ஆத்மாவிற்கு மரணமில்லை!

ஆத்மாவிற்கு மரணமில்லை!

“போர் புரியேன்!” என்று சொன்ன அர்ஜுனனுக்கு புன்முறுவல் பூத்தவாறு கண்ணன் கூறுகிறார்.

கண்ணன் - அர்ஜுனா! வீணாக நீ துயரப் படுகிறாய்! பேச்சிலே அறிவாளி போல் உயரப் பறக்கிறாய்! இறந்தவர் அல்லது இருப்பவருக்காக அறிஞர்கள் துயரப்பட மாட்டார்கள். நானும் நீயும்.. இந்த அரசர்களும் இதற்கு முன்பு இல்லாமல் இருந்ததில்லை. இனியும் நாம் இல்லாமலிருக்கப் போவதில்லை. 

உடலுக்கு இளமையும் மூப்பும் வருவது போல், ஆத்மாவுக்கு வேறு உடல் வருகிறது. கிழிந்த துணிகளைக் களைந்து விட்டு மனிதன் புதிய துணிகளை அணிவது போல், சிதைந்த உடம்பினை நீத்து விட்டு ஆத்மா புதிய உடம்பினுள் நுழைகிறது. எனவே இறப்பிற்காக உண்மையான வீரன் கலங்கமாட்டான். ஐம்புலன்களின் திருவிளையாடலில், குளிர் வெப்பம், இன்பம் துன்பம் ஆகியவை தோன்றுகின்றன. இவை வரும் போகும்... நிலைத்து நிற்பதில்லை. இந்த இன்ப துன்பங்களை எவன் சமமாகக் கருதுகிறானோ அந்த வீரனுக்கு மரணமே இல்லை!
 
இன்னும் சொல்வேன் குந்தியின் மைந்தா! இல்லாததற்கு இருப்புக் கிடையாது. இருப்பது இல்லாமல் போக முடியாது. உலகெல்லாம் ஊடாடி நிற்கும் ஆத்மா அழிவற்றது என்பதை அறிந்து கொள்! இதை அழிக்க எவராலும் முடியாது. ஆத்மாவால் தாங்கப்படும் ஸ்தூல வடிவங்களே அழகிய கூடியவை. இவன் கொல்வான்... இவன் கொலையுண்டான் என்று எண்ணும் இருவருமே அறியாதவர்கள். ஆத்மா கொல்வதும் இல்லை, கொலையுண்பதும் இல்லை! அது பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை! அது இல்லாதிருந்து பிறப்பதும் இல்லை! அது தேய்வதும் இல்லை, வளர்வதும் இல்லை! உடல் கொல்லப்படும் போதும் ஆத்மா கொல்லப்படுவதில்லை. ஆயுதங்கள் அதை அறுக்காது! நீ அதை எரிக்காது! நீர் அதை நனைக்காது! காற்று அதை உலர்ந்தாது! அது அறுக்க முடியாதது! எரிக்க முடியாதது! நனைக்க முடியாதது! உலர்த்த முடியாதது! அது நிரந்தரமானது! நிறைவானது! நிலையானது! உறுதியானது! முடிவற்றது! மாறுபடாதது! சிந்தனைக்கு எட்டாதது! பொறிகளுக்குத் தென்படாதது! இன்றும் என்றும் பதியது. ஆகவே அர்ஜுனா, இவ்வுண்மைகளை அறிந்து துவரத்தைக் கைவிடு!
 
- ச.மெய்யப்பன்