அருள் தரும் மூன்று தேவியர்கள்!
நவராத்திரி விழாவான ஒன்பது நாட்களிலும் முப்பெரும் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, துர்காதேவி ஆகியோரை வழிபடுவதை வழக்கமாகும். ஒவ்வொரு தேவியருக்கும் மூன்று மூன்று நாட்கள் வழிபாட்டிற்கென பிரத்யேகமாக ஒதுக்கி விழா நடத்தப்படுகின்றது. இந்த முப்பெரும் தேவியருக்கும் முக்கியத்துவம் அளித்தே நவராத்திரி விழா எல்லா இடங்களிலும் கொண்டாடப்படுகின்றது. இந்த விழாவானது புரட்டாசி மாத வளர்பிறை பிரதம திதியிலிருந்து நவமி திதி வரையிலான ஒன்பது நாட்களும் தொடர்ந்து கொண்டாடப்படுகின்றன. முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், அதாவது பார்வதி தேவிக்கும், இடையில் மூன்று நாட்களுக்கு லட்சுமி தேவிக்கும், கடைசி மூன்று நாட்களுக்கு சரஸ்வதி தேவிக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
வீரத்தின் உறைவிடமாக பாவிக்கப்படுபவர் சிவப்பிரியை ஆகிய துர்க்கை. இவள் மகிஷன் என்ற அசுரனிடம் ஒன்பது நாட்கள் போராடி வெற்றி பெற்ற நாளையே விஜயதசமி என்று கொண்டாடுகின்றார்கள். துர்க்கையின் அம்சங்களாக இருப்பது, வனத்துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை, லவண துர்க்கை ஆகிய ஒன்பது துர்க்கைகளாகும்.
மலரின் மெல்லிய அழகும், அருள் பார்வையும் கொண்டு காட்சி தருபவள் லட்சுமி தேவி. செல்வத்தின் அதிபதியாக கருதப்படுபவரும் இவரே. விஷ்ணுபிரியை என அழைக்கப்படும் லட்சுமி தேவியை கிரியாசக்தியாக போற்றப்படுகின்றாள். லட்சுமி தேவி பாற்கடலில் அமுதத்துடன் தோன்றியவள் ஆவாள். அமுதமயமான இவள் பொன்னிற மேனியுடன், கமலாசனத்தில் வீற்றிருப்பவள். செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவளும் லட்சுமி தேவியாவாள். திருச்சானூரில் லட்சுமி தேவிக்கு தனி கோயில் அமைந்திருக்கிறது. ஆதி லட்சுமி, மகாலட்சுமி, தனலட்சுமி, தானியலட்சுமி, சந்தானலட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி, கஜலட்சுமி ஆகிய எட்டு பேரும் அஷ்டலட்சுமிகள் என அழைக்கப்படுகின்றார்கள். இவர்கள் அனைவரும் லட்சுமிதேவியின் அம்சங்களாவார்கள்.
அமைதியான பார்வையுடனும், வைரத்தின் அழகுடனும் பிரகாசிப்பவள் கல்வி தெய்வமான சரஸ்வதி ஆவாள். ஞான சக்தி வலம் வரும் சரஸ்வதி தேவி பிரம்மகிரியை ஆவாள். தஞ்சாவூர் மாவட்டம் கூத்தனூரில் சரஸ்வதிக்கு தனி கோயில் அமைந்துள்ளது. நவராத்திரி விழாவில் ஆறாவது ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கின்ற போது சரஸ்வதி வழிபாடு செய்வது உகந்ததாகும். இது சரஸ்வதி தேவியின் அவதார நாளாகும். சரஸ்வதி பூஜை திருவோணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகின்றது. பல குழந்தைகளுக்கு கல்வியின் ஆரம்பம் இந்த தினத்தில் தான் தொடங்கப்படுகின்றது. இந்த தினத்தில் தொடங்கும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும் என்பது ஐதீகம். வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி,, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, சினி சரஸ்வதி ஆகிய 8 பேரும் அஷ்ட சரஸ்வதிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.