப்பு - காலை 6 மணி முதல் பகல் 12 மணி, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி.
வழித்தடம்:
சென்னையிலிருந்து மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி செல்லும் சாலையில் 42 கி.மீ. தொலைவில் கோவளம் அருகில் அமைந்துள்ளது இவ்வாலயம்.
திருமணம் என்றதுமே நினைவுக்கு வரும் திருத்தலம் திருஇடவெந்தை. திரு-இட-எந்தை - திருஇடவெந்தை. அதாவது திருவாகிய மகாலக்ஷ்மியை இடது பக்கத்தில் அமர்த்திக் கொண்டிருக்கும் திருமால் வாசம் செய்யும் தலம். கமல மகளின் அம்சமாக, காலவ மகரிஷிக்குப் பிறந்த 360 பெண்களை, கமலநாபன் தினம் ஒருத்தியாக திருமணம் செய்து கொள்ளும் தலம் என்பதால் இவர் நித்ய கல்யாணப் பெருமாள், தலம், நித்யகல்யாணபுரி, வராக வடிவாக இங்கே காட்சி தரும் நித்ய கல்யாண மூர்த்தியை தரிசிப்போர் வரன் வரப் பெற்று, கல்யாணக் கோலம் காண்பர் என்பது ஐதீகம்.
- K. துரைராஜ்